பொருநை போற்றுதும்! 70

தண்ணீர் நிறைந்ததால், இது தருவை! கோபாலசமுத்திரத்திற்குக் கிழக்காக, தருவை மற்றும் முன்னீர்பள்ளம் ஆகிய சிற்றூர்கள்.
பொருநை போற்றுதும்! 70

தண்ணீர் நிறைந்ததால், இது தருவை! கோபாலசமுத்திரத்திற்குக் கிழக்காக, தருவை மற்றும் முன்னீர்பள்ளம் ஆகிய சிற்றூர்கள். "தருவை' என்னும் பெயர் நம்முடைய சிந்தனைக்குரியது. "பெரிய ஏரி' என்பதே இப்பெயரின் பொருள். நீர்நிலைகள் நிறைந்த ஊர்களைத் தருவை என்னும் விகுதி சேர்த்து நம்முடைய முன்னோர் அழைத்துள்ளனர். புத்தன் தருவை, வைரவன் தருவை, தருவைக்குளம் போன்ற பெயர்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஓமாநல்லூர், திடியூர், செங்குளம், பேரின்பபுரம் போன்ற பகுதிகளிலும் அவற்றுக்குத் தெற்காகவும் ஆங்காங்கே ஏரிகளும் குளங்களும் நிறைந்திருந்தனவாம். இப்போதும்கூட, பனையங்குளம், மருதகுளம், சிங்கிகுளம் என்னும் ஊர்ப்பெயர்கள் உள்ளன. சிறிய நீர்நிலைகளாக இருந்தால், அவற்றைக் குளம் என்றழைக்கலாம். அதுவே பெரியதாக இருந்தால், ஏரி; அந்த ஏரியும் அளவில் மிகப் பெரியதாக இருந்தால், "தருவை' ஆகும்.
 கோபாலசமுத்திரம் வரை, கிழக்கு நோக்கி ஓடிவருகிற பொருநையாள், தருவைப் பகுதியில் வடக்கு நோக்கித் திரும்புவதற்குத் தலைப்படுகிறாள். நதியொன்றின் போக்கு திசை திரும்புகிற இடங்களில், ஆங்காங்கே நீர்நிலைகள் தோன்றும். இப்படித்தான், இந்த ஊர்ப்பகுதியிலும் பெரிய ஏரியாக நீர் தேங்கியிருக்கவேண்டும். இதுவே, தருவை என்னும் பெயருக்குக் காரணமானது (நாங்குநேரி, சாத்தான்குளம் போன்ற இடங்களில், நீரை அவ்வளவாக ஈர்த்து வைத்துக்கொள்ளாத செம்மணல் குன்றுகள் உண்டு; இவற்றுக்குத் தேரிகள் என்று பெயர்; தேரி மணல் குன்றுகளில் இறங்கும் நீர், நிலத்தடி நீரோடு சேர்ந்து, ஆங்காங்கே ஏரிகள் ஆகும்; இவற்றுக்கும் தருவைகள் என்றே பெயர்).
 வரதராஜ பெருமாள், உய்யக் கொண்ட அம்மன், முப்பிடாதி அம்மன் ஆகியோருக்கான கோயில்கள் தருவையில் பிரசித்தம். அழகான இந்த கிராமத்தில், பழைமையான சிவன் கோயிலும் உள்ளது. வாழ வல்லப பாண்டீச்வரம் என்றே இக்கோயிலுக்குப் பெயர்.
 அதிசயப் பாண்டிய தேவன் என்றும் கலியுக ராமன் என்றும் போற்றப்பட்ட மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னரின் காலத்தில் (1220-1230 -களில்) இக்கோயில் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது. 11 மற்றும் 12 -ஆம் நூற்றாண்டுகளில் மிகுவீச்சோடு விளங்கிய சோழப் பேரரசின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு, பாண்டியப் பேரரசை மீண்டும் தழைக்கச் செய்த பெருமை சுந்தரபாண்டிய மன்னரையே சேரும். இவருடைய காலத்தில், தாமிரவருணிக் கரையில் பற்பல கிராமக் கோயில்கள் கட்டுவிக்கப்பெற்றுள்ளன.
 வாழ வல்லப பாண்டீச்வரராக இங்கே எழுந்தருளியிருக்கும் சிவனார், சுயம்பு லிங்க மூர்த்தி என்கிறார்கள். பிற்காலப் பாண்டியர்களில், ஸ்ரீ வல்லபன் என்று பட்டம் சூட்டிக் கொள்கிற வழக்கம் இருந்துள்ளது என்பதை நாம் அறிவோம். தங்களுக்கு அருள் வழங்கித் தங்களை வாழச் செய்பவர் பரமனாரான சிவபெருமானே என்னும் சிந்தனையில், சுவாமிக்கும் "வாழ வல்லபர்' என்னும் திருநாமத்தைச் சூட்டியிருக்கவேண்டும். "வல்லபம்' என்றால் திறமை அல்லது ஆற்றல். வாழ்க்கைக்குத் திறமையையும் ஆற்றலையும் வழங்குபவர் பரம்பொருளே அல்லவா!
 அருள்மிகு அகிலாண்டேச்வரி உடனாய அருள்மிகு வாழ வல்லப பாண்டீச்வரர் திருக்கோயிலில், மயிலேறிய முருகப்பெருமானும் எழுந்தருளியிருக்கிறார். வடிவேலனாக, சேவற்கொடியோனாகக் காட்சி தருகிற இந்த மயிலேறும் பெருமான், பெரிய வரப்பிரசாதி. கல்யாண முருகன் என்றும் கல்யாணக் கார்த்திகேயன் என்றும் இவருக்குத் திருநாமங்கள். திருமணத் தடை உள்ளவர்கள் இவரிடம் நேர்ந்துகொண்டால், உடனடியாகத் தடையை நீக்கிப் பலன் தருவார் என்பது நம்பிக்கை. இவ்வாறு பிரார்த்தனை செய்துகொள்வதற்காகவும், திருமணம் நிறைவேறியபின்னர், நேர்த்தியைச் செலுத்துவதற்காகவும் சுற்று வட்டார ஊர்கள் பலவற்றிலிருந்து பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
 இந்தத் தலத்தில், ஏராளமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிரந்த எழுத்துகளிலும் வட்டெழுத்துகளிலும் அமைந்துள்ள இவற்றிலிருந்து, இந்த ஊருக்குக் கூபகராய நல்லூர் என்பதே பழம்பெயர் என்று தெரிகிறது. சுந்தரபாண்டிய மன்னருக்குக் கூபகராயன் என்றொரு படைத் தளபதி இருந்ததாகவும், அவனுக்கு இவ்வூரை மன்னர் தானம் கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். "கூபகம்' என்னும் சொல்லுக்குக் "குழிவு' என்பது பொதுப்பொருள். இருப்பினும், கொல்லம் என்கிற ஊரை மையமாகக் கொண்டிருந்த சேர நாட்டு வட்டாரத்திற்கும் கூபகம் என்னும் பெயர் இருந்தது. கூபகராயன் என்பவன் இந்த வட்டாரத்தின் தலைவன் போலும். மேனாள் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பூர்வீகம், தருவை என்பது கூடுதல் தகவல்.
 (தொடரும்...)
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com