பொருநை போற்றுதும்! 23 - டாக்டர் சுதா சேஷய்யன்

1925-ஆம் ஆண்டு ஜூன் 16 -ஆம் தேதி, தமிழ் ஸ்வராஜ்யா நாளிதழில், புதுச்சேரி பாரதிதாசன் அவர்கள் கவிதையொன்றைப் படைத்திருந்தார்.
பொருநை போற்றுதும்! 23 - டாக்டர் சுதா சேஷய்யன்

1925-ஆம் ஆண்டு ஜூன் 16 -ஆம் தேதி, தமிழ் ஸ்வராஜ்யா நாளிதழில், புதுச்சேரி பாரதிதாசன் அவர்கள் கவிதையொன்றைப் படைத்திருந்தார். அந்தக் கவிதையிலிருந்து சில வரிகள்:
 ..............................நாம் என் செய்வோமால்
 நலம் விளைக்கும் கற்பகத்தைப் புது நினைப்புக்
 குன்றத்தை, குன்றம் சார் குளிர் புனல்தான்
 கொண்டதுவோ பகைவர் உளம் குளிர்ந்ததேயோ?
 குன்றம் சார்ந்த குளிர்புனலான பொருநை அப்படி யாரைக் கொண்டுவிட்டாள்? என்னதான் செய்துவிட்டாள்? பொருநைக் கரையோரமாகவே அவளுடைய ஊற்றுக்கண் நோக்கி நகர்ந்ததுபோல, வரலாற்றின் கரையோரமாக 1920 -களின் தொடக்ககாலத்துக்கு நகர்வோம்.
 மதராஸ் ஜார்ஜ் டவுன் பகுதியிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது "தேச பக்தன்' இதழ். இந்த இதழில் வெளியான தலையங்கம் ஒன்றைக் குறித்து ராஜதுவேஷ குற்றம் சாட்டி, இதழின் கூட்டு ஆசிரியர்களான பி.வி.ராஜகோபாலாசாரி, டி. மகாலிங்க ஐயர், வி.வி.எஸ்.ஐயர் ஆகியோர் மீதும், இதழின் சொந்தக்காரரான நாகேஸ்வர சாஸ்திரி மீதும், மதராஸ் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரúட் ஜாமீனில்லாத கைது வாரண்ட் ஒன்றை, 1921, செப்டம்பர் 9 -ஆம் நாள் பிறப்பித்தார். மற்ற மூவரும் அதே நாளில் கைது செய்யப்பட, வெளியூர் சென்றிருந்த வி.வி.எஸ். ஐயர் மட்டும் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
 அது 1921,செப்டம்பர் 11. போலீஸாரோடு செல்வதற்கு முன், கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த தம்முடைய நண்பர் பாரதியாரைச் சந்தித்தார் ஐயர். "என்ன பாரதி, மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறாயாமே.. உடம்பைத் தேற்றிக் கொள்ள வேண்டாமா?' என்று அன்பும் கனிவும் தோழமையும் பொங்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
 அடுத்த நாள் பொழுது விடிவதற்கு முன்பாக, இரவே பாரதி காலமானார். சுப்பிரமணிய பாரதி என்னும் செல்வத் திருமகன் நிலவுலகை நீத்தபோது, பொருநைத் தாய் பேதலித்திருக்கவேண்டும். அந்தப் பேதலிப்பு, சுப்பிரமணிய ஐயர் என்னும் வி.வி.எஸ். ஐயரின் மறைவுவரை தொடர்ந்துவிட்டது போலும்!
 மேற்கூறிய "தேசபக்தன்' வழக்கின் விசாரணை, செப்டம்பர் 12 -ஆம் தேதி தொடங்கியது. மற்ற மூவருக்கும் தொடக்கத்தில் வழக்கறிஞர்கள் இருந்தார்கள்; ஐயருக்கு இல்லை. 1920-இல், ஐயர் வேலைக்குச் சேர்ந்தபோது, தேசபக்தன் இதழை நடத்தியவர் எம்.எஸ். காமத். ஆனால், பொருளாதார நெருக்கடி காரணமாக, 1920-இல் முடிவிலேயே நாகேஸ்வர சாஸ்திரிக்கு இதழை விற்றுவிட்டார். சாஸ்திரியோடும் சாஸ்திரியால் நியமிக்கப்பட்ட பிற ஆசிரியர்களோடும் ஐயருக்கு ஒத்துப்போகவில்லை. 1921, ஆகஸ்ட் 28 -ஆம் நாள் பத்திரிகைப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்; தாம் விலகியதை அன்றைய தேதியிலேயே அறிவித்தும்விட்டார்.
 இதற்கிடையில், 1921, மே மாதம் 6 -ஆம் நாள் வெளியான தலையங்கம் குறித்துத்தான், வழக்கும் வாரண்டும்! செப்டம்பர் 12- ஆம் நாள் தொடங்கிய வழக்கு விசாரணை, 17-ஆம் நாள் தொடர்ந்தபோது, வழக்கறிஞர்கள் வைத்திருந்த மூவரும், தலையங்கம் வெளியிட்டதற்காக மன்னிப்புக் கோரி விடுதலை பெற்றுக்கொண்டார்கள். ஐயர்மீது மட்டும் வழக்கு நின்றது. மே மாதம் முதல் வாரம் முழுக்கத் தாம் விடுமுறையில் இருந்ததைச் சுட்டிக் காட்டித் தாம் அத்தலையங்கத்தை எழுதவே இல்லையென்பதைத் தெரிவித்த ஐயர், எப்படியாயினும் இந்தியாவின் பாரமார்த்திகப் பெருமையைக் காப்பாற்றுவதற்கான அமைப்பிலேயே தம்முடைய எழுத்துகள் இருந்ததையும் கூறினார். இந்தியர்களுக்குள் ஒற்றுமை ஏற்படுவதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்னும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அப்போதைய அரசாங்கம், குறிப்பிட்ட தலையங்கத்தை ஐயர் எழுதவில்லையென்றாலும், ஆசிரியர் குழுவின் தார்மீகப் பொறுப்பு இவருக்கு உண்டு என்று வாதாடியது. இந்தியாவின் நலனையும் விடுதலையையும் உயிர்மூச்சாகக் கொண்ட ஐயர், மன்னிப்புக் கோர மறுத்தார். இதுவே அரசாங்கத்துக்கு வசதியானது. மற்றவர்கள் மன்னிப்புப் போர்வையில் தப்பித்துக் கொள்ள, தவறே செய்யாத ஐயருக்கு, 9 மாதங்கள் காவல் என்னும் தீர்ப்பு, செப்டம்பர் 19 -ஆம் நாள் வெளியானது. தன்னுடைய கணவர் நாட்டுத் தொண்டுக்காகச் சிறை செல்வதற்குத் தான் மகிழ்வதாகக் கூறி மனைவி பாக்கியலக்ஷ்மி அம்மாள் கை கூப்ப, அப்பாவின் காலில் விழுந்து மகள் சுபத்திரா வணங்க, மகன் கிருஷ்ணமூர்த்தி "மகாத்மா காந்திக்கு ஜே' என்று கோஷமிட, போலீஸாரால் ஐயர் அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் பெனிடென்ஷியரி என்றழைக்கப்பட்ட சென்னை மத்திய சிறைக்கும், பின்னர் பெல்லாரி மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
 பெல்லாரி சிறையிலிருந்து ஐயர் விடுதலையான பின்புதான், விதியின் ஆர்ப்பாட்டம் அதிகமானது. தேசியச் சிந்தனையை நவீன முறைமைகளையும் ஒருசேர போதிக்கக்கூடிய கல்விக்கூடம் ஒன்றை நிறுவவேண்டும் என்னும் ஆசை இவர் உள்ளத்தில் முகிழ்த்திருந்தது. சென்னைக் கோடம்பாக்கம் தொடங்கி பல்வேறு ஊர்களுக்கும் சென்று பார்வையிட்டார். இந்த சமயத்தில்தான், திருநெல்வேலி, கோவில்பட்டிக்குச் சென்ற ஐயர், அருகிலிருக்கும் கல்லிடைக்குறிச்சிக்குச் சென்றார். அங்கிருந்த ஆசிரியர்கள், தாங்கள் நடத்திவந்த திலகர் வித்யாலயம் என்னும் பள்ளிக்கூடத்தை எடுத்து நடத்தும்படி ஐயரை வேண்ட, தம்முடைய நோக்கத்திற்குப் பயன்படும் என்பதால் ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர், தாமிரவருணிக் கரையில், சேரன்மாதேவியில் அழகான இடமொன்று விலைக்கு வர, கையில் காசில்லாத நிலையிலும், கானாடுகாத்தான் வயி.சு.சண்முகம் செட்டியாரின் ஆதரவில் அதைப் பெற்றார். கல்விக்கூடம் தொடங்கும் அவா, பாரத்வாஜ ஆச்ரமமாகவும் தமிழ் குருகுலமாகவும் மலர்ந்தது. இப்படித்தான், திருச்சி வரகனேரி வேங்கடேச ஐயர் காமாக்ஷி அம்மாளின் மகன் சுப்பிரமணிய ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியன் என்பதன் சுருக்கமே வி.வி.எஸ்), சேரன்மாதேவி வாசியாக, பொருநைத் தாயின் ஸ்வீகாரப் புத்திரன் ஆனார்.
 தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com