பொருநை போற்றுதும்! 27- டாக்டர் சுதா சேஷய்யன்

விக்கிரமசிங்கபுரத்தில் அருள்மிகு சிவந்தியப்பர் கோயில் கொண்டிருக்கிறார். சிவந்தியப்பர் என்னும் அரசரால் ஸ்தாபிக்கப்பெற்ற இந்தச் சிவனார்
பொருநை போற்றுதும்! 27- டாக்டர் சுதா சேஷய்யன்

விக்கிரமசிங்கபுரத்தில் அருள்மிகு சிவந்தியப்பர் கோயில் கொண்டிருக்கிறார். சிவந்தியப்பர் என்னும் அரசரால் ஸ்தாபிக்கப்பெற்ற இந்தச் சிவனார், அந்த அரசரின் பெயராலேயே அழைக்கப்படுகிறார். அரசராக வீற்றிருந்து, தம்முடைய அடியார்களை ஆண்டவனார் காக்கிறார் என்னும் முறையில், சிவலிங்கத்திற்கு ராஜ தலைப்பாகை அணிவிக்கப்படுகிறது. இங்கெழுந்தருளியிருக்கும் அம்பாளுக்கு விநோதமான திருநாமம்: வழியடிமை கொண்ட நாயகி. நம்முடைய வாழ்க்கைப் பாதையில் நமக்கு வழிகாட்டி, பிறவிச் சக்கரத்தின் சுழற்சியிலிருந்து வழி மாற்றி, முக்தி வழியில் அழைத்துப் போனவள். லெüகீகப் பாதையில் சிக்கிக் கொள்ளாமல், இறைவனை அடையும் உயர்பாதையில் செலுத்துபவள். வடமொழியில், மார்க்க ஸம்ரக்ஷணி என்றழைக்கப்படுகிறாள்.
 அழகு கொஞ்சும் அம்பை சிறிது தொலைவு கிழக்காகப் பயணித்தால், பொதியச் சாரலின் புகழ்மிக்க அம்பாசமுத்திரம். காசிநாதசுவாமி திருக்கோயில், திருமூலநாதசுவாமி திருக்கோயில், அம்மையப்பர் திருக்கோயில், வீரமார்த்தாண்டேச்வரர் திருக்கோயில் என்னும் பற்பல கோயில்களின் ஊர். காச்யப முனிவர் வழிபட்ட இறைவனார், காச்பய நாதர் என்னும் திருநாமத்தோடு இங்கே கோயில் கொண்டுள்ளார். காச்யபநாத சுவாமி அல்லது காசிபநாத சுவாமி என்பதே, காலப்போக்கில் காசிநாதசுவாமி என்றாகிவிட்டது.
 தாமிரவருணியின் வடகரையில் அமைந்து, சமீபகாலங்களில் "அம்பை' என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வூருக்குப் பழங்காலப் பெயர்கள் பலப்பல. காச்யபநாதசுவாமி கோயிலில் காணப்படுகிற 9 -ஆம் நூற்றாண்டு காலத்திய வட்டெழுத்துக் கல்வெட்டுகள், "முள்ளிநாட்டு இளங்கோய்க்குடி' என்கின்றன. வணிகர்களுக்கு "இளங்கோக்கள்' என்று பெயர்; வணிகர்கள் அதிகமாகக் குடியேறியதால், இவ்வூர், இளங்கோக்குடி என்றழைக்கப்பட்டிருக்கவேண்டும். அதற்கும் முன்னர், திருச்சாலைத்துறை என்றும் திருமூலபுரம் என்றும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. 10, 11-ஆம் நூற்றாண்டுக்காலத்தில், முதலாம் ராஜராஜப் பேரரசரின் ஆளுகைக்குள் பாண்டிநாடு வந்தபோது, இளங்கோக்குடியும் அருகிலுள்ள ஊர்கள் சிலவும் சேர்ந்து ராஜராஜ சதுர்வேதி மங்கலம் உருவானது. 14,15 -ஆம் நூற்றாண்டுவாக்கில், இளங்கோக்குடி என்னும் இந்த ஊர், பூதலவீர உதய மார்த்தாண்ட சேரமன்னரின் ஆளுகைக்குள் வந்தது. ஊரின் மையப் பகுதி (காச்யபநாத சுவாமி கோயிலையும், திருமூலநாத சுவாமி கோயிலையும் உள்ளடக்கிய பகுதி), அப்போது வேளாக்குறிச்சி என்று வழங்கப்பட்டு வந்தது. வேளாளர் குடியேறிய பகுதி வேளாளக்குறிச்சி என்றழைக்கப்பட்டிருக்க வேண்டும்; அதுவே காலப்போக்கில், வேளாக்குறிச்சி என்றாகியிருக்கும். ஊரின் பிரதானப் பகுதிகளை வேளாக்குறிச்சி என்று குறிப்பிட்டுவிட்டு, ஊரின் கிழக்குப் பகுதிக்குத் தம்முடைய பெயரைச் சேர்த்து, உதயமார்த்தாண்ட சதுர்வேதி மங்கலம் என்னும் புதுப்பெயர் சூட்டினார். இந்தக் கிழக்குப் பகுதியில்தான், பட்டர் கோயில் என்றழைக்கப்பெறும் வீரமார்த்தாண்டேச்வரர் கோயில் உள்ளது.
 17- ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த காலங்களிலேயே "அம்பாசமுத்திரம்' என்னும் பெயர் தோன்றியிருக்கக்கூடும். நெல்லைச் சீமையின் ஊர்கள் பலவற்றுக்குச் "சமுத்திரம்' என்னும் பின்னொட்டு இருப்பதைக் காணலாம். மன்னர்கள், ஆட்சியதிகாரிகள், படைத்தலைவர்கள், தனவந்தர்கள் போன்றோர் அவ்வப்போது ஊர்மக்கள் பயன்பாட்டுக்காக ஏரிகளும் குளங்களும் வெட்டியுள்ளார்கள். இத்தகைய ஏரிகளுக்கும் குளங்களுக்கும் அவற்றை வெட்டுவித்தவரின் பெயர்களைச் சூட்டி, சமுத்திரம் என்னும் பின்னொட்டைச் சேர்த்து அழைத்துள்ளனர். ரவணன், கோபாலன், வாலன், தளபதி போன்றோர் பெயர்களால், ரவணசமுத்திரம், கோபாலசமுத்திரம், வாலசமுத்திரம், தளபதிசமுத்திரம் போன்ற ஊர்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஊரின் பெயரும் ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். 15 -ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிக்கு வந்த கோதை ஆதித்யவர்மன் என்னும் செண்பகராம ஆதித்ய சேர மன்னர், தம்முடைய தங்கைக்குச் சீதனமாக இவ்வூரைக் கொடுத்ததாகவும் கருதப்படுகிறது.
 இந்த ஊரில் கோயில் கொண்டுள்ள காச்யபநாத சுவாமியின் பிராட்டியாம் அம்பிகை அருள்மிகு மரகதவல்லியின் அருள் சமுத்திரத்தில் மூழ்கினால் நற்கதி பெறலாம் என்னும் வகையில், "அம்பாள்சமுத்திரம்' என்னும் பெயர் தோன்றியிருக்கக்கூடும்.
 கல்யாணக்குறிச்சியான கல்லிடைக்குறிச்சி அம்பையின் இரட்டைப்பிறவியாகக் கருதப்படுவது, ஆற்றின் அக்கரையில் (அதாவது வடகரையில் இருக்கும் அம்பைக்கு அக்கரையில்; பொருநையின் தென் கரையில்) இருக்கும் கல்லிடைக்குறிச்சி.
 முதலாம் ராஜராஜப் பேரரசரின் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என்பது, இளங்கோக்குடி (அம்பாசமுத்திரம்), பிரம்மதேசம் ஆகிய ஊர்களைப் பிரதானமாகவும், பெரிய ஊரான இளங்கோக்குடியின் பிடாகைகளாக (சிற்றூர்கள்) மன்னார் கோயில், கல்லிடைக்குறிச்சி, சொக்கங்குளம், வழுதியூர், இடைக்கால் போன்ற ஊர்களையும் கொண்டிருந்தது. ஆகவே, பலகாலத்துக்கும் அம்பாசமுத்திரப் பிடாகைக் கல்லிடைக்குறிச்சி என்றே இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துத் தென் பிடாகையாக (தென்பகுதிச் சிற்றூர்) இது இருந்த காலத்தில், மகிழக்குறிச்சி, மதிள்குறிச்சி, மதுக்குறிச்சி போன்ற பெயர்களும் இருந்திருக்கின்றன. தொடர்ந்து வந்த காலங்களில், க்ஷத்திரிய சிகாமணிபுரம், ராயசிகாமணி போன்ற பெயர்கள் இவ்வூருக்கு வழங்கப்பட்டுள்ளன.
 தவிர, சிலசாலிபுரம், சிலா மத்ய ஹரிஸ்யம் (சிலா=கல்; கல்லிடைக்குறிச்சி என்பதற்கான வடமொழிப் பெயர்கள்), கரந்தையார் பாளையம், கரந்தை (சமணக் குடியேற்றம்), சேரமானார் (சேரர் பகுதி), நல்லூர் போன்ற பெயர்களாலும் அவ்வப்போது இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. ராஜராஜப் பேரரசர் காலத்தில், சதுர்வேதி மங்கலத்து மையமாக பிரம்மதேசம் திகழ, பிடாகையான கல்லிடைக்குறிச்சி, பேரரசரின் பெரும்பட்டமான க்ஷத்திரிய சிகாமணி என்பதைக் கொண்டு சிகாமணிபுரம் என்றே அறியப்பட்டுள்ளது.
 தொடரும்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com