சுடச்சுட

  
  JESUS

  உபவாசம் தெய்வ வழிபாட்டில் ஒரு முக்கிய பகுதி. உபவாசம், உடலையும் ஆன்மாவையும் ஒருமுகப்படுத்தி இறைவன்பால் அன்பும் மதிப்பும் பக்தியும் வளர்க்கும். ஒருபொழுது, உண்ணாநோன்பு என இருப்பர். பிரார்த்தனை நேர்ந்துகொள்ளும் பொழுதும் எடுத்த காரியங்களை செம்மையாக முடிக்கவும் உபவாசம் இருப்பார்கள். பண்டிகை நாள்களிலும் அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும் கிறிஸ்துவர்கள் இயேசு ஆண்டவர் சிலுவையில் பாடுபட்ட நாள்களை நினைவு கூர்ந்து உபவாசிப்பது வழக்கம். மிருகங்கள், பறவைகள் மற்ற ஜீவராசிகளும் உபவாசிப்பதை நாம் பார்க்கின்றோம். நம் வீட்டில் வாழும் செல்லப் பிராணியான நாய் கூட வாரம் ஒருநாள் காலையில் ஒன்றும் சாப்பிடுவது இல்லை. உபவாசிப்பது மனதை இறைவனிடம் ஒருமுகப்படுத்தும். ஜீரண உறுப்புகளை ஒழுங்குபடுத்தும்.
   வேதாகமத்தில் இயேசு ஆண்டவர் தம் ஊழியத்தை தொடங்குவதற்குமுன் உபவாசம் இருந்தார். "(இயேசு) அவர் இரவும் பகலும் நாற்பது நாள்கள் உபவாசமிருந்த பின்பு அவருக்கு பசியுண்டாயிற்று (மத்தேயு 4:2). தெய்வமே நாம் வாழும் பூமியில் வாழும்போது நாற்பது நாள்கள் உண்ண உணவும் பருக தண்ணீரும் இன்றி 40 நாள்கள் உபவாசித்தார்.
   உபவாசத்திற்குப்பிறகு சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து "நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்த கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும்' என்றான். "இயேசு மறுமொழியாக மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தையினாலும் பிழைப்பான்' என்றார்.
   பிசாசு, "இயேசுவை தேவ ஆலயத்தின் உப்பரிகை உயரத்தில் நிறுத்தி கீழே குதியும் தேவ தூதர்கள் உம்மை விழாதபடி தங்கள் கரங்களில் ஏந்திக்கொள்வர்' என்றான். இயேசு அவனுக்கு பதிலாக "கடவுளை சோதிக்க வேண்டாம் என எழுதியிருக்கிறதே?' என்றார்.
   பின்பு பிசாசு இயேசுவை மலையின் உச்சியில் நிறுத்தி உலகின் மகிமையை காண்பித்து. "என்னை நீர் தாழ விழுந்து வணங்கும், அப்போது இவ்வுலகின் சகல பெருமையையும் தருவேன்' என்றான். இயேசு, "கடவுள் ஒருவரை தவிர வேறு எவரும் வணங்கத் தகுதியில்லாதவர்' என்று எழுதி இருக்கிறது என்றார். இப்படி பிசாசு இயேசுவிடம் தோற்றுப் போனான். இயேசு தேவகுமாரனாக இருந்தும் இப்பூமியில் மனித குமாரனாக வாழ்ந்தபோது வெற்றி பெற்றவராக இருந்தார். இயேசுவின் நாற்பது நாள்கள் உபவாசம் மிகப் பெரிய வல்லமை, பலம், அறிவு, சரியாக பதில் அளிக்கவும், சோதனையிலிருந்து வெற்றி பெறவும் பலம் தந்தது. மனிதராகிய நமக்கு பலமும் பக்தியும் அறிவும் வேண்டின் நிச்சயம் நாம் உபவாசிக்க வேண்டும். உபவாசம் வெற்றியுள்ள வாழ்வு தரும். உபவாசம் தவவாழ்வில் ஓர் அங்கம். நம் வாழ்வு கடவுள் தந்த தவ வாழ்வே. இவ்வாழ்வு வெற்றியாய் அமைய, நம்மால் அனுசரிக்கக் கூடிய உபவாசம் இருப்பது நல்லது. உபவாசிப்பவர்களுக்கு இயேசுவின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு.
   - தே. பால் பிரேம்குமார்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai