Enable Javscript for better performance
வாயு மைந்தனுக்கு வானளாவிய வடை மாலை!- Dinamani

சுடச்சுட

  

  வாயு மைந்தனுக்கு வானளாவிய வடை மாலை!

  Published on : 13th December 2019 11:23 AM  |   அ+அ அ-   |  

  vm1

  தர்மமிகு சென்னையின் கிழக்கு தாம்பரத்தில் அகஸ்தியர் தெருவில் உள்ள ஸ்ரீதிக்ஷத்ர சகடபுர - ஸ்ரீ வித்யா பீடத்தின் கிளைமடமும், அதே வளாகத்தில் தனிக்கோயிலில் ஸ்ரீ வித்யாராஜராஜேஸ்வரி சந்நிதியும், இப்பீடத்தின் 32-ஆவது ஆசார்ய புருஷர் ஸ்ரீராமச்சந்திரானந்த தீர்த்த மகாசுவாமிகளால் 1962-ஆம் வருடம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
   ஒரு சமயம், இங்கு விஜயம் செய்த காஞ்சி மகாசுவாமிகள், "அம்பிகை தங்கமாய் ஜொலிக்கின்றாள்' என்று திருவாக்கு அருளினார்கள். பின், தற்போது 33-ஆவது பீடாதிபதி ஸ்ரீவித்யாபிநவ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகளால் 2002 -ஆம் ஆண்டு கற்கோயிலாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆலயத்திற்கு மேலும் சாந்நித்யம் சேர்க்கும் விதமாக அவர் அம்பிகையின் இடது புறம் ஒன்பது அடி உயரமுள்ள ஸ்ரீ அஷ்டபந்தன ஸ்ரீ ராமபக்தாஞ்சநேய சுவாமியை பிரதிஷ்டை செய்து 2019, ஜூலை மாதம் மகாகும்பாபிஷேகமும், மகா மங்கல திரவிய அபிஷேகமும் செய்து அருளினார்கள். இந்த ஆலயத்தில் கன்னட தேசத்தின் சம்பிரதாயப்படி பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
   தற்போது கிழக்கு தாம்பரம் கிளை ஸ்ரீ மடத்தில் முகாமிட்டிருக்கும் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ ஆசார்ய மகாசுவாமிகளின் ஸ்வர்ண ஜெயந்தி நிறைவு ஆவதை முன்னிட்டு, இத்தருணத்தில் மூன்று நாள்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதன்படி, டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை ஸ்ரீராம ஸ்வர்ண மணி பாதுகைகளுக்கு 500 பக்தர்கள் இணைந்து நடத்துகின்ற சிறப்பு பூஜையும், டிசம்பர் 21, ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு பலதரப்பட்ட விசேஷ திரவியங்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகளும், டிசம்பர் 22, ஸ்ரீ ஆசார்ய மகாசுவாமிகளுக்கு குருவந்தனமும் அன்று மாலை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றும் புனித வைபவமும் நடைபெறுகின்றது. இத்தருணத்தில் வடை மாலை சாற்றுவதின் தாத்பரியத்தையும், பலன்களையும் பற்றி சுவாமிகள் அருளியுள்ளதை தெரிந்து கொள்வோம்.
   "வடையில் சேர்க்கப்பெறும் அரிசியானது சந்திரனின் தானியமாகும். உளுந்து ராகுவின் தானியமாகும். நல்லெண்ணெய் (எள் மூலம் தயாரிக்கப்படுவதால்) சனீஸ்வரபகவானுக்கு உரியதாகும். எனவே வடை மாலை சாற்றுவதின் மூலம் சந்திரனின் அருளால் மனதைத் தூய்மையாக்கி உற்சாகம் பொங்க வைத்துக் கொள்ளவும், ராகுவின் அருளால் ஆரோக்யம், எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுதல் மற்றும் நோய் நிவாரணமும், சனீஸ்வரபகவானின் அருளால் நிலைத்த வாழ்க்கை நீண்ட ஆயுள் ஆகியனவும் பெற இயலும். மேலும் இத்தகைய வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிகளின் திவ்ய சரீரத்தில் சாற்றுவதன் மூலம் அவர் திருமேனியின் தூண்டுதலால் உடன், மனம் தொடர்பான நன்மைகளும் ஏற்படுகின்றது. மேலும் உணவாகப் பார்க்கும் போது அரிசியில் இனிப்புச்சத்து (கார்போ ஹைட்ரேட்டும்), உளுந்தில் புரதச்சத்தும், எண்ணெய் மூலமாக கொழுப்புச் சத்தும், மிளகினால் சளித்தொல்லை நீக்கமும், தொண்டைத் தொற்றுக்கு மருந்தாகவும், செரிமானத்திற்கு உதவும் விதமாகவும் மருத்துவ குணம் கொண்டதாகவும் அமைகின்றது' - என்பதே அவரது திருவாக்கு.
   எனவே சுவாமிகள் அருளியபடி, ஆஞ்சநேய மூர்த்திக்கு வடை மாலையைச் சாற்றி, வழிபட்ட, பின்னர், அதனை பிரசாதமாக நாம் உண்ணுகின்ற பொழுது, உடல், மனம் நலம் பேணுவதற்கு உதவியாகவும், சந்திர, ராகு, சனி பகவான்களால் கிரகதோஷ நிவர்த்தியும் கிடைக்கப் பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. நமக்கு வாய்க்கப்பெற்ற பெரும் பேறாகக் கருதி வாயு மைந்தனுக்கு நடைபெறும் லட்சம் வடைமாலை சாற்றும் வைபவத்தில் பங்கேற்கலாம்.
   தொடர்புக்கு: 94440 38024 / 98401 60315.
   - இலக்கியமேகம் ஸ்ரீநிவாஸன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai