சக்தி பீடங்களின் சங்கமம்!

அம்மை அப்பராகிய சிவசக்தியர் உலக மக்களின் நன்மைபொருட்டு செய்த நாடகம் (திருவிளையாடல்) தட்சபிரஜாபதியின் யாகசாலையில் செவ்வனே நடந்தது.
சக்தி பீடங்களின் சங்கமம்!

அம்மை அப்பராகிய சிவசக்தியர் உலக மக்களின் நன்மைபொருட்டு செய்த நாடகம் (திருவிளையாடல்) தட்சபிரஜாபதியின் யாகசாலையில் செவ்வனே நடந்தது. இதன் முடிவு, சிவபெருமான் தட்சனுடைய வேள்வியை அழித்து அவனுக்கு தக்க பாடம் புகட்டி அருளினார். சக்திதேவி தன்னுடைய உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் விழுமாறு செய்தாள். அந்த புனித ஸ்தலங்களே சக்தி பீடங்கள் ஆகும். சக்தியின் பூர்ண சைதன்யம் ஒவ்வொரு இடத்திலும் நிலைத்து அருள்பாலிக்கத் தொடங்கியது. அதன் மூலம் சக்தி வழிபாட்டிற்கான மார்க்கம் தோன்றியது. மகரிஷி ஸ்ரீவேதவியாசர், பராசக்தியின் 108 சக்தி பீடங்களைப் பற்றி மத்ஸ்ய மற்றும் பிரம்மாண்ட புராணங்களில் விவரித்துள்ளார்.
 இந்த சக்தி பீடங்கள், அன்னையின் அருளையும், அன்பையும் தவ சீலர்கள் நேரடியாக அனுபவம் பெற்ற இடங்கள். பாரத நாட்டைத் தவிர அண்டை தேசங்களிலும் பரவியிருந்த இந்த சக்தி பீடங்கள் காலதேச பரிமாண மாற்றங்களினாலும், வழிபாடு செய்ய இயலாத நிலையிலும் மறைந்து உள்ளது என்பதே உண்மை. சிதறிக்கிடக்கும் சக்தி பீடங்கள் ஓரிடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு சக்திபீடங்களின் சங்கமாக தனக்கு ஓர் ஆலயம் அமைய வேண்டும் என்று அம்பிகை நினைத்திருப்பாள் போலும், அது அமைய வேண்டிய அனைத்து அம்சங்களையும் சூட்சமமாக, ஓர் ஆக்ஞையாக குருஜி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் என்ற தேவி பக்தருக்கு உணர்த்தி அவர் மூலமாக நிறைவேற்றிக் கொண்டாள்.
 காஞ்சி மாவட்டத்தில் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரத்திலிருந்து சுமார் 12. கி.மீ. தூரத்தில் மதுரமங்கலம் அருகில் உள்ளது கண்ணந்தாங்கல் கிராமம். காஞ்சி புராணத்துடன் தொடர்புடைய கம்பாநதியின் கிளையான கம்பாநதி கால்வாய் கரையில் அமைந்துள்ளது. 1930 -ஆம் ஆண்டில் இக்கிராமத்தில் இருந்த ஒரு மாந்தோப்பில் காஞ்சி மகாசுவாமிகள் சிலகாலம் தங்கி பூஜைகள் ஆற்றிய புண்ணிய பூமி. பகவத் ஸ்ரீ ராமானுஜரின் ஆத்மசீடர் எம்பார் சுவாமிகள் ஆராதித்துவந்த பழைமையான வைகுண்ட பெருமாள் ஆலயம் இவ்வூர் அருகில் மதுரமங்கலத்தில் உள்ளது. கம்பா நதி கால்வாயில் ஒரு காலத்தில் நிறைய நீர் வரவு உண்டு. மங்களபுரி என ஆன்மீகச் சிறப்புடன் அழைக்கப்படும் இப்பகுதியில்தான் அன்னை காமாட்சிக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் வாழ்வின் நான்கு நிலைகளின் பிரதிபிம்பமாய் ஸ்ரீஸ்வர்ண காமாட்சி ஆலயம் முற்றிலும் கற்கோயிலாக புராதன சிற்ப சாஸ்திர முறைப்படி அமையப்பெற்ற, வேத வழியிலே கும்பாபிஷேக வைபவம் கடந்த 2014 -ஆம் ஆண்டு நடைபெற்றது. இங்குதான், இரண்டாம் கட்டமாக 108 சக்தி பீட நாயகியருக்கும், அன்னை ஸ்வர்ண காமாட்சியை சுற்றி ஓர்அழகான செவ்வகவடிவான அமைப்பில் சிறு ஆலயங்களாக தற்பொழுது கட்டப்பட்டுள்ளது.
