சுடச்சுட

  
  vm5

   

  இந்த ஸ்ரீ விளம்பி ஆண்டு மாசி மாதம் 1- ஆம் தேதி (13.02.2019) அன்று நண்பகல் 13.30 மணி (ஐஎஸ்டி) அளவில் வாக்கிய பஞ்சாங்கப்படி, ராகு- கேது பகவான்கள் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

  வாசன் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, மாசி 23 (07.03.2019) அன்று விடியற்காலை 5.30 மணி (ஐஎஸ்டி) அளவில் ராகு- கேது பகவான்களின் பெயர்ச்சி உண்டாகிறது.

  மற்றொரு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, பங்குனி மாதம் 9 -ஆம் தேதி (23.03.2019) மாலை 4.14 மணி அளவில் ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சி ஆவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, ராகு-கேது பகவான்கள் 17.09.2020 வரை சஞ்சரித்துவிட்டு, 18.09.2020 அன்று இரவு 8.45 மணி (ஐஎஸ்டி) அளவில் ரிஷப, விருச்சிக ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

  இந்த ஆண்டு, 05.11.2019 அன்று குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அடுத்த ஆண்டு 24.01.2020 அன்று காலை 9.55 மணி (ஐஎஸ்டி) அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

  இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்களை இரண்டு பாகங்களாகப் பிரித்து அதாவது, 24.01.2020 வரை ஒரு பாகமாகவும்; 18.09.2020 வரை இரண்டாவது பாகமாகவும் பிரித்து சனி, குரு பகவான்களின் பெயர்ச்சிகளையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

  நமது வாசகர்கள் அனைவருக்கும் இந்த ராகு- கேது பகவான்களின் ஆசிகள் கிடைக்க தினமணியின் மூலமாகப் பிரார்த்திக்கிறோம்.

  சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி பகவான்களாகிய ஏழு கிரகங்களும் வலமிருந்து இடமாகச் சுற்றி வருகிறார்கள். இதற்கு பிரதட்சிணம் என்று பெயர். அதாவது, கடிகாரம் எப்படி சுற்றுகிறதோ அதுபோன்றுதான் என்று பொருள். அதேநேரம், உருவம், பருமன் ஏதுமின்றி நிழல் வடிவில் இந்த ராசி வீடுகளில் ராகு- கேது பகவான்கள் இடமிருந்து வலமாக அதாவது அப்பிரதட்சிணமாக வலம் வருகின்றன. நவநாயகர்களான சூரியபகவான் முதல் சனிபகவான் வரையில் உள்ள ஏழு கிரகங்களையும் எதிர்த்து வலம் வருகின்ற ராகு- கேது பகவான்களின் செயல்திறன் அதிகம். சுருக்கமாகச் சொன்னால் மற்ற ஏழு கிரகங்களின் தசைகளில் நாம் செய்யக் கூடிய குற்றங்குறைகளை (பாரபட்சத்தன்மை) எல்லாம் ராகு- கேது பகவான்கள் துப்பறிந்து குறிப்பெடுத்துக் கொண்டு, அவைகள் தமக்கு அதிகாரம் வரும்போது மற்ற கிரகங்களால் சலுகைப் பெற்ற அந்த ஜாதகரை வாட்டி வதைத்து விடுகிறார்கள் என்பது சாஸ்திர விதி. இது அந்த கிரகங்களைப் பழி வாங்குவது போன்றது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

  ராகு-கேது பகவான்கள் ஒரு ராசியைக் கடந்து செல்ல ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) ஆகின்றன. இப்படிப்பட்ட சலனத்தில் ஒரு நட்சத்திர பாதத்தைக் கடந்து செல்ல 2 மாதங்கள் பிடிக்கின்றன. இப்படி 9 பாதங்களைக் கடக்க 18 மாதங்கள் ஆகின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

  மற்ற எல்லா கிரகங்களும் ஒன்றோடு ஒன்று சேர முடியும். ஆனால் ராகு- கேது பகவான்கள் எக்காலத்திலும் 180 பாகை இடைவெளியில் மட்டுமே சஞ்சரிப்பார்கள். இவர்கள் இருவரும் எக்காலத்திலும் ஒன்று சேர முடியாது.
   ராகு- கேது பகவான்களுக்கு என்று சொந்த வீடு (ஆட்சி வீடு) கிடையாது. எந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்களோ அந்த இல்லத்து அதிபதிகள் போன்று அவர்கள் பலன் தருவார்கள் என்பதும் சாஸ்திர விதி. சுபர் வீடுகளில் சஞ்சரிக்கும்பொழுது சுபப் பலனும் அசுபர் வீடுகளில் சஞ்சரிக்கும்பொழுது அசுபப்பலனும் தருவார்கள் என்பதும் சாஸ்திர விதி. இதை ஒரு பொழுதும் மறக்கக் கூடாது.

