Enable Javscript for better performance
மனமே முருகனின் மயில் வாகனம்!- Dinamani

சுடச்சுட

  

  மனமே முருகனின் மயில் வாகனம்!

  By DIN  |   Published on : 19th July 2019 10:43 AM  |   அ+அ அ-   |  

  vm5

  "குழந்தை' என்று கொஞ்சுவோருக்கு குழந்தையாகவும், ஆசானாகவும், தாயாகவும்; கேடு செய்ய நினைத்தாலோ காலனாகவும்; தஞ்சம் என்று அஞ்சி வருவோர்க்கு அஞ்சேல் என்று அபயக்கரம் நீட்டுபவனாகவும் விளங்கும் அவனே என்னப்பன் அழகன்முருகன், ஞானஸ்கந்தன்!
   வெள்ளி பனித்தலைவன் சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்த ஆறு பொறிகளை கார்த்திகைப் பெண்கள் பெற்று அவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஏற்ற சக்தி இந்த கார்த்திகை திருநட்சத்திரத்தில் கிடைக்கப்பெற்றது. தட்சிணாயனம் இந்த ஆடியில் தான் ஆரம்பிக்கின்றது; பெண் கடவுள்கள் ஆடியையும் ஆண் கடவுள்கள் மார்கழியையும் தனக்காக எடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் எல்லாவற்றிலும் சற்று வித்தியாசமாக இருக்கும் ஆறுமுகனோ ஆடிமாதக் கிருத்திகையை தனக்கான நாளாக தேர்ந்தெடுத்தான். நட்சத்திர கூட்டத்தில் "திரு' அடைமொழியுடன்; குறிப்பிடும்படியாக "திருவாதிரை' மற்றும் "திருக்கார்த்திகை' இரண்டு மட்டுமே அழைக்கப்படுவது சிறப்பானதாகும்.
   வறுமையில் வாடும் புலவரிடம், வறுமையை வென்ற புலவர் தான் எப்படி இந்த செல்வத்தை, எந்த தனவந்தரிடம் சென்று பெற்றேன், என்ற செய்தியை பாடலாகக் கூறி ஆசுவாசப் (ஆற்றுப்) படுத்துவர். இவ்வகையில் அமைந்த நூல்களை சங்க காலத்தில் "ஆற்றுப்படை" என்பர். இதனை மையமாகக் கொண்டு நக்கீரன், ஆறுபடை வீடுகளில் உறைந்த முருகனை சரணடைந்தால்; இன்ப மயமான ஆனந்த நிலையை அடையலாம் என்ற பொருள்பட "திரு முருகாற்றுப்படை" என்ற ஒரு பாடல் நூல் இயற்றினார். போர் புரியச் செல்லும் தளபதி, தன் படைகளுடன் தங்கி இருக்கும் இடத்திற்குப் "படைவீடு' எனப் பெயர். சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தங்கி இருந்த படைவீடு தான் திருச்செந்தூர். ஆதலால் முருகனின் மற்ற ஐந்து திருத்தலங்களையும் இத்துடன் சேர்த்து "ஆறு படை வீடு" என அவர் அழைத்தார். இப்படி இருந்த ஆற்றுப்படை ஆறுபடையாக மருவியுள்ளது.
   ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று; ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று; கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று; குன்றுருக வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று; மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்று; வள்ளியை மணம் புனர வந்த முகம் ஒன்று; ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்; ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே! "
   - இப்பாடலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஒரு பொருளும்; உள் சென்று பார்த்தால் ஒரு பொருளும் தெரியவரும். என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடிடும் பிள்ளையான நீ எனக்கு குருவாய் வந்து உபதேசம் செய்து; என் வினைகளையெல்லம் தீர்த்து; என் உள்ளே ஒளிந்துள்ள மாயையான ஆசாபாசங்களை உன் வேலினால் உருவி எடுத்து அழித்து, என் உள்ளே விரிந்து கிடக்கும் அகங்காரத்தை அடக்கி பின் உன்னோடு ஐக்கியப்படுத்தும் ஆறுமுகனே; அண்ணாமலையானுடன் அமர்ந்து அருளும் பெருமாளே என்று தன் திருப்புகழில் அருணகிரிநாதர் கதறுகிறார்.
   கந்தசஷ்டித் திருவிழாவின் போது அனைத்து முருகன் தலங்களிலும் சூரசம்ஹாரவிழா சிறப்பாக நடைபெறும். ஆனால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை; அதற்கு பதிலாக அந்த நாளில் புஷ்பாஞ்சலி நடத்துகிறார்கள். ஏனெனில் தேவர்களின் துயர் தீர்க்க செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த கந்தன்; வள்ளியை மணம்புரிய வேடர்களுடன் போர் செய்து பின்னர் திருத்தணியில் சினம் தணிந்தார் எனப்புராணம் கூறுகிறது. தேவர்களின் அச்சம் தணிந்ததாலும் அடியவர்களின் கவலை, துன்பம், பிணி மற்றும் நம்பி வந்தோர்க்கு நன்மை பயக்கும் ஆற்றல் கொண்டவராக சுப்ரமண்யர் இருப்பதாலும் இத்தலத்தை தணிகை என்பர்.
   பாடல் கலையின் மும்மூர்த்திகளில் ஒருவரும், சிறந்த அம்பாள் பக்தருமான முத்துஸ்வாமி தீட்சிதர், சுப்ரமண்ய சுவாமியின் மீது அதீத பக்தியுடையவர். இவர் காசியில் குருகுலவாசம் செய்தபோது அவரது குரு தான் சித்தியடைவதற்கு முன் நீ உன் ஊருக்குச்செல்; செல்லும் பாதையில் திருத்தணிக்கு மறக்காமல் செல் எனக் கூறினார். அவரது ஆணையை ஏற்று தீட்சிதரும் அடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் நன்நீராடி பின் மலைமீது முருகனை தரிசிக்கச்சென்று கொண்டிருக்கும்போது ஒரு வயோதிகர் "முத்துசாமி' என அழைத்து ஒரு கற்கண்டை இவர் வாயில் போட்டுவிட்டு மறைந்து விட்டார். வந்தவர் வேலனே என உருக்கிப்போய்; மாயாமாளவ கெளளை என்ற சிறப்பான ராகத்தில் "ஸ்ரீ நாதாய குருகுஹோ" என மிக அருமையாக திருத்தணி முருகனை வர்ணிக்கின்றார். அவர் தன் கீர்த்தனையில் "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே நமஸ்தே' என்று இருமுறை கூறுகிறார்.
   முருகன் வீற்றிருக்கும் தலங்களுக்கு முக்கியமாக பழனி மற்றும் திருத்தணிக்கு பக்தர்கள் விரதமிருந்து பல்வேறு வகையான காவடிகளை தூக்கிச்சென்று தன் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். பொதுவாக, ஆடிக்கிருத்திகை அனைத்து முருகன் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடினாலும்; திருத்தணி முருகன் கோயிலில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலம், சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்த ஜூலை மாதம் 26 -ஆம் தேதி ஆடிக்கிருத்திகை தெப்போற்சவத்துடன் திருத்தணியில் கொண்டாட இருக்கிறார்கள்.
   - எஸ். எஸ். சீதாராமன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai