மக்களை மகிழ்விக்கும் மகரசங்கராந்தி!

மக்களை மகிழ்விக்கும் மகரசங்கராந்தி!

ஒன்பது கோள்களில் சூரியனே ஆதாரமாகவும்; அதனை மையப்படுத்தியே அனைத்து பிரபஞ்ச சக்திகளும் இயங்குகிறது என நம் மகரிஷிகள், நம் முன்னோர்கள் விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ந்து அதனை

ஒன்பது கோள்களில் சூரியனே ஆதாரமாகவும்; அதனை மையப்படுத்தியே அனைத்து பிரபஞ்ச சக்திகளும் இயங்குகிறது என நம் மகரிஷிகள், நம் முன்னோர்கள் விஞ்ஞான அடிப்படையில் ஆராய்ந்து அதனை ஒட்டியே நமக்கு பல பண்டிகைகள் ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வரும் சூரியன் தனது பயணத்தை தை மாதப் பிறப்பன்று, வடதிசை நோக்கி பயணிக்கத் தொடங்குகிறார். இதனை உத்திராயண புண்ணியகாலம் என்று கூறுவர்.
 சூரியன் மேஷ ராசி முதல் மீன ராசி வரையிலுள்ள 12 ராசிகளில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்கிறார். சித்திரை மாதத்தில், மேஷ ராசியில் சூரியன் உச்ச நிலையிலும், ஐப்பசி மாதத்தில் பலவீன நிலையிலும் உள்ளார். இதனை நீச்சமடைதல் என ஜோதிடர்கள் கூறுவார்கள். சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாளே மகரசங்கராந்தி ஆகும். தை மாதம் சூரியனை வழிபட்டால் சகல பாக்கியங்களும் பெருகும் என சாஸ்திரங்கள் கூறுகின்றது. உத்திராயணம் சுபகாரியங்கள் செய்வதற்கு சிறந்தது. தான் நினைத்தபோது இறக்கலாமென்ற வரம் பெற்ற மஹாபாரதச்சிற்பி பீஷ்மப் பிதாமகர் தட்சிணாயனத்தில் வீழ்ந்தாலும், உத்திராயணம் வரை காத்திருந்து சொர்கலோகம் அடைந்தார் என பாரதம் போற்றுகிறது.
 ஆடியில் விதைத்தால் ஆறு மாத காலம் சென்று தை மாதம் அறுவடை செய்யலாம். நெல்லே நம் உணவிற்கு முக்கிய வாழ்வாதாரம் ஆகையால் அதனை விற்று நம் கையில் பணம் புறளும் காலத்தில் தான் நம்மால் மகிழ்ச்சியாய் எந்த பண்டிகையையும் கொண்டாட முடியும். இதுவே "தைப்பிறந்தால் வழிபிறக்கும்" என்ற பழமொழி வழக்கில் வந்துள்ளது.
 வயலும் வயல் சார்ந்த இடங்களுக்கு மருதநிலமெனப் பெயர். இதற்கு தெய்வமாக இந்திரனையும்; உலக உயிர்கள் சுபிட்சமாக வாழ மழையைத் தரும் சூரியனையும், நிலத்தினை உழுவதற்கு பயன்படும் காளை மாடுகளையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்து மூன்று நாள்கள் தென் இந்தியாவில்; முக்கியமாக நம் தமிழகத்தில் தைப்பொங்கல் திருவிழாவாக கொண்டாடி மகிழ்கிறார்கள். ஏற்றம் தரும் ஏர் வழிபாட்டைப்பற்றி வள்ளுவரும் போற்றுகின்றார்.
 தைப்பொங்கல் முதல் நாள் சூரியனை, பொங்கலிட்டு நன்றியுணர்வுடன் வழிபாடு செய்கிறோம். அன்று சூரியன் உதித்தபின் வெட்ட வெளியில் அரிசி மாவில் அழகான கோலமிட்டு, களிமண்ணால் ஆன புதிய அடுப்பினை தயார் செய்து, புதுப்பானை வைத்து அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு பசுமையான மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்தினை அந்த பானையின் கழுத்தில் கட்டி, கரும்பினை இருபக்கமும் வைத்து, வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றுகூடி சூரிய பகவானுக்கு புத்தரிசிப் பொங்கலைப் படைத்து, "பொங்கலோ பொங்கல்" என கூவும் போது ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாதது. இந்த சமயத்தில் தான் இளஞர்களின் வீர விளையாட்டான மஞ்சு விரட்டு என்ற காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
 இரண்டாம் நாள், நமக்கு உதவும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து வணங்குகிறார்கள். மூன்றாம் நாள், கன்னிப்பொங்கல் என்று அனைத்துப் பெண்களும் முக்கியமாக புகுந்தவீடு சென்ற திருமணமான பெண்கள்; தன் பிறந்த வீட்டு உறவு மேம்பட, தன் சகோதரர்கள் நல்ல முறையில் நோயற்று சுபீஷமாக வாழ, "கனுப்பொங்கல் வைத்தல்' என தஞ்சை தரணியில், காவிரிக்கரையில் பல நிறங்களுடன் கூடிய சாதத்தை காக்கைக்கு மஞ்சள் இலையில் வைத்து படைத்து அங்கே கும்மியடித்து, குலவை பாடி மகிழ்வார்கள்.
 தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் "காணும் பொங்கல்' என உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கும், சுற்றுலாத்தலங்களுக்கும் நண்பர்களுடன் சென்று கண்டு மகிழ்கிறார்கள். இதில் முக்கியமாக, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் ஒரு திருவிழா இந்த தைப்பொங்கல் திருவிழா மட்டுமே!
 வட இந்தியாவில் இதனை மகர சங்கராந்தி என்ற பெயரில் சிறப்பாக சூரியனை அனைத்து மக்களும் வழிபடுகின்றனர். உலகப் பிரசித்தி பெற்ற கும்பமேளா இந்த நாளில் தொடங்குகிறது. மஹாவிஷ்ணு ஒரு குடத்தில் அமிர்தத்தை எடுத்துக் கொண்டு செல்லும்போது நான்கு துளிகள் இந்த பாரத பூமியில் ப்ரயாக், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைனி ஆகிய ஊர்களில் விழுந்தது. இதை நினைவு கூறும் முகமாக மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு ஊரிலும் இதனை கும்பமேளா என்றும்; 12 வருடத்திற்கு ஒருமுறை இதனை மஹாகும்பமேளா என்றும் கொண்டாடுகிறார்கள்.
 14.1.2019 திங்கள் அன்று போகிப்பண்டிகையில் ஆரம்பித்து, 15.1.2019 செவ்வாய் அன்று தைப்பொங்கல் விழாவும், 16 மற்றும் 17 தேதிகளில் முறையே மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் என தொடர்ந்து வருகிறது. "பொங்கலோ.. பொங்கல்!'

 15.1.2019
 பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்:
 காலை 8.00 - 9.00 மணி (அல்லது) 10.30 - 11.30 மணி
 

 - எஸ்.எஸ். சீதாராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com