குணம் தரும் கோபிநாதன்!

ஆந்திரத்தில் உள்ள பெல்லாரி பகுதி தேசத்து நாட்டு மன்னன் வல்லாள தேவனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற கால்நடைகள் பசு மந்தைகள் இருந்தன.
குணம் தரும் கோபிநாதன்!

ஆந்திரத்தில் உள்ள பெல்லாரி பகுதி தேசத்து நாட்டு மன்னன் வல்லாள தேவனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற கால்நடைகள் பசு மந்தைகள் இருந்தன. வறட்சி உண்டாகி நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடியது. வல்லாள மன்னனும் மறைந்துபோக மனைவியும், மகனும் பணியாட்கள் பசு மந்தைகளுடன் பாண்டிய நாட்டுக்குப் பயணமானார்கள். ரெட்டியார் சத்திரம் என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் குன்றின் அடிவாரத்தில் தங்கி பசுக்களைக் காத்து வந்தனர். கோபிநாதன் தினமும் பகலில் மாடுகளை மேய விட்டு கையில் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு வாசிப்பதுமாகவும் மாலையில் தங்குமிடத்திற்குத் திரும்புவதுமாக இருந்தான்.
 சில ஆண்டுகளில் இப்பகுதியிலும் மழை குறையவே வறட்சி உருவாகி மாடுகள் தீவனமின்றி வாடத்துவங்கின. பசுநேசன் கோபி நாதன் எப்பாடு பட்டாவது ஆவினங்களைக் காக்க விரும்பினான். கோபிநாதன் அவர்களின் குலதெய்வத்திடம் மாடுகளுக்கு தீவனமாகப் புல், முளைத்து அனைவரின் வறுமையும் தீர்ந்தால் காணிக்கையாத் தன் உயிரை பிராணத்தியாகம் செய்கிறேன் என வேண்டிக் கொண்டான். அன்று இரவு நல்லமழை பெய்து, மலை முழுவதும் தீவனப்புல் மண்டியது. அப்பகுதியே செழிப்பானது. வேண்டுதல் நிறைவேறியதால் பிரார்த்தனையை நிறைவேற்ற மலை உச்சியில் உள்ள வேப்ப மரத்தில் எருதைக் கட்டி மர உச்சிக்குச் சென்று அங்கிருந்து எருதின் கொம்பில் பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தான்.
 மகனும் மாடுகளும் மறுநாள் கூட இருப்பிடம் திரும்பாததால் அவனது தாய் மகனைத் தேடிக்கொண்டு மலை உச்சிக்கு வந்தாள். கால்நடைகள் கோபிநாதனின் உடலைச் சுற்றியே நின்று கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன. இதைப் பார்த்து நடந்திருப்பதை அறிந்த அவனது தாயும் உயிர் துறந்தாள்.
 இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர், மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் கோடாங்கி மூலம் முன் நடந்தவைகளைக் கூற திகைத்தார் ஜமீந்தார்.
 அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் ஜமீன்தாரைச் சந்தித்தார். "இம்மலை கோபாலன் அருள் பெற்ற மலை. கோவர்த்தனகிரியைக் குடையாய் பிடித்து ஆநிரைகளைக் காத்த கண்ணன் கோபிநாதன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளார். சென்ற கிருஷ்ணாவதாரத்தினைப் போலவே இப்பிறவியில் கோபிநாதன் என்ற பெயரோடு பசுக்களிடம் அதீதஅன்பு கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கையாக்குகிறேன் என நேர்ந்து கொள். நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்து வர சிலை அமைத்து கோயில் கட்ட ஏற்பாடு செய். மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறையருள் பெற்று சிறப்பாய் என கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி, மலைமேல்இருந்த வேப்பமரத்தடியில் கோபி நாதனுக்கு குழல் ஊதுகின்ற பாவனையிலும் கஞ்சிக் கலயத்தை தலையில் சுமந்த நிலையில் அவன் தாயார் கோப்பம்மாளுக்கும் சிலை அமைத்தார். இருவரும் எழுந்தருளும் கோயிலை அமைத்தார் . ஏராளமான பசுக்களை மலை கோபிநாதனுக்கு காணிக்கையாகச் செலுத்தினார். கருவறையில் மூலவருக்கு முன் உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை வைத்துக் கொண்டு பக்தர்களுக்கு தருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
 ரெட்டியார் சத்திரம் அருள்மிகு கோபிநாதசுவாமி திருக்கோயிலுக்கு சனிக்கிழமையும் மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் வரவு அதிகம். போகி, பொங்கல் , மாட்டுப்பொங்கல் மூன்று நாள்களும் மக்கள் வரத்து அதிகமாகவே இருக்கும். போகியன்றும் பொங்கல் அன்றும் குடம் குடமாகப் பால் கொண்டு வந்து கோபிநாதனை அபிஷேகம் தரிசனம் செய்து அந்ததீர்த்தத்தை இங்கிருந்து பிடித்துச் சென்று மாடுகள்மீது தெளிக்க நோய்நொடிகள் துர்தேவதைகள் விலகிப்போகும் என்பது மக்களின் உறுதிப்பாடு. மாட்டுப்பொங்கல் அன்று பாலபிஷேகம் செய்து அந்தப் பாலை எடுத்துச் சென்று மாட்டுக்கு பொங்கல் வைத்துப் படைப்பது வழக்கம்.
 கால்நடைகளுக்கு நோய் என்றால், ஸ்ரீகோபிநாத சுவாமியை வேண்ட, வாயில்லா ஜீவனைக் காத்தருள்வார் என்பர். மாடுகள் சரிவர உணவெடுக்காமலிருந்தால் ஸ்ரீகோபிநாத ஸ்வாமியை வணங்கி, மலையில் உள்ள தீர்த்தம் அல்லது ஒரு பிடி புல்லை எடுத்துச் சென்று, பசுக்களுக்குத் தர மாடுகள் சரியாகும். இவருக்குப் பால் மற்றும் தயிர் அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் யாவும் நடந்தேறும்; வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது மக்களின் உறுதி.
 திண்டுக்கல் -பழநி சாலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் கோபிநாத மலை அமைந்துள்ளது.
 தொடர்புக்கு 79046 57671 / 96005 19180.
 - ஆர். அனுராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com