 உலக நன்மைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் அன்னை காமாட்சி தேவி கருவறையில் அமர்ந்த கோலத்தில் கரங்களில் பாச அங்குசம், கரும்பு வில், புஷ்பபாணம் தாங்கி, சரஸ்வதி, லட்சுமி இருவரையும் தன் கண்களாக வைத்திருக்கும் ஐதீகத்துடன், தன் கருணை விழிகளால் அருள்பாலிக்கும் அற்புதக் கோலத்தைக் காணலாம். அம்மனின் முன் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை உண்டு. உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் உற்சவ காமாட்சி, சுவர்ண மகாகணபதி, மகாபைரவர் சந்நிதிகளையும் இவ்வாலயத்தில் தரிசிக்கலாம். சிறப்பு அம்சமாக காஞ்சி மகாசுவாமிகளின் பத்மாசன கோலத்தில் பஞ்சலோக விக்ரகம் அவரது பார்வையும், அம்பிகையின் பாதங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு அமைந்து உள்ளதை ஆலய மண்டபத்தில் தரிசிக்கலாம். மூலஸ்தானத்தைச் சுற்றி பிராகரத்தில் 108 சக்தி பீட ஆலயங்கள் சுமார் 14 அடி உயரத்தில் சிற்ப சாஸ்திர முறைப்படி செய்யப்பட்ட பிரத்யேக தேவியரின் சிலாரூபத்துடன் கர்ப்பகிரஹம் மற்றும் தனி விமானத்துடன் உள்ளது. ஒவ்வொரு சக்தி பீடநாயகியரும் தனிபெரும் பண்புடன் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றலை படைத்தவர்களாக பிரதிஷ்டையாகி உள்ளது சிறப்பு. இந்த சக்தி பீட ஆலயங்களை இணைக்கும் விதமாக மூன்று நிலை ராஜகோபுரம் சுமார் 35 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. நூதன துவஜஸ்தம்பம் பிரதிஷ்டையாகி உள்ளது. பசு மடம் பராமரிப்பில் உள்ளது. பிரதான வாயிலைத்தவிர இதர மூன்று பக்கங்களில் வழியும், அங்கு சிறிய ராஜகோபுரங்களும் அமைந்துள்ளன. இந்துசமய வரலாற்றில் இந்த சக்திபீட சங்கம ஆலயம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
 ஸ்ரீ குரு காமாக்ஷி சுவாமிகள் வழிகாட்டுதலின்படி ஸ்ரீ காமாக்ஷி கைங்கர்ய அறக்கட்டளையினரால், இந்த சக்தி பீட ஆலயத்தின் மகாகும்பாபிஷேக வைபவம் பிப்ரவரி 10 -ஆம் தேதி காலை 8.15 மணிக்கு மேல் 9 .00 மணிக்குள் மூல ஸ்வர்ண காமாட்சிக்கும், ராஜகோபுர விமானங்களுக்கும், 108 சக்தி பீட ஆலயங்களுக்கும் சமகாலத்தில் வைதீக முறைப்படி 250 மறறும் அதற்கு மேலான வேத விற்பன்னர்கள் கலந்து கொள்ள, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது. இந்த வைபவத்தில் தமிழக ஆளுநர் உட்பட முக்கிய பிரமுகர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும் கலந்து கொள்கின்றனர்.
 தொடர்புக்கு: 98412 85245 / 94449 04243.
 - எஸ்.வெங்கட்ராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com