Enable Javscript for better performance
ராகு - கேது தோஷம் போக்கும் தங்கமேடு!- Dinamani

சுடச்சுட

  

  ராகு - கேது தோஷம் போக்கும் தங்கமேடு!

  Published on : 01st February 2019 09:21 AM  |   அ+அ அ-   |    |  

  THAMIKALAI

  விஞ்ஞானத்தை விஞ்சிய மெய்ஞ்ஞானம் நிறைந்த அற்புதத் தலங்களில் தங்கமேடு தம்பிக்கலை ஐயன் கோயிலும் ஒன்று. இன்றும் விஷப் பூச்சிகள், ஜந்துக்கள் தீண்டியவர்களை சந்நிதிமுன் கொண்டு வந்து படுக்க வைத்துவிட்டு தலைமாட்டில் வேப்பந்தழையை வைத்துவிட்டு இருபது நிமிஷம் கோயிலை சார்த்திக் கொண்டு அனைவரும் வெளியேறி விடுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிறிது நேரத்தில் தாமாகவே எழுந்து எதுவும் நடவாதது போல் வெளியே வருகிறார்கள். மருத்துவ வசதிகளே இல்லாத காலத்தில் ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயில் தம்பிக்கலை ஐயன் என்றழைக்கப்படும் மகாசித்து கைவரப்பட்ட புனிதரால் பிரசித்தமான திருத்தலம் ஆகும்.
   ஈரோடு, காஞ்சி கோயில் பகுதியில் வசித்தவர் தம்பி கவுண்டர் என்ற விவசாயி. தினமும் அவருடைய சகோதரர் நல்லய்யன் என்பவருடன் மாடுகளை மேய்ப்பதற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் போவது வழக்கம் மேயப்போன ஒரு பசுவின் மடியில் ஒருநாள் பால் இல்லை என்றதால் தம்பியைக் கண்காணிக்கச் சொன்னார். மறுநாள், தம்பி நல்லையன் அவ்வனத்தில் ஒரு புற்றிலிருந்த நாகம் ஒன்று வெளிவந்து பசுவின் காம்பில் வாய் வைத்து பாலை உறிஞ்சிக் குடித்ததைச் சொன்னார். அதனை நம்பாத அவரது அண்ணன், அவரை அடித்தார். ஊரார் மறுநாள் உண்மையறியச் சென்றவர்கள் நல்லையன் சொன்னதை உறுதி செய்தனர்.
   இரவு வருந்தியபடியே தூங்கிவிட்ட தம்பி கவுண்டரின் கனவில் சர்ப்பம் ஒன்று தோன்றி பசு பால் தந்த இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுவோர்களின் ராகு-கேது, சர்ப்ப தோஷங்கள் முற்றிலும் நீக்குவதோடு எதிர்கால சந்ததியை பாதுகாப்பேன் எனக்கூறியது. தம்பி கவுண்டர் அப்போதே அந்த புற்றருகில் சென்று அமர்ந்து தியானம் செய்யத் துவங்கினார்.
   அந்த இடம் முன்பு நாகவனமாக இருந்தது. அம்பிகை ஸ்ரீ நாகேஸ்வரியாக அவதரித்து இங்கு ஈசனை வழிபட்டாள். அங்கு சிவலிங்கத்தின் மீது நாகேஸ்வரி எழுந்தருளி தம்பி! நீ, கலியுகத்தில் இவ்விடத்தில் இருந்து மக்களுக்கு ரோகம் தவிர்த்து நலம் தரும் செயலைச் செய்ய வேண்டுமெனவும் அருளினாள். தெய்வக் கட்டளையை தொண்டாக நினைத்து அந்த இடத்திலிருந்து நகரவும் மறுத்து வருவோருக்கு சித்த வைத்தியம் மற்றும் அருளிச்செயல்கள் மூலம் நலன்களை தொண்டாகச் செய்தார். அவ்விடத்தில் எழுப்பப்பட்ட நாகேஸ்வரியம்மன் கோயிலில் இறையருள் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
   அவரின் அற்புதங்களைக் கேள்விப்பட்டதொரு மலையாள மந்திரவாதி கிண்டல் செய்தான். அவனுடலில் ஏற்பட்ட குறைபாட்டை ஸ்பரிசதீட்சை மூலம் குணப்படுத்தினார்.
   ஒரிஸ்ஸா வணிகர் ஒருவரின் பேச முடியாத மகளை அங்கு அழைத்து வந்து அவள் நாக்கில் மூலிகைச்சாறைத் தடவி ஜபம் செய்ய, அந்தப்பெண் பேசத் துவங்கினாள். அதனால் அந்நாட்டு விஜய கர்ணா என்ற மன்னன் தம்பிக் கவுண்டரின் சீடரானார். அவந்தியில் இருந்து வந்த கண் பார்வையற்ற ஒரு பிராமணனுக்கு கண் பார்வை தந்தார்.
   இறையருளால் வந்தவர் அனைவரும் குணமானார்கள். அவரது புகழ் பரவியது. தம்பிக்கலை அய்யன் பல சித்தர் கலைகளைக் கற்று தங்கமேடு எனும் இடத்தில் சிவனின் திருமணக்கோல அன்னபூரணி உடனமர் நீலகண்டேஸ்வரரை கோயிலில் நிறுவி சித்தராக வாழ்ந்தார்.
   மருத்துவம், ஆன்மிகம் போன்றவற்றில் தெளிவான அறிவு, நோய் தீர்க்கும் திறன் போன்றவற்றில் வல்லவரான இவர் சித்தக் கலைகளில் ஒன்றான "தம்பணக்கலையில்' வல்லவராக விளங்கினார். மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்களை ஐயன் என அழைப்பது பழக்கம்.
   பல காலம் மக்கள் பணி செய்து தெய்வமான தம்பிக் கவுண்டரை தம்பிகலை ஐயன் என அழைத்து ஆலயம் அமைத்தனர் தம்பிக்கலை அய்யன் திருக்கோயில் சித்தர் பீடமாக மாறியது.
   ஐந்துநிலை ராஜ கோபுரம் வித்தியாசமான இரட்டை விமான அமைப்புடைய வடக்கு பார்த்த ஐயனின் சந்நிதியில் கருவறையில் அருவுருவமாகத் தம்பிக்கலை ஐயன் பூசித்த நாகமும் ஐயனும் பிரதிஷ்டையாகியுள்ளனர்.
   அருள்தரும் நாகேஸ்வரியம்மன், விநாயகர், சுப்பிரமணியர், நல்லையன் பாலமுருகன், சங்கரநாராயணர், கருப்பணசுவாமி, துர்க்கை , திருமூலர், நவக்கிரகம், செல்வ முத்துக்குமார சுவாமி சந்நிதி தண்ணீர் மந்தரித்துத் தரும் இடம் ஆகியவை வெளிப்பிரகாரத்தில் உள்ளன. வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, ராகு-கேது மூலவர்கள் மற்றும் உற்சவர்கள் கன்னிமார் சனீஸ்வரன் ஆகியோருக்கு என தனி சந்நிதிகளும் உள்ளன.
   பொது ஆண்டு, 1820 வாக்கில் பிறந்து நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர் ஐயன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலப் பதிவேடுகளில் இவ்விடம் "தம்பிக்கலை அய்யன் ஃபாரஸ்ட்' என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐயன் தவமிருந்த இந்த தங்கமேடு பெரிய பாம்புப்புற்றுகள் நிறைந்த வனமாக இருந்தது. இன்றும் நல்ல பாம்புகள் பலனுக்கு ஏற்ப பக்தர்களுக்கு காட்சித் தருகின்றன. தம்பிக்கலை அய்யனே சூட்சமமாக தன்னிடம் வரும் பக்தர்களுக்கு எவ்விதமான ரோகங்களாக இருந்தாலும் தீர்த்து அருளாசி வழங்குகிறார்.
   பக்தர்களுக்கு நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எந்த விஷக்கடி, பூச்சிக்கடி, புறத்தோல் உபாதை போன்றவை இருந்தாலும் வேப்பிலை அடித்து திருநீரு போட்டு புதிய மண்சட்டியில் தீர்த்தம் மந்திரித்துத் தரப்படுகிறது. இன்றுவரை தீராத நோய்கள், தோல் நோய்கள் மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமாகிப் போகிறார்கள்.
   இங்கு வேண்டிக்கொண்டு திருமணம் ஆனோர் மருத்துவப்படிப்பு படித்தோர் தோஷம் நீங்கியோர் மற்றும் குழந்தை உருவானோர் ஆகியோருக்கு என அவரவர்களின் உருவங்களை சிமெண்ட் பிரதிமைகளாக 1000 கணக்கில் செய்து வைத்து உள்ள திருக்கோயிலாகும்.
   மருத்துவ குணம் கொண்ட ஊசல் மரமே தலவிருட்சம்!
   இங்கு செவ்வாய், வெள்ளிக் கிழமை, அமாவாசை, பெüர்ணமி நாட்களில் மக்கள் வரவு அதிகம். சித்திரை மாதத்திருவிழா, கார்த்திகை தினத்தன்று ஒரு லட்ச தீபம் ஆகியவை முக்கியமானவையாகும்.
   சிவகங்கை தீர்த்தத்தை தீர்த்தமாக உடைய இத்திருக்கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையும் மீண்டும் பிற்பகல் 2.30 முதல் இரவு 7.00 மணிவரையும் தரிசனம் செய்ய திறந்திருக்கும்.
   இங்கு நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி விழா மிகச்சிறப்பானதாகும். எதிர்வரும் 2019, பிப்ரவரி 13 -ஆம் தேதி பக்தர்கள் நலனுக்காக ராகு கேது பெயர்ச்சியாவதை முன்னிட்டு, ராகு கேது தோஷ பரிகாரத்துக்கென பகல் 12.00 மணிக்கு விநாயகர் பூஜை துவங்கி பரிகார சிறப்பு மகாயாகம் குறிப்பாக, ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்காக நடக்க உள்ளது.
   ஈரோடு கோபி சாலையில் செல்லும் பேருந்தில் கவுந்தப்பாடி அல்லது காஞ்சிக்கோயில் நிறுத்தத்தில் இறங்கி மினி பேருந்து மூலம் தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி கோயிலை அடையலாம்.
   தொடர்புக்கு: 04294235053 / 99652 61238.
   -இரா. இரகுநாதன்
   
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp