விருத்திக்கு வித்திடும் விருந்து

தற்காலத்தில் மண்டபங்களில் திருமணம் பிற நிகழ்வுகளில் ஊரழைத்து நடக்கும்..
விருத்திக்கு வித்திடும் விருந்து

தற்காலத்தில் மண்டபங்களில் திருமணம் பிற நிகழ்வுகளில் ஊரழைத்து நடக்கும் பெரிய விருந்துகளில் வாசலில் நிற்கும் காவலர்கள் பசியோடு பரிதாபமாக யாசிப்பவர்களை யோசிக்காது ஏசி விரட்டுவர். உல்லாச கார்களில் தள்ளாடி வருவோர் நிலையில் தட்டுகளில் பரிமாறும் வகைவகையான தொகை தொகையான உணவுகளைத் தொட்டு தொட்டு பிட்டு சாப்பிட முடியாமல் பெருமூச்சு விட்டு இனிப்பு கொதிப்பு கொழுப்பு சாப்பிட கூடாது என்று எக்காளமாய் சொல்லி எழுந்து செல்ல குப்பையில் கொட்டப்படும் கோர காட்சியைக் காணும் பொழுது ஈரம் இரக்கமுள்ள நெஞ்சு துடிக்கிறது. இவ்விருந்துகள் விரும்பத்தகாத இரும்பு இதயம் படைத்த இரக்கமற்ற அரக்க குணம் உடையவர்களின் கோமாளி கூத்து. 

உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள். அல்லாஹ் அளவு மீறியவர்களை நேசிக்க மாட்டான் என்று எச்சரிக்கிறது எழில் மறை குர்ஆனின் 7}31 ஆவது வசனம். அளவு மீறுதல் என்ற சொற்றொடர் ஆடம்பரமாக அளவின்றி உணவைத் தயாரித்து நியாயமின்றி விரையமாக்கி வீணாக்கி வீசி எறிவதைக் குறிக்கிறது. இச்சொற்றொடர் மீதூண் உண்டு மீளா நோய்க்கு ஆளாகி அவதியுறுவதைத் தடுக்க தரப்படும் எச்சரிக்கை. அளவுக்கதிமாக விரையம்  செய்வோர் படைத்தவனுக்குப் பணியாத சைத்தானின் சகோதரர்கள் என்று சாடுகிறது. 17}27 ஆவது வசனம். ஒரு பருக்கையை கூட விழுந்து விட்டதே என்று விடக்கூடாது என்ற கோமான் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை. உங்களில் ஒருவர் சாப்பிடும்பொழுது ஒரு துண்டு உணவு கீழே விழுந்துவிட்டால் எடுத்துக் கழுவி சுத்தமாக்கி சாப்பிடவேண்டும். அறிவிப்பவர் } அனஸ் (ரலி)  நூல் - முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

இல்லற வாழ்வின் நல்லறங்களில் ஒன்று நல்ல முறையில் நாடி வரும் விருந்தினர் தேடிய உணவைப் பரிமாறி கூடி உண்பது. அவ்விருந்தினர் பசி தீர்ந்து பக்குவமாய் படைத்தவனுக்கு நன்றி நவிலும் பொழுது அந்நன்றியின் பயன் விருந்து கொடுத்தவன் வாழ்வில் என்றும் ஏற்றம். உண்டவர்கள் அருந்திய உணவுக்கு அல்ஹம் துலில்லாஹ் என்று அல்லாஹ்விற்கு நன்றி சொல்லும் பொழுது நம் நெஞ்சைத் தொட்டுப்பார்த்தால் தோன்றும் இன்பம் இம்மை மறுமை இரண்டிலும் நமக்கு நல்வாழ்வை நல்கும். ஆயுள் நீட்டிக்கும் அமிர்தம் ஆனாலும் விருந்தாளியை வீட்டிற்கு வெளியில் அமர வைத்துவிட்டு வீட்டில் உள்ளோர் மட்டும் உண்பது கூடவே கூடாது. வீட்டில் இருப்பதை விருந்தாளியோடு பங்கிட்டு உண்பதே விருந்தோம்பலின் உயர்வு. 

நாளும் விருந்தை எதிர்பார்த்து விருத்தினருக்கு விருந்து படைப்பது விரும்பத்தக்க விழுமிய குணம். அக்குணமுடையாரை எத்துன்பமும் துன்புறுத்தாது. நாளும் விருந்தாளிக்கு விருந்து கொடுத்து அதன் பின்னரே உணவு உண்ட இப்பாஹீம் நபி அவர்களை ஏக இறை கொள்கையை ஏற்காத  கொடுங்கோல் மன்னன் நம்ரூது நெருப்பு குண்டத்தில் வீசிய பொழுது நெருப்பு அவர்களைத் தீண்டவில்லை. 

உண்டு பசி தீர்த்து செல்லும் விருந்தினரை உபசரித்து அனுப்பி அடுத்த விருந்தினரை ஆவலோடு எதிர்பார்ப்பவர் மறுமையில் மட்டற்ற பேறுகளைப் பெற்று  பேரின்பமாய் வாழ்வார். விருந்தினர் முகம் கோணாது உபசரிக்க வேண்டும். விருந்தினருக்கு  விருந்து படைப்பவரின் விளைநிலத்தில் விதை நட்டு வித்திட்டதைவிட விளைச்சலில் விருத்தியைக் காணலாம். 

வானவர்கள் மனித உருவில் விருந்தினர்களாக வந்தபொழுது விருந்தினரைக் கண்ணியப்படுத்தும் இறைகட்டளைப்படி ஒவ்வொரு விருந்தாளிக்கும் ஓர் ஆட்டின் இறைச்சியைப் பொரித்து வைத்தார்கள் இப்ராஹீம் நபி. பின்னரும் விருந்தாளியைக் கண்ணியப்படுத்த கட்டளை பிறப்பிக்கப்பட ஒவ்வொருவருக்கும் ஒரு காளை கன்றின் மாமிசத்தைப் பொரித்து வைத்தார்கள். அதன்பின் அதே கட்டளை மீண்டும் இடப்பட்டதும் திகைத்த இப்ராஹீம் நபி உணவைச் சுவையாய் வகையாய் வழங்குவது விருந்தினரை உபசரிக்கும் உரிய முறையன்று என்று உணர்ந்து வந்த விருந்தினர்களுக்கு இப்ராஹீம் நபி நேரடியாக தானே பணிவிடை செய்து விருந்து பரிமாறினார்கள். அப்பொழுது விருந்தினரைக் கண்ணியப்படுத்தியதாக இறை செய்தி கிடைத்ததைச் செம்மறை குர்ஆனின் 51} 24 ஆவது வசனம் தெரிவிக்கிறது. உணவு அளிப்பது மட்டும் விருந்தினரை உபசரிப்பதாக ஆகாது. பணிவோடு பாங்காக பரிமாறுவதே விருந்தினரைக் கண்ணியப்படுத்துவது என்று பெரியோர்கள் கூறுவர். 

இதனை, வலியுறுத்தும் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழிகள். யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ அவர் தன்னிடம் வரும் விருந்தினரைக் கண்ணியப்படுத்த வேண்டும். அறிவிப்பவர் - அபூஹுரைரா (ரலி) நூல்} புகாரி, முஸ்லிம். உணவு தட்டு வைக்கப்பட்டால் அத்தட்டு திரும்ப எடுக்கப்படும் வரை எவரும் எழ கூடாது. ஒருவருக்கு வயிறு நிரம்பி விட்டாலும் கூட்டத்தினரின் வயிறு நிரம்பும்வரை அவரின் கையைத் தட்டிலிருந்து எடுக்கக் கூடாது. ஏனெனில் அவருடன் சாப்பிடுபவருக்கு உணவு தேவைப்படும் நிலையில் வெட்கப்பட்டு அவரின் கையை எடுத்துவிடக் கூடும். அறிவிப்பவர் } இப்னு உமர் (ரலி) நூல்} இப்னு மாஜா.

ஆடம்பர விருந்தெல்லாம் விருந்தல்ல. வீடு தேடி வரும் தெரிந்தவர் தெரியாதவர் அனைவருக்கும் பசி தீர பரிமாறி உண்ண செய்து பசிபோக்கும் விருந்தே விருத்திக்கு வித்திடும் விருந்து என்பதை உணர்ந்து உண்மையான பசியாளிக்கு உணவு அளிப்போம். உயர்வு பெறுவோம்.

- மு.அ.அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com