  பொதுவாக, ராகு-கேது பகவான்கள் எந்தெந்த இடங்களில் நன்மையை செய்ய முடியும் என்றால், சந்திரபகவானுக்காவது (ராசி) அல்லது லக்னத்திற்காவது 3,6,11 -இல் இருந்தால் பிரபல யோகத்தைச் செய்வார்கள். அல்லது ராகு - கேது அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து மற்ற மூன்று கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் அவர்கள் பெருமைப்படத்தக்க ராஜயோக வாழ்க்கையை வாழக்கூடியவர்களாவார்கள் என்பது சாஸ்திர விதி. இது பர்வத யோகம் என்று சொல்லப்படுகிறது.

  இப்படியாக, ஒரு ஜாதகரின் ஜெனன காலத்தில் அமர்ந்திருந்தால் ராகு- கேது பகவான்களின் தசையில் பிற்பகுதியில் லட்சாதிபதிகளாக்கி விடுவார்கள். அதோடு ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ ராகு-கேது பகவான்கள் பத்தாமிடத்தில் இருப்பதையும் ஜோதிட சாஸ்திரம் சிறப்பாக கூறுகிறது. "பத்தில் ஒரு பாபி' சிறப்பென்பதும் ஜோதிட வழக்காகும். அதோடு மறைவு ஸ்தானங்களில் ராகு-கேது பகவான்கள் அமர்ந்திருந்தாலும் நன்மை அளிக்கும் என்கிற வழக்கிற்கு ஏற்ப, 8 -ஆம் இட ராகு- கேது பகவான்களும் நன்மை செய்கிறார்கள். எட்டாம் வீட்டைப் " புதையல் வீடு’ என்பார்கள்! இந்த புதையல் வீட்டில் சர்ப்பக் கிரகங்கள் இருந்தால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.
   ராகுபகவான் நின்ற ஸ்தானாதிபதி எந்த கிரகமாக இருந்தாலும் சரி, அது சந்திர சூரியர்களுக்கு ஆகாது. அதேபோல் சூரிய சந்திரர்கள் நின்ற ஸ்தானாதிபதி ராகுபகவானுக்கு ஆகாது. இதன்படித்தான் ஒவ்வொருவருக்கும் பலாபலன்கள் தப்பாது நடைபெற்று வருகின்றன. இதற்கான பாடல்:

   "அரவிருந்த வீட்டுக்காரன் அம்புலி இரவிக்கு ஆகாது. இரவி இந்து இருந்த வீட்டாரிருவரும் அரவுக்கு ஆகார்'

  (அம்புலி, இந்து சந்திரபகவானைக் குறிக்கும்; இரவி சூரியபகவானைக் குறிக்கும்)

  ராகு- கேது பகவான்கள் நல்ல இடத்தில் சஞ்சரித்து குருபகவானின் பார்வை சேர்க்கை பெற்று விட்டால் "பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே அது போன்று அமைந்துவிடும். மற்ற இடங்களில் ராகு- கேது பகவான்கள் அமர்ந்து குருபகவானின் பார்வை கிடைத்தால், ராகு- கேது பகவான்களின் அசுபத்தன்மை மறைந்து சுப பலன்கள் நடக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

  தற்சமயம், ஏற்பட்டுள்ள ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சியால் குருபகவானின் பார்வை, ராகு- கேது பகவான்களுக்குக் கிடைக்கவில்லை. அதேநேரம் இந்த ஆண்டு 05.11.2019 அன்று குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்திலிருந்து 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் குருபகவான் கேதுபகவானுடன் இணைந்து ராகுபகவானைப் பார்வை செய்கிறார்.

  அதேபோல் குருபகவான் அதிசார கதியில் 29.03.2019 அன்று விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இங்கு குருபகவான் 24 நாள்கள் சஞ்சரித்து விட்டு 23.04.2019 அன்று மறுபடியும் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த 24 நாள்களும் கேதுபகவானுடன் குருபகவான் இணைந்து ராகுபகவானைப் பார்வை செய்கிறார். இந்த காலகட்டத்திலும் சற்றுக் கூடுதலான பலன்கள் கிடைக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் மறுமலர்ச்சி உண்டாகும். நாடு நலம் பெறுவது போன்று தனி மனிதர்களுடைய நிலைமையும் நல்ல சீர்த்திருத்தப் பாதையில் திரும்பிச் செல்லக் கூடியதாகவே இருக்கும். அதோடு குரு, கேது பகவான்களின் இணைவு கோடீஸ்வர யோகமாகும்.

