சுடச்சுட

  
  JESUSCHRIST

  நம் வாழ்வு மிக இன்பமானதும் மகிழ்வானதும் வளமானதும் பெருமையானதும் ஆகும். நம் வாழ்வு ஓர் அழகான சகல வசதியுடைய ஒரு வீட்டைப் போன்றது. நம் வாழ்வு சமூக அமைப்புக்கு உட்பட்டது. வீடு, அப்பா, அம்மா, பிள்ளைகள், தாத்தா, பாட்டி, உறவினர்கள் மற்றும் செல்ல பிராணிகள் உண்டு உறங்கி தொழில் செய்து, கல்விகற்று, அடைக்கலம் தரும் இடம் ஆகும். இவ்வாறு வீட்டைக் கட்டித் தருபவரையும் கடவுள் எனலாம். ஒரு வீடு கட்டப்படும்போது பூமிக்கு அடியில் நல்ல அஸ்திவாரம் போட வேண்டும். உறுதியான பூமியில் அமைந்துள்ள அஸ்திவாரமே வீட்டைத் தாங்கும்.
   வேதாகமத்தில் இயேசு ஆண்டவர் இரண்டு பேர் கட்டிய வீட்டைப் பற்றி உவமையாகச் சொன்ன செய்தியுள்ளது. "நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனிதனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை ஏனென்றால் அது கன்மலையின் மேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது.
   நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்திறாதவன் எவனோ , அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனிதனுக்கு ஒப்பிடப்படுகிறான். பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதினபோது அது விழுந்து முழுவதும் அழிந்தது'' என்றார் (மத்தேயு: 7: 24-27)
   இந்த உவமை கதையில் புத்தியுள்ள, புத்தியில்லாத இரண்டு மனிதர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. புத்தியுள்ளவர் தம் வீட்டை கட்ட நல்ல இடத்தை கண்டுபிடித்தார். அது மேடான இடம்! பூமியோ கன்மலையான கெட்டியான பாறை இடம். அஸ்திவாரம் போட தோண்ட மிகக் கடுமையாக வேலை வாங்கியது. பாறையை வெட்டி நல்ல அடித்தளம் அமைத்தார். வீடு மிக நேர்த்தியாக வசதியாகக் கட்டப்பட்டது. தன் அன்பு குடும்பத்துடன் குடி சென்றார். இயற்கையின் சீற்றம் பெருமழை, காற்று அடித்தும் அவ்வீடு பாதுகாப்புடன் நிலைத்து நின்றது. அக்குடும்பம் மகிழ்வாக இருந்தது.
   புத்தியில்லாதவர் வீடு கட்ட இடம் தேடினார். அவர் தேர்வு செய்த இடமோ வறண்ட ஆற்றின் நடுபகுதி. அதில் அஸ்வாரம் தோண்டுவது மிக சுலபமாக இருந்தது. மணல் வேண்டிய மட்டும் கிடைத்தது. ஆற்றில் தண்ணீரும் கட்டடம் கட்ட கிடைத்தது. ஆனால் பெருமழை, பெரும் காற்று, மழை வெள்ளத்தால் ஆற்றில் கட்டிய வீடு தாக்கப்பட்டு அழிந்தது. வீட்டைக் கட்டிய புத்தியில்லாதவரும் அவர் குடும்பமும் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள்.
   அடிதளம் என்ற அஸ்திவாரம் வீட்டிற்கு மட்டும் அல்ல, நமது குழந்தைகளுக்கு நல்ல கல்வி என்ற அடிதளம், நல்ல தொழிலுக்கு, வியாபாரத்திற்கு நல்ல அஸ்திவாரம் போடவேண்டும். கடின உழைப்பு, உண்மை, தெய்வ பக்தி, அன்பு, நற்செயல்கள் என்ற அடிதளம் வாழ்வு என்ற வீட்டிற்கு அமைதல் வேண்டும். இயேசுவும் அவர் வார்த்தைகளுமே நமது வாழ்வு என்ற வீட்டிற்கு அடிதளம்! புத்தியுள்ளவராக மகிழ்வுடன் வாழ்வோம்.
   - தே. பால் பிரேம்குமார்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai