புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 37

கெத்சமனே தோட்டத்துக்கு அருகே கெத்சமனே ஆலயம் அமைந்துள்ளது. இயேசுவின் பாடுகளை விவரிக்கும் வகையில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது.
ஏரோது மன்னரால் கட்டப்பட்ட மிகவும் உயரமான இந்த சுவர் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் விவிலியத்தை படித்தபடி பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஏரோது மன்னரால் கட்டப்பட்ட மிகவும் உயரமான இந்த சுவர் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் விவிலியத்தை படித்தபடி பிரார்த்தனை செய்கிறார்கள்.

கெத்சமனே தேவாலயம்
கெத்சமனே தோட்டத்துக்கு அருகே கெத்சமனே ஆலயம் அமைந்துள்ளது. இயேசுவின் பாடுகளை விவரிக்கும் வகையில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் கட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் பணம் வழங்கியுள்ளதால் இது THE CHURCH OF ALL NATIONS என்றும் அழைக்கப்படுகிறது. 4-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பைசாண்டியர்கள் என அழைக்கப்பட்ட ரோம ஆட்சியாளர்கள் கி.பி. 318-இல் இந்த தேவாலயத்தை கட்டினர். கி.பி.614-இல் பெர்சியர்களால் இது அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டப்பட்ட இந்த ஆலயம், கி.பி. 746-இல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு சிலுவைப் போர் வீரர்கள் 12-ஆம் நூற்றாண்டில் இதே இடத்தில் தேவாலயம் கட்டினர். அது பராமரிப்பு இன்றி கிடந்ததால் 1919 முதல் 1924 வரை பல்வேறு நாட்டு மக்கள் இணைந்து இந்த ஆலயத்தை கட்டினர்.
ஒலிவ மலையில் உள்ள பிற இடங்கள்: 1925-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எபிரேய பல்கலைக்கழகம், GOLDEN GATE அல்லது GATE OF MERCY மேசியா திரும்ப வரும்போது வரும் வாசல், TOWER OF THE ASCENSION-இயேசு விண்ணுக்கு ஏறிச் சென்ற இடத்தில் உள்ள கோபுரம், மகதினேலேனா மரியாள் தேவாலயம் (CHURCH OF MARY MAGDALENE), இயேசு எருசலேமை பார்த்து கண்ணீர் வடித்த இடத்தில் கட்டப்பட்ட தேவாலயம்,
DOMINUS FLEVIT CHURCH (THE LORD WEPT), இயேசுவின் தாயார் இறந்த இடத்தில் கட்டப்பட்ட தேவாலயம் (THE TOMB OF THE VIRGIN MARY) ஆகியவை ஒலிவ மலையில் உள்ளன.
விவிலியத்தில் லுக்கா 19:37-42-இன் படி, இயேசு இந்த மலையில் இருந்து தான் எருசலேம் நகரை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். டோமினஸ் பிளவிட் நினைவாக தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. டோமினஸ் பிளவிட் என்றால் இயேசு அழுதார் என்று அர்த்தம்.
கெதரோன் ஆறு: ஒலிவமலையின் கீழ் பகுதியில் தான் கெதரான் என்ற சிற்றாறு ஓடுகிறது. இந்த ஆற்றுக்கு அப்புறத்தில் தான் கெத்சமனே தோட்டம் உள்ளது (யோவான் 18:1).
இந்த ஆற்றின் வழியாகத் தான் தாவீது மன்னர் தனது மகன் அப்சலோமுக்கு பயந்து ஓடினார் (2 சாமுவேல் 15:23).
அழுகையின் சுவர் (wailing wall)
மேற்கு சுவர் அல்லது அழுகையின் சுவர் என எருசலேம் நகரில் உள்ளது. எருசலேம் நகரில் ஏரோது மன்னர் கட்டின இரண்டாவது தேவாலயத்தின் மேல் பக்க சுவர்களில் ஒன்றாக இந்த மதில் சுவர் இருந்தது. கி.பி. 70- ஆல் நீரோ என்ற ரோம மன்னரால் எருசலேம் தேவாலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டபோது (மத்தேயு 24:1, 2), இந்த சுவர் மட்டும் தப்பியது. கி.மு. 20-ஆம் ஆண்டில் ஏரோது மன்னரால் கட்டப்பட்ட மிகவும் உயரமான இந்த சுவரை கட்டுவதற்கு 11 ஆண்டுகள் ஆனதாக யூசுபஸ் என்ற யூத வரலாற்று ஆய்வாளர் கூறுகிறார். தொடக்க காலத்தில் இந்த சுவர் அருகே மக்கள் நூற்றுக்கணக்கில் மட்டும் தான் நின்று பிரார்த்தனை செய்ய முடியும்.
ஆனால், 1967-இல் நடந்த 6 நாள் போரில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் எருசலேம் வந்த பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு பிரார்த்தனை செய்யும் வகையில் இந்த இடம் விரிவாக்கப்பட்டது. இந்த சுவரின் மதில் அருகே யூதர்கள் தினமும் அழுதுகொண்டே பிரார்த்தனை செய்வார்கள். மேஜை, நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்கில் விவிலியத்தை படித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஆண்கள், பெண்களுக்கு என தனியாக இடம் பிரித்துவைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் இங்கு வரும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் குல்லாவை தலையில் அணிந்தே உள்ளே செல்ல முடியும். பலத்த பரிசோதனைக்கு பின்னர் உள்ளே செல்ல முடியும்.
இந்த சுவரில் பல இடங்களில் சிறு சிறு துளைகள் உள்ளன. இங்கு வரும் யூதர்கள் மற்றும் புனித பயணிகள் தங்களது பிரார்த்தனை குறிப்புகளை (பொருத்தனைகள்) காகிதத்தில் எழுதி இந்த சுவரில் சொருகி வைத்துவிடுவது வழக்கம். அப்படி செய்யும்போது எழுதி வைக்கும் பொருத்தனைகளை கடவுள் நிறைவேற்றிவிடுவார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இயேசு எருசலேமையும், யூதர்களையும் உயிரை போல கருதினார். ஆனால், யூதர்கள் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவை அவமானப்படுத்தி சிலுவையில் அறைந்து கொன்றார்கள். 
எருசலேம் தேவாலயத்துக்கும், எருசலேம் நகரத்துக்கும் நடைபெறபோகும் சம்பவங்களை இயேசு தீர்க்கத்தரினமாக கூறியதாவது, இந்த நாள்களிலும் உன் சமானதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் உனக்கு நலமாய் இருக்கும் என்றார். இப்படி சொல்லிவிட்டு கண்ணீர் விட்டு அழுதார் (லூக்கா 19:41-44). அதனால், தான் இன்றும் யூதர்கள் கண்ணீர் விட்டு அழும் நிலை இருந்து வருவதாக விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்த பின்னர், கி.பி. 70-ஆம் ஆண்டில் எருசலேம் நகரம் அழிக்கப்பட்டு அதில் இருந்த தேவாலயமும் அழிக்கப்பட்டது. கல்லின் மேல் ஒரு கல் இராதபடிக்கு இந்த தேவாலயம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த எருசலேமில் ஆயிரக்கணக்கான யூதர்கள் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டனர். 
- ஜெபலின் ஜான் 
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com