  இந்த ராகு- கேது பெயர்ச்சி காலத்தில் மகர ராசி அல்லது மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகுபகவான் ஆறிலும் கேதுபகவான் பன்னிரண்டிலும் அமர்ந்திருப்பது விசேடமாகும். மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகுபகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல பலன்களே இனி நடக்கத் தொடங்கும். சிம்ம ராசி, அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராகு பகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போவதால் நல்ல பலன்களே நடைபெறும். இதுபோலவே, துலா லக்னம் அல்லது துலா ராசிக்காரர்களுக்கு கேதுபகவான் மூன்றாமிடத்திலும் கடக லக்னம் அல்லது கடக ராசிக்காரர்களுக்கு கேதுபகவான் ஆறாமிடத்திலும் கும்ப ராசி அல்லது கும்ப லக்னக்காரர்களுக்கு கேதுபகவான் பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் நல்ல பலன்களே உண்டாகும்.

  திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் ராகுபகவானின் நட்சத்திரங்களாகும். இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகுபகவான் பிரபல யோகத்தைச் செய்வார். அசுவினி, மகம், மூலம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் கேதுபகவானின் நட்சத்திரங்களாகும். இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேதுபகவான் நன்மையை செய்வார்.

  ஜோதிட சாஸ்திர ரீதியில் பார்க்கப் போனால், சூரியபகவான் வலது கண், சந்திரபகவான் இடது கண். செவ்வாய், புதன், சுக்கிரன், சனி பகவான்கள் கர்ம இந்திரியங்கள் மற்றும் ஐம்புலன்களாகும். ராகு- கேது பகவான்கள் தசை நரம்புகளாகும். அந்த ஞானத்திற்குரியவன் ஞானகாரகராகிய கேதுபகவானேயாவார். ராகுபகவானை யோக, போக, பயண காரகர் என்று அழைப்பார்கள். ராகுபகவான் சனிபகவான் போன்றும்; கேதுபகவான் செவ்வாய்பகவான் போன்றும் பலனளிப்பார்கள் என்பது ஜோதிட வழக்கு. ராகுபகவானின் தசை 18 வருடங்கள் (சனிபகவானின் தசை 19 வருடங்கள்) கேது மற்றும் செவ்வாய்பகவான்களின் தசை முறையே 7 வருடங்கள். அவர்களின் குணாதிசயங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும்.

  பொதுவாக, ராகுபகவானுக்கு போகம், யோகம் என்ற இரண்டு முக்கிய காரகத்துவம் இருந்த போதிலும்; ஞானம், பிரதாபம், செப்பிடு வித்தை, களவு, அடிமைத் தொழில், பரதேச வாசம், விகட விநோதம், கருநாகம் தீண்டல், ஜலகண்டம், சிறை தண்டனை போன்ற கெட்ட பலன்களும் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பலமிழந்த ராகுபகவான் பெண்களால் அவமானத்தையும் அதன்மூலம் பொருளிழப்பையும் உண்டாக்குகிறார் என்பதும் அனுபவ உண்மை. ராகுபகவானுக்கு அதிதேவதை துர்க்காதேவி; கேதுபகவானுக்கு விநாயகர் ஆகும். ராகு- கேது பகவான்களின் தசையின் முற்பகுதி நல்ல பலன்களைச் செய்வதில்லை. பிற்பகுதியில் நல்ல பலன்களைச் செய்கின்றனர். இதற்காகத்தான் " பெருஞ்சனி பாம்பு இரண்டும் பிற்பலனைச் செய்வர், பெரும் பலனைச் செய்வர்’ என்று கூறப்படுகிறது.

  சனிபகவான் எப்படி சந்திரபகவானுக்கு முன்பு, பின்பும் வரும்போது (ஏழரை நாட்டு சனிக் காலம்) எப்படி கஷ்டங்களைத் தருகிறாரோ அதேபோன்று ராகுபகவான் வரும் காலங்களிலும் கடின பலன்களே நடைபெறும் என்று பழைய கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த காலம் அஷ்டமாதிபத்யத்திற்கு என்னென்ன தோஷங்கள் உண்டோ அத்தனையும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே ராகுபகவான் குருபகவானின் பார்வையைப் பெற்றிருந்தாலும் அல்லது குருபகவானுடன் கூடியிருந்தாலும் தோஷங்கள் பாதிப்பதில்லை. அதாவது ராகுபகவான் சந்திரபகவானுக்கு பன்னிரண்டில் தனித்து நின்றால்தான் அசுப பலன் நடைபெறும் என்றும்; வேறு கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் கெடுபலன்கள் நடைபெறுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

  சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

  தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai