சுடச்சுட

  
  vm2

  ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவன் மனிதன். முதலில் படைக்கப்பட்ட ஆதி மனிதன் ஆதம் நபியின் விலா எலும்பிலிருந்து ஒரு பெண் அன்னை ஹவ்வாவைப் படைத்தான் அல்லாஹ். அத்தம்பதிகளின் இணக்கமான இல்லற குடும்ப வாழ்விலிருந்து மனிதன் இனம் மனித சமுதாயம் உருவானது. அன்பு என்பது பிரியம். நேசம் என்பது இரக்கம். இவ்விரண்டின் அடிப்படையில் அமைகிறது குடும்பம். இந்த அடிப்படையில் தந்தை தன் குடும்பத்தை நேசிக்கிறாள். குடும்ப பொறுப்பை ஏற்று குடும்பத்திற்காக உழைக்கிறார்.
   பொழுது புலருமுன் புறப்பட்டு இரவு நெடுநேரம் கழித்து வீடு திரும்பும் வியாபாரி, பகல் எல்லாம் பாடுபடும் பாட்டாளி, சுடும் கடும் வெயிலிலும் கொட்டும் பனி குளிரிலும் நிலத்தை உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி, நாற்று நட்டு, அறுவடை செய்யும் உழவன், சுழலும் காற்றையும்சூழும் அலையையும் தாழ்த்தும் குளிரையும் வீழ்த்தி ஆழ்கடலில் வலை வீசி மீன் பிடிக்கும் மீனவன், இன்றைய கணினி யுகத்தில் இரவென்று பகலென்று இல்லாது முறை வைத்து தரப்படும் பணியை அரசு, பொது, தனியார் துறைகளில் ஊழியரால், அலுவலராய், அதிகாரியாய், பொறியியல் வல்லுநராய், பணிபுரியும் படித்த, பட்டம் பெற்றவர்கள் உழைப்பது அவரவர் குடும்பத்தைக் காப்பதற்கே. அந்த தந்தையின் தியாகத்தை உணரும் குழந்தைகள் தந்தையோடு தாயிடமும் காட்டும் பாசமே பெற்றோர் சொல் கேட்டு நல்லவற்றை நாளும் கற்று பெற்றோர் மகிழ, வளர்ந்து சிறந்து வாழும் பொழுது அந்த தாய்ப்பாசமே தாய் நாட்டு பாசமாகி வீட்டோடு நாட்டையும் நேசிக்கும் நற்பயிற்சி தருகிறது.
   தந்தை ஆண் மக்களுக்குக் குடும்பத்தின் முன் மாதிரியாக திகழ்கிறார். குடும்பத்தை நடத்தும் தாய் பெண் மக்களுக்கு முன் மாதிரி. இப்படித்தான் குடும்பத்தில் அன்போடு பாசமும் நேசமும் பின்னிப் பிணைகிறது. குடும்பத்தில் அமைதி நிலவ மகிழ்ச்சி மலர்கிறது. மலரும் மகிழ்ச்சியில் இழையும் மென்மை அன்பை அதிகமாக்கி பாசத்தைப் பரவ செய்கிறது. நேரிய முறையில் நீதமாக கண்ணியமாக சங்கையாக சகல செயல்களையும் செம்மையாக செய்ய வழிகாட்டுகிறது. இதுவே இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் பிரியத்தையும் புரிந்துணர்வையும் பொறுப்பையும் ஒருங்கிணைப்பையும் உருவாக்குகிறது. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது பிரியத்தையும் பிரியா பாசத்தையும் உருவாக்குகிறது. ஒருவர் முயற்சியில் மற்றவர் பங்கு கொள்ள வைக்கிறது. உறுதுணையாக உதவ உந்துகிறது. ஒருவருக்கொருவர் நன்றி பாராட்டும் பண்பைப் பரவலாக்குகிறது. மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தமாட்டார் என்பது ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழி. நூல்- அஹ்மத். நன்றி பாராட்டும் நற்பண்பு சமூக வாழ்வில் சங்கமிக்க வைக்கும். குடும்ப ஒற்றுமை சமுதாய ஒற்றுமைக்கு வித்து. சமூக அமைப்பின் இணைப்பே நாட்டின் முன்னேற்றத்திற்கும் உயர்வுக்கும் வழிவகுக்கும்.
