Enable Javscript for better performance
பொருநை போற்றுதும்! 50 டாக்டர் சுதா சேஷய்யன்- Dinamani

சுடச்சுட

  

  பொருநை போற்றுதும்! 50 டாக்டர் சுதா சேஷய்யன்

  By DIN  |   Published on : 19th July 2019 10:35 AM  |   அ+அ அ-   |  

  sudha

  திருக்கோயிலினுள் நுழைந்து, அருள்மிகு கைலாயநாதரை வலம் வரும்போது, வடகிழக்குப் பகுதியில், தனிச்சந்நிதியில் அருள்மிகு பதரிவனேச்வரர்; இவரே இலந்தைநாதர் (பதரி என்பது இலந்தையின் வடமொழிப் பெயர்; பதரிவனம் = இலந்தைக் காடு). கைலாயநாதர், இலந்தை நாதர் தவிர, உண்ணாமுலை நாயகி உடனாய அண்ணாமலையார், விசாலாட்சி உடனாய காசி விசுவநாதர், மீனாட்சியம்மை உடனாய சுந்தரேச்வரர் என்று இன்னும் மூன்று சிவலிங்க ஸ்வரூப தெய்வத் திருமேனிகளுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. ஆக, பிரம்மதேசத் திருக்கோயில் தரிசனம், பஞ்சலிங்க தரிசனப் பலன்களைத் தருகிறது.
   பிரம்மாண்ட ஏழு நிலை ராஜ கோபுரம், இந்தக் கோபுரத்தின் நிழல் எதிரிலுள்ள தெப்பக்குளத்தில் விழுகிற அமைப்பு, ஏகத்துக்கும் ஓவிய மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் இப்படி, பற்பல சிறப்புகள். ஓவிய மற்றும் சுதைச் சிற்பப் பணிகள் சோழப் பேரரசு காலத்தவை என்றும், மர வேலைப்பாடுகள் சேர மன்னர் காலத்தவை என்றும், மண்டபத் திருப்பணிகள் பாண்டியப் பேரரசு காலத்தவை என்றும், மதில்சுவர் பணிகள் நாயக்க மன்னர் காலத்தவை என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ராஜகோபுரம் தவிர, மத்திய கோபுரமும் ஐந்து நிலை மேலக்கோபுரமும் கண்ணைக் கவர்கின்றன. கிழக்கு ராஜகோபுரமும் மேலக்கோபுரமும் மதில்களும் விசுவநாத நாயக்கரால் கட்டுவிக்கப்பெற்றவையாகும். கோயிலில் ஏழு விமானங்கள். கோயிலின் வடமேற்குப் பகுதியில், குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்றால், கோபுரங்கள் மூன்றையும் விமானங்கள் ஏழையும் ஒருசேர தரிசிக்கலாம்.
   மூலவருக்கு எதிரில், சலங்கையும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு கனஜோராக ஏழடி உயர நந்தி அமர்ந்திருக்கிறார்; சலங்கை, சங்கிலி உட்பட ஒரே கல்லில் செதுக்கப்பட்டவர்; தர்மநந்தி என்றே இவருக்குத் திருநாமம்.
   திருக்கோயிலின் வடகிழக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி. ஒய்யாரமாகக் காட்சியளிக்கும் அருள்மிகு பெரியநாயகி.
   அம்பாள் சந்நிதிக்கருகே மற்றுமொரு விசேஷ சந்நிதி. உயரமான கங்காளநாதர். இவரின் காலடியில் பல்வேறு வகையான இசைக்கருவிகளை இசைத்தபடியே சொக்கியிருக்கும் முனிவர்கள். சந்நிதியின் சுவரில், கங்காளநாதருக்குப் பின்புறம், சூரியதேவன், குதிரைமீது ஆரோகணித்த குபேரன், அன்னத்தின்மீது ஆரோகணித்த பிரம்மதேவன், சந்திரன், ஐராவத யானைமீது ஆரோகணித்த இந்திரன், கருடன்மீது ஆரோகணித்த மஹாவிஷ்ணு, மயில்மீது ஆரோகணித்த முருகன், மூஷிகவாகனராக விநாயகர், லோபாமுத்திரை உடனாய அகத்தியர், கின்னரர்கள், கிம்புருஷர்கள், அப்சரப் பெண்கள், அக்னிதேவன், வாயுதேவன் உள்ளிட்ட தேவர்கள் என்று ஏகக்கூட்டம். இந்தக் கூட்டத்தில் சூரியன் மட்டும், வலப்பக்கம், இடப்பக்கம் என்று இரண்டு இடங்களிலும் நிற்கிறார். ஒரு சூரியன்தானே, ஏன் இரட்டைப் பிரதிநிதித்துவம்?
   உத்தராயண மற்றும் தட்சிணாயணத் தொடக்க புண்ணியகாலங்களில், சூரியக் கதிர்கள் சுவாமியின் மீது விழுகின்றன. உத்தராயணச் சூரியன், தட்சிணாயணச் சூரியன் என்று இரண்டு நிலைகளைக் காட்டுவதற்காகத்தானோ மேற்படி இரட்டைப் பிரதிநிதித்துவம்!
   யாழிகள் செதுக்கப்பட்ட தூண்கள், வரிசையாக அமைந்திருக்கும் யாழி மண்டபம், அம்மன் சந்நிதி முகப்புப் பகுதியிலிருக்கும் சோமவார மண்டபம், நடராஜப் பெருமானின் திருவாதிரை மண்டபம் என்று சிற்பக் கலையின் சிறப்பு நுட்பப் பொக்கிஷங்களாகத் திகழும் மண்டபங்கள்தாம், பிரம்மதேசச் சிவன் கோயிலின் பெருஞ்சிறப்பு. யாழிகளின் வாய்களுக்குள் ஆடியோடும் கல்லுருண்டைகள், குதிரை வீரர்கள், பாம்புகள், பறவைகள், குரங்குகள், யானை வீரர்கள் என்று ஒவ்வொரு சிற்பத்திலும் அழகு விளையாடுகிறது. சோமவார மண்டபத்தின் இசைத்தூண்களைப் பற்றிப் "பொருநை’ என்னும் தம்முடைய நூலில் குறிப்பிடுகிறார் டாக்டர். மா. இராசமாணிக்கனார்.
   ஸ்ரீ ஆதிசங்கராசார்ய மூலாம்னாய ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் மூன்றாவது பீடாதிபதியான ஸ்ரீ சர்வக்ஞ ஆத்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள், இந்தத் திருத்தலமான பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர்.
   திருப்புடைமருதூர் பகுதியில் உத்தரவாஹினியாக, அதாவது, வடக்கு நோக்கிப் பாயும் பொருநையாள், திருப்புடைமருதூர் தாண்டியதும், வலம் சுழித்துக் கிழக்கு முகமாகத் திரும்புகிறாள். இவளின் கை பிடித்துக் கொண்டு, கரைகள் வழியாகவே பயணித்தால், நெல்லைச் சீமையின் பெருமிதங்களாகத் திகழும் ஊர்கள் பலவற்றைக் காணலாம். முக்கூடல், சேரன்மாதேவி, பத்தமடை, கோடகநல்லூர், கிரியம்மாள்புரம், மேலச் செவல், தருவை, கோபாலசமுத்திரம், அரியநாயகிபுரம், நாரணம்மாள்புரம் என்று வரிசை கட்டி நிற்கும் வண்ணச் சிற்றூர்கள்..
   - தொடரும்...
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai