பொருநை போற்றுதும்!26 - டாக்டர் சுதா சேஷய்யன்

பிரபஞ்சத்தின் ஆற்றல் சக்தியை, ஓர் உத்தம ஆடவனாக உருவகப்படுத்தினர் நம்முடைய முன்னோர்.
பொருநை போற்றுதும்!26 - டாக்டர் சுதா சேஷய்யன்

பிரபஞ்சத்தின் ஆற்றல் சக்தியை, ஓர் உத்தம ஆடவனாக உருவகப்படுத்தினர் நம்முடைய முன்னோர். பிரபஞ்சம் மற்றும் பிரபஞ்ச உயிர்களின் தோற்றம், பராமரிப்பு ஆகியவற்றின் பொறுப்பாளியான விராஜ் (அல்லது விராட்), சிவப்பரம்பொருளை வழிபட விழைந்து, பாவநாசம் வந்து வழிபட்டான். விராஜ் வழிபட்டதால், இந்தப் பெருமான் "வைராஜர்' ஆகிறார் (இந்தத் திருநாமமே, மக்கள் புழக்கத்தில் வயிராசர் என்றும் வழங்கப்படுகிறது). 
இதே போன்று, வேதங்கள் நான்கும் இங்கு வந்து இறைவனை வழிபடுவதற்கு ஆசைப்பட்டன. அதர்வண வேதம் வான் வடிவம் கொள்ள, ரிக்—யஜுர்—சாம வேதங்கள் மூன்றும், மூன்று களா மரங்களாக உருக்கொண்டன. மூன்று களா மரங்கள் வழிபட்டதால், சுவாமி "முக்களாலிங்கர்' ஆனார். வேதங்கள் வழிபட்டதால், பழமறை நாதர். தலமரமான களாவின் அடியில், அகத்தியர்—புலஸ்தியர் திருமேனிகள் உள்ளன. இறைவனை அகத்தில் கண்டு வழிபட்டவர் அகத்தியர்; புறத்தே புலப்படுகிற பொருட்கள் யாவற்றிலும் இறைவனைக் கண்டு வழிபட்டவர், புலஸ்தியர். 
பாவநாசத் திருத்தலத்தின் அம்பிகை, அருள்மிகு உலகம்மை என்னும் லோகநாயகி. இந்த அம்பிகைதான், விக்கிரமசிங்கபுரத்தின் நமச்சிவாயக் கவிராயரோடு உடன் நடந்து, அவருடைய பாடல்களை ரசித்து, அவரின் தாம்பூலத் துளிகளைத் தன்னுடைய ஆடையில் ஏந்திக் கொண்டவள். 
பாவநாசத் திருத்தலம், நவகைலாயங்களில் முதன்மையானதும் ஆகும். அகத்தியரின் பிரதம சீடரான ரோமசர், முக்திக்கான வழியை யாசித்தார். சிவபெருமானை வழிபட்டால் முக்தி கிட்டும் என்று உபதேசித்த அகத்தியர், ஒன்பது தாமரை மலர்களைத் தாமிரவருணியில் போட்டு, அந்த மலர்கள் எங்கெல்லாம் கரை சேர்கின்றனவோ அங்கு அவை சிவலிங்கங்களாக வடிவெடுக்கும் என்றும், அவ்வவ்விடங்களில் சிவபூஜை செய்து, நிறைவாகத் தாமிரா கடலரசனோடு சங்கமிக்கும் இடத்திலும் வழிபட்டால் முக்தி கிட்டும் என்றருளினார். இதன்படி, தாமரை மலர்கள் தாமிராவின் கரையில் சிவலிங்கங்களாக வடிவெடுக்க, இத்தலங்களே "நவ கைலாயத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஒன்பது தலங்களின் சுவாமிகளுக்கும், அருள்மிகு கைலாயநாதர் என்னும் திருநாமம் உண்டு. பாபவிநாச நாதரும், அருள்மிகு கைலாயநாதர் ஆவார். 
அப்பர் பெருமானின் தேவாரப் பாசுரத்தில், "பறியலூர் வீரட்டம் பாவநாசம்' என்று குறிக்கப்பெறுவதால், இத்தலம் தேவார வைப்புத் தலமும் ஆகும். "பாவநாசா, உன் பாதமே அல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்' என்று மாணிக்கவாசகரும் பாடுகிறார். 
கோயிலுக்கு எதிரிலுள்ள ஆற்றில் காணப்படும் மீன்கள் சாந்தமானவை, மனிதர்களோடு பழகியவை. நோய்களின் தீர்வுக்காக இங்கு நேர்ந்துகொள்ளும் பக்தர்கள், தங்கள் நோய்கள் தீர்ந்தவுடன், இந்த மீன்களுக்கு உணவளிப்பது வழக்கம். இந்த மீன்களுக்குத் தீங்கிழைத்தால், கண் பார்வை போய்விடும் என்றொரு நம்பிக்கை நிலவுகிறது. 
அருள்மிகு உலகம்மை உடனாய பாவநாசரை வணங்கிவிட்டுத் தாமிரா நகர்கிறாள். நம்மையும் அழைத்துக் கொண்டுதான்..!
சிங்காரத் தமிழ் தந்த சிங்கை 
பாபநாசத்தோடு இணைந்த ஊர், விக்கிரமசிங்கபுரம். சொல்லப்போனால், விக்கிரமசிங்கபுரத்தின் ஒரு பகுதியே பாபநாசம் எனலாம். இப்போதைய அஞ்சல் முகவரிகளில் வி.எஸ்.புரம் என்று குறிக்கப்படுகிற இவ்வூருக்குத்தான் சிங்கை என்றும் பெயர். பாபநாசத் தலபுராணம் பாடிய முக்களாலிங்கப் புலவர், அவருடைய மகன்களான ஆனந்தக்கூத்தர் மற்றும் நமச்சிவாயக் கவிராயர், ஆனந்தக்கூத்தரின் மகனான சிவஞான முனிவர் ஆகிய புலவர் பெருமக்களை ஈன்று பெருமை கொண்டது சிங்கை. பாபநாசம் உலகம்மையின் பக்தரான நமச்சிவாயப் புலவர், உலகம்மையின்மீது உலகம்மைப் பிள்ளைத் தமிழ், உலகம்மை அந்தாதி, உலகம்மை கொச்சகக் கலிப்பா, உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, உலகம்மை சந்த விருத்தம் என்னும் நூல்களைப் பாடினார். பின்னர், பாபநாசத்தில் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய, அருள்மிகு திருமணக்கோல நாயகி உடனாய அருள்மிகு கல்யாணசுந்தரர்மீது சிலேடை வெண்பா பாடினார். இந்த நூலுக்குச் சிங்கைச் சிலேடை வெண்பா என்று பெயர்; நமச்சிவாயப் புலவரின் ஆறு நூல்களுக்கும், மொத்தமாகச் சேர்த்து "சிங்கைப் பிரபந்தத் திரட்டு' என்றே பெயர். 
பேர்த் தண்டமிழ் வரையும் பேரறமும் சேர்ந்து கலி
தீர்த்தங் கொடுக்கும் இயல் சிங்கையே ஊர்த்தம்
முயலு நடத்தினார் மூதண்டத் தெல்லாச்
செயலு நடத்தினார் சேர்வு 
என்று சிங்கையின் பெருமையையும் சிவனாரின் பெருமையையும் ஒருசேரக் காட்டுகிறது சிங்கைச் சிலேடை வெண்பா.
- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com