பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
By DIN | Published On : 15th February 2019 10:00 AM | Last Updated : 15th February 2019 10:00 AM | அ+அ அ- |

* பெருந்தன்மையுடையவர்கள், மிகவும் புகழ் படைத்தவர்கள், தர்மத்தில் பற்றுடையவர்கள், நல்லோருடன் சேர்ந்திருப்பவர்கள் ஆகியோர் உலகில் பூஜிக்கத்தக்கவர்கள்.
- வால்மீகி ராமாயணம்
* எவனுக்குத் தர்மத்தில் நம்பிக்கையும் பிடிப்பும் இல்லையோ, அவனுக்கு மற்ற எதிலும் நம்பிக்கையும் பிடிப்பும் ஏற்படாது. கற்றறிந்தவன் சந்தேகப்படாமல் தர்மத்தை நம்ப வேண்டும். அதனால் அவனுக்கு நற்கதி உண்டு. வாழ்க்கை என்ற கடலைக் கடப்பதற்கு ஓடம்போல் தர்மம் இருந்து உதவி செய்யும். தர்மத்துக்கு நிச்சயமாகப் பயன் உண்டு.
- மகாபாரதம் (வியாசர்)
* பூஜை, சேவை, நியமம், விரதம் எல்லாம் வெறும் விளையாட்டுக்கள்தான். இறைவனை உள்ளத்தால் தொட வேண்டும். இறைவன் திருநாமத்தை நெஞ்சில் ஒரு விநாடி மனம் கசிந்து நினைத்தாலும் போதும்; அது அறுபத்தெட்டு திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று வருவதற்குச் சமமாகும்.
- கபீர்தாஸ்
* கோபத்தால் நீ கவரப்படும்பொழுது மெüனத்தை மேற்கொள் அல்லது இறைவன் திருநாமத்தை நினை. கோபத்தை வளர்க்கக் கூடிய எண்ணங்களைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் அவை மிக்க தீமையை விளைவிக்கும்.
- வடலூர் வள்ளலார்
* கொலை, களவு, காமம், கள், புலால் உண்ணல் ஆகிய செயல் குற்றங்கள் நிகழாதவகையில் பார்த்துக்கொள்ளுதல் ஒவ்வொருவருடைய கடமையாகும். உயரிய, சீரிய வாழ்க்கையை நாம் அடைவதற்கு இது மிகவும் துணை செய்யும்.
- இந்துமதம்
* காமம், கோபம் போன்ற தீய எண்ணங்கள் மனதில் தோன்றாதபடி தவிர்க்க வேண்டும். மீறித் தோன்றிவிட்டால் அவற்றைச் சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும்.
- புத்தர்
* "நான் கோயிலுக்குத் திருப்பணி செய்தேன்' என்றும், "ஏழைகளுக்குப் பணி செய்தேன்' என்றும், பெருமை பேசிக்கொள்ளாதே. அவ்விதம் செய்கிறவர்கள், தங்களின் சுயநலத்தைத் திருப்தி செய்கிறவர்களே தவிர, ஒருபோதும் இறைவனுக்குப் பணி செய்பவர்கள் அல்லர்.
- பசுவேசர்
* புதல்வனுக்குத் தந்தையின் ஆணையே சிறந்த அணி என்று கூறப்படும்; அதனால் அல்லவா ராமன் வனத்தை அடைந்தான்!
- சுக்கிர நீதி
* பாவங்கள் நன்னெறியிலிருந்து விலக்கும், துயரத்தைத் தரும், அது திறம் மிக்க மதுவைப் போல வெறியூட்டும். அதனால் விரைவில் தேய்ந்து அழியும், உண்மையிலன்றி அமர வாழ்க்கை இல்லை.
- புத்தர்
* ஒளியில்லாமல் எந்தப் பொருளையும் காண முடியாது. அதுபோல ஞான ஆராய்ச்சியின்றி ஞானம் தோன்றாது. நெருப்பின்றிச் சமையல் இல்லை, அதுபோல ஞானமின்றி வீடுபேறு கிடையாது.
- ஆதிசங்கரர்