Enable Javscript for better performance
சாட்சியாய் வந்த சபாநாயகன்!- Dinamani

சுடச்சுட

  
  PARAKALA

  ஒரு தலவிருட்சமே தலத்தின் கடவுளாக நின்ற திருக்கோயில் இது. கோயில் என்று வணங்கப்பட்டாலும் கோபுரம் விமானம் கொடிமரம் ஆகிய அங்கங்கள் இல்லை . வாரம் ஒருமுறை சோமவாரத்தில் (திங்கட்கிழமையன்று) இரவு 10.30 மணிக்கு நடை திறந்து, நந்திக்கும் பரிவார வீரசக்தி விநாயகர், பெத்த பெருமாள் ஆகியோருக்கு பூஜை முடிந்து பின்னர் மூலஸ்தானத்துக்கு நடைபெறும். ஒவ்வொரு தைப்பொங்கல் அன்று மட்டும் பகலில் கோயில் திறந்து பூஜை செய்து முதல் பொங்கல் கோயிலில் வைத்தபின்பே ஊர் முழுவதும் பொங்கல் வைப்பார்கள்.
   சுமார் 350 ஆண்டுகளுக்குமுன் பாட்டுவனாச்சி ஆற்றங்கரையில் இருந்த அந்த கிராமத்தில் ஒரு கூடை முடையும் குடும்பம் வசித்தது. பக்கம் உள்ள காட்டிற்குள் சென்று அங்கு விளையும் பொருட்களைக் கொண்டுவந்து கூடை முடைந்து விற்று வாழ்க்கை நடத்தினர். ஒருநாள், கூடைபின்ன மூங்கில் வெட்டிவர, கணவன் சென்றான். அங்கிருந்த வெள்ளால மரத்தடியில் விளைந்திருந்த பிரம்பையும் மூங்கிலையும் கழித்தபோது வாள் பட்டு மரத்தடியில் இருந்து ரத்தம் பீறிட்டுவர அதிர்ந்தான். அவன் பார்வை மங்கி ஒளி இழந்து அங்கேயே அமர்ந்து விட்டான். இரவாகியும் கணவன் இல்லம் திரும்பாததால் ஊராருடன் காட்டுக்குள் தீப்பந்தம் ஏந்தி தேடிச்சென்றாள் மனைவி. அங்கு பீறிட்டு ஓடும் ரத்தமும் கண் தெரியாமல் இருந்த கணவனையும் கண்டு திகைத்து நிற்க ஒருவர் மீது ஆவேசம் வந்தது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரண்டாம் சாமத்தில் சபாநாயகர் அந்த மரத்தடியில் வந்து நின்று அருள்புரிவதாகவும் அவர் நிற்கும் மரம் வெட்டப்பட்டதால் வெட்டியவனுக்கு கண் போயிற்று எனக் கூறினார்.

   தவமுனிவர்கள் பலருள் தவறு நடப்பதைக் கண்டு வானளவு கோபம் கொள்பவர் வான்கோபர். அதே போல் அளவிட முடியாத அளவு கோபம் கொள்பவர் மஹாகோபர். பரம் பொருளாகிய இறைவனை அடைய இல்லறமே சிறந்தது என வான்கோபரும் துறவறமே சிறந்தது என மஹாகோபரும் பிடிவாதமாக நிற்பவர்கள். தங்கள் கொள்கையில் எது சிறந்தது என அறிய இருவரும் தில்லைக் கூத்தனிடம் சென்று தங்களின் வாதங்களைக் கூறினர். அவர்களை பட்டுவனாச்சி நதிக்கரைக்குச் சென்று அங்கு உறங்கும் புளி உறங்காப்புளி என இரு புளிய மரங்கள் உள்ளன. அங்கு சென்று தவம் செய்தால் உண்மை விளங்கும்; விளங்காவிடில் கார்த்திகை சோமவாரம் தில்லையில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு யாமங்கு வந்து உண்மை விளக்குவோம் எனக் கூறினார். அதன்படி இருவரும் வந்து இரு புளியமரங்களின் அடியில் அமர்ந்து மோனத்தவம் செய்யத் துவங்கினர்.
   புளி காய்த்து பழமாகும். காய்நிலையில் ஓட்டோடு ஒட்டிக்கொண்டு கனமாக உறுதியாக இருக்கும். பழுக்கும் போது ஓடும் சதையும் தனித்தனியாக நிற்கும். இல்லறமாயினும் துறவறமாயினும் பற்றற்ற ஆன்மா தன் உயர்விற்கு இந்த உடலாகிய கூட்டைப் பயன்படுத்திக் கொண்டு பரம்பொருளை அடையும் என்ற தத்துவத்தை உணர்வர் என்பதற்காகத்தான் புளியமரத்தடியில் தவம் இருந்து உணரச் சொன்னார். கோபக்குன்றில் நிற்கும் இருவரும் அதை உணராமல் தவத்தையேத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
   கார்த்திகை சோமவாரத்தன்று முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தில்லை சபாநாயகர் அர்த்தஜாமத்தின் பிறகு தன்படைபரிவாரங்களுடன் பொய்கைநல்லூர் சென்றார். வெள்ளால மரத்தடியில் தடம் பதித்து இருவரையும் புளியால் மனமாசை அகற்றி தெளியவைத்து இருவரையும் இவ்விடத்தில் மத்யஸ்தராக இருந்து உலக இயற்கையை அறிய வைத்தார். அதனால் இந்த இடம் "மத்யபுரி' எனவும் இங்கு வந்து நின்ற ஈசன் "மத்யபுரீஸ்வரர்' எனவும் அழைக்கப்பட்டார்.
   கருவறையில், தலமரமான வெள்ளால மரமே தெய்வமாகும் . அதைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ள பரப்பே கருவறையாகும். மரத்தின் அடியில் சந்தனக்கலவை பூசி அதன்மேல் வெள்ளியில் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம், திருக்கண்கள், திருநாசி, திருவாய் முதலியவை பதிக்கப்பட்டுள்ளது. முன்புறம் பிரபை நிறுத்தியவுடன் சிவலிங்க வடிவம்போல் தெரியும்.
   எதிர்மேடையில் வெள்ளால மரத்தினடியில் வந்து நின்ற இறைவனின் திருவடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அதன் முன்பு பித்தளைத் தகட்டினால் தோரணவாயில் அமைக்கப்பட்டு மரத்தின் முழு உருவமும் தெரியாதவாறு வெள்ளைத் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது. முன்புறம் முன்மண்டபமும் மஹாமண்டபமும் அமைந்துள்ளன.
   கார்த்திகை சோமவாரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கோயிலில் வந்து பலவகை காணிக்கைகளைச் செலுத்தி திருநீறும் வெள்ளால மரத்தின் கீழே உதிர்ந்த இலையில் இறைவன் உறைவதாக கருதி வீட்டுக்கு எடுத்துச் சென்று வழிபடும் இயற்கை கோயிலாகும் இது.
   2019- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 -ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள் வருகிறது. அதற்கு முன், 14 -ஆம் தேதி சோமவாரம் ஆகும். அன்று இரவு கதவு பூஜை முடிந்து சந்நிதிகள் திறக்கப்படும். தொடரந்து 15 -ஆம் தேதி காலை பூஜையைத் தொடர்ந்து கோயில் பொங்கல் வைக்கப்படும். பின்னர், ஊர் முழுவதும் பொங்கல் வைக்கப்படும். அன்று இரவு 10.00 மணி வரை தொடர்ந்து சந்நிதி திறந்து இருக்கும்.
   தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் பரக்கலக்கோட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து 1/2 கி.மீ. தொலைவில் திருக்கோயில் அமைந்துள்ளது.
   தொடர்புக்கு: 04373283295 /
   94861 54477.
   - இரா.இரகுநாதன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai