புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 17

தம்மை விட்டுத் தப்பி ஓட நினைத்த யோனாவைக் கடவுள் மறக்கவில்லை. அவர் கடலில் மூழ்கிச் சாகாவண்ணம் கடவுள் ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிட ஏற்பாடு செய்கிறார்.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 17

தம்மை விட்டுத் தப்பி ஓட நினைத்த யோனாவைக் கடவுள் மறக்கவில்லை. அவர் கடலில் மூழ்கிச் சாகாவண்ணம் கடவுள் ஒரு பெரிய மீன் வந்து யோனாவை விழுங்கிட ஏற்பாடு செய்கிறார். அந்த மீனின் வயிற்றில் யோனா மூன்று இரவும் மூன்று பகலும் கழித்தார். அதன்பின் யோனாவை அம்மீன் உயிருடன் கரையில் கக்கியது.
 இரண்டாம் முறையாகக் கடவுள் யோனாவிடம், நினிவேக்குப் போய் அந்நகர மக்கள் மனம் மாறாவிட்டால் அழிந்துபடுவர் என்னும் செய்தியை அறிவிக்க அனுப்புகிறார். அரைகுறை மனத்தவராய் யோனா நினிவே நகருக்குச் சென்றார். இந்த சம்பவம் நடைபெற்றது யோப்பா பட்டணம் தான் (விவிலியத்தில் யோனா 1-ஆம் அதிகாரம்).
 புதிய ஏற்பாடு பகுதியில் இது முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.
 இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடு எழுந்து பரலோகத்துக்கு சென்றுவிட்டதாக விவிலியம் கூறுகிறது. அதற்கு பின்னர் அவருடன் இருந்த சீடர்களுள் ஒருவரான பேதுரு அதிகம் வாழ்ந்த இடம் இந்த யோப்பா பட்டணம் தான். விவிலியத்தில் அப்போஸ்தலர் 9-ஆம் அதிகாரம் 32 முதல் 43-ஆம் வசனங்களின்படி, 8 ஆண்டுகளாக கட்டிலில் கை, கால்கள் முடமாக இருந்த ஒருவரை நடக்க செய்தது, இறந்து போன தபீத்தாள் என்பவரை உயிரோடு எழுப்பியது போன்ற அற்புதங்களை பேதுரு செய்த இடமும் யோப்பா பட்டணம் தான்.
 யோவான் ஸ்நானகனின் வீடு: யோப்பா பட்டணத்தில் இருந்து எருசலேம் செல்லும் பாதையில் என்கரீம் நகரம் உள்ளது. கரீம் என்றால் எபிரேய மொழியில் திராட்சை நகரம் என்று பெயர். இந்த நகரம் தான் இயேசுவுக்கு திருமுழுக்கு வழங்கிய யோவான் ஸ்நானகனின் சொந்த ஊர். யோவான் ஸ்நாகனின் அம்மா பெயர் எலிசபெத். இயேசுவை விட 6 மாதம் மூத்தவர் யோவான். இயேசுவின் தாயான மரியாளின் உறவினர் தான் எலிசபெத். திருமணத்துக்கு முன்னரே தன் வயிற்றில் பரிசுத்தமான கர்ப்பம் உருவாகிவிட்டதை எலிபெத் வீட்டுக்குச் சென்று மரியாள் கூறியதாக விவிலியம் கூறுகிறது.
 மரியாளின் வீடு உள்ள நாசரேத்துக்கும், என்கரீம் நகருக்கும் இடையே 24 கி.மீ. தூரம் உள்ளது. அதேபோல இயேசு பிறந்தவுடன் ஏரோது குழந்தை இயேசுவை கொல்வதற்காக 2 வயதுகுள்பட்ட குழந்தைகளை கொல்ல ஏரோது உத்தரவிட்டிருந்தார். அப்போது இறைதூதரால் வழிநடத்தப்பட்டு பெத்லஹேமில் இருந்து எகிப்துக்கு யோசேப்பு, மரியாள், குழந்தை இயேசு செல்லும்போது எலிசபெத் வீட்டுக்கு வந்துவிட்டு தான் சென்றுள்ளனர்.
 யோவான் ஸ்நானகனுக்கு இரு வீடுகள் உள்ளன. ஒன்று வீடு. மற்றொன்று பண்ணை வீடு. பண்ணை வீட்டை திராட்சை பழங்களை பிழியும் போதும், கோதுமை அறுவடை காலங்களில் தங்குவதற்காகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்த இரு இடங்களில் உள்ள குகைகள் மீதும் இப்போது தேவாலயங்கள் கட்டப்பட்டுள்ளன.
 தொடரும்...
 - ஜெபலின் ஜான்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com