   நாங்கள் உண்கிறோம், பசி தீருவதில்லை என்று பகர்ந்தவர்களிடம் குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணுங்கள். அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். பசி தீரும். பாசம் வளரும் என்று பாசநபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். வீடுகளில் மனைவியின் வேலைகளில் கணவன் உதவினால் குழந்தைகளும் பெற்றோர் வேலைகளில் உதவ பயிலும். இப்பயிற்சி வளர்ந்தபின் உற்றுழி உதவும் உயர் பண்பாகும். இப்பண்பு தாய்நாட்டின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் புறப்படும் வரை அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்களின் மருமகன் அலி (ரலி) அவர்கள் அவர்களின் மனைவி பாத்திமா (ரலி) ரொட்டி சுடும்பொழுது நீர் இறைத்து எடுத்து வருவார்கள்.
   உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ள அல்லாஹ் ஏவியதை ஏற்று செய்திட செம்மறை குர்ஆனின் 66- 6 ஆவது வசனம் ஏவ, 20-132 ஆவது வசனம் உங்கள் குடும்பத்தினர் தொழுகையைத் தொடர்ந்து நிறைவேற்ற தூண்டுமாறு உரைக்கிறது. குழந்தைகளை ஏழு வயதில் தொழுகையை கடைபிடிக்க தூண்டுமாறும் பத்து வயதில் கண்டிப்புடன் தொழ வைக்குமாறும் தோழமை நபி (ஸல்) அவர்களின் நன்மொழியை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- அபூதாவூத். ஏழுவயது வரை குழந்தைகள் மகிழ அவர்களுடன் விளையாடும்படியும் ஏழு வயதில் இருந்து நல்லதை நயமாய் கற்பிக்க துவங்கி பத்து வயதில் கண்டித்து ஒழுக்கத்தை ஒழுங்காக கடைபிடித்து பழக்கமாக்க பாசநபி (ஸல்) அவர்கள் பகன்றார்கள். அதன் முதல் படியே தொழுகை. ஒழுங்காக தொழுதால் இறையச்சம் உள்ளத்தில் உருவாகி குழந்தைகள் அறமே செய்யும். பிற வழியில் பிறழ மாட்டார்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நல்ல ஒழுக்கமுடன் நடக்க வேண்டும். பெற்றோரின் பழக்க வழக்கமே குழந்தைகளின் இதயத்தில் பதியமாகிறது. அப்பதியமே உதயத்தை உயர்த்தி உன்னதமாய் உலகில் வாழ வைக்கிறது.
   குடும்பத்திற்காக செலவு செய்வது மேலான பயனை நல்கும் என்ற நந்நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைப் புகல்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். குடும்பத்திற்குச் செலவிடுவது நற்செயல் என்ற நம்பிக்கையோடு செலவழிப்பவரின் செலவு அற செயலாகும் என்று செம்மல் நபி (ஸல்) அவர்கள் செப்பியதை அறிவிக்கிறார் அபூமஸ்வூதல் பத்ரீ (ரஹ்) நூல்- புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸஈ. ஆசுரா நாளன்று குடும்பத்தினருக்குத் தாராளமாக செலவு செய்கிறவருக்கு அல்லாஹ் அந்த ஆண்டு முழுவதும் அளவின்றி அருளைப் பொழிகிறான் என்று பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றதை இயம்புகிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- ரஜீன். இதனை, நடைமுறை படுத்தி வெற்றி கண்டதாக விளம்புகிறார் பெரியார் ஸுப்யான்.
   குடும்பத்தில் உறவினர்களோடு உறவாடுவது குழந்தைகள் படிக்கும் காலத்திலும் பணிபுரியும் சூழலிலும் பலரோடு பழகும் பண்பை வளர்க்கும். குடும்ப பாசத்தில் பரிணமிக்கும். இப்பழக்கமும் பண்பும் ஊரிலும் நாட்டிலும் உலகிலும் ஆளுமைத் திறனோடு அறவழியில் முறையோடு வாழவைக்கும்.
   - மு.அ. அபுல் அமீன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai