பொருநை போற்றுதும்! - 44

யாராக இருந்தாலும், அடைக்கலம் நாடியவர்க்குப் பாதுகாப்பு கொடுப்பதுதானே சான்றோர் கடன்! அசுரர்கள் வந்த நேரத்தில், முனிவர் ஆச்ரமத்தில் இல்லை.
பொருநை போற்றுதும்! - 44

யாராக இருந்தாலும், அடைக்கலம் நாடியவர்க்குப் பாதுகாப்பு கொடுப்பதுதானே சான்றோர் கடன்! அசுரர்கள் வந்த நேரத்தில், முனிவர் ஆச்ரமத்தில் இல்லை. அவருடைய மனைவி காவ்யமாதா மட்டுமே இருந்தாள் (சுக்ராசார்யரின் தாயான இவளுக்கு "உசனவி' என்றும் "மாஸவி' என்றும் கூட பெயர்கள் உள்ளன). அசுரர்கள்தாம் காலில் விழுகிறார்கள் என்று தெரிந்தும், அடைக்கலம் நாடியதால் அடைக்கலமும் பாதுகாப்பும் கொடுத்தாள்.

சிறிது பொழுதிலேயே,  அசுரர்கள் இங்கு வந்துவிட்டதை அறிந்துகொண்ட தேவர்கள், விரட்டிக்கொண்டு ஓடி வந்தார்கள். அவர்களை ஆச்ரமத்திற்குள் அனுமதிப்பதற்குக் காவ்யமாதா மறுத்தாள். தேவேந்திரனே வந்து, அராஜகமாக ஆச்ரமத்திற்குள் நுழைய முற்பட்டான். தன்னுடைய தவ ஆற்றலால், அவனைக் கல்லாகும்படிக் காவ்யமாதா செய்தாள். இந்திரன் கற்சிலையாக நின்றுவிட, அரண்டுபோன தேவர்கள், வைகுண்டத்தை அடைந்து, சாக்ஷôத் மகாவிஷ்ணுவின் பாதங்களில் சரண் புகுந்தனர். பொருநைக் கரையடைந்த திருமால், நதி நீரெடுத்துத் தெளித்து இந்திரனை விடுவித்தார். அசுரர்களை வெளியே அனுப்பும்படியாகக் காவ்யமாதாவை வேண்டினார். காவ்யமாதா மறுத்தாள். சினத்தின் வசப்பட்ட அந்தச் செந்தாமரை நாயகர், தம்முடைய சக்கராயுதத்தை அவள்மீது பிரயோகித்துவிட்டார். அவளும் மாண்டு விழுந்தாள். இந்த அமளிதுமளியில், அசுரர்கள் பாதாளலோகம் சென்று பதுங்கிக் கொண்டனர். 

இதற்கிடையில், வானவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பிருகு முனிவர், ஞான திருஷ்டியில் நடந்ததெல்லாம் அறிந்தார். ஆச்ரமம் விரைந்தார். கமண்டல நீர் தெளித்து மந்திரம் ஓதி மனைவியை உயிர்ப்பித்தார். இருப்பினும், அவரின் சினம் தணியவில்லை. முனிவர் சாபமிட்டால் தேவர்கள் தாங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த திருமால், அவர்களை தேவலோகம் அனுப்பிவிட்டுத் தாமே முன்வந்து முனிவர் முன் நின்றார். 

"பரந்தாமா, தேவர்களைக் காப்பாற்றுவதற்காக நீயே அடைக்கல தர்மத்திற்குக் குந்தகம் விளைவித்ததால், இதே அடைக்கல தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பூமியில் மனிதப் பிறவி எடுப்பாய். தேவர்கள்தாம் இதற்குக் காரணம் என்பதால், எங்கள் மகன் சுக்ரன் (பிற்காலத்தில் இவரே சுக்ராசார்யர்) அசுர குலத்தின் குருவாகி அவர்களை தேவர்களுக்கெதிராக வழி நடத்துவான்' என்று சாபமிட்டார். காவ்யமாதாவும் தன் பங்குக்குச் சாபம் கொடுத்தாள்: "முனிவர் மனைவிமீது சக்கரத்தைப் பிரயோகம் செய்த நீர்,   மனிதனாகப் பிறக்கையில், மாற்றானால் மனைவி அபகரிக்கப்பட்டு அவளைத் தேடி இதே நதிக்கரையில் ஆற்றாத் துயரத்துடன் அலைந்து திரிவீர்கள்.'

பிருகு முனிவர் மற்றும் அவருடைய பத்தினி காவ்யமாதா ஆகியோரின் சாபத்தால்தான், திருமால்ராமாவதாரம் எடுக்க வேண்டிவந்தது என்றும் சீதையைத் தேடி அலைய வேண்டி வந்தது என்றும் செவிவழிக் கதை விளக்குகிறது (இந்த நிகழ்வு, தென் தமிழ்நாட்டில் நடந்தது. பிருகு சாபம் பெற்ற திருமால், அதற்குப் பரிகாரம் தேடுவதற்காகப் பல சிவத்தலங்களில் பூஜை செய்தார். திருவாதவூரில் பூஜிக்கும்போது, அவதாரம் என்பது அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநிறுத்துவதற்கான நல்ல வாய்ப்பாயிற்றே என்று சிவனார் ஊக்கம் கொடுத்தார். இப்படியொரு கதை, மதுரைக்குப் பக்கத்திலுள்ளதும் மாணிக்கவாசகர் பிறந்ததுமான திருவாதவூரில் விளங்குகிறது). 

அடைக்கலம் நாடுபவர்களுக்கு நல்கவேண்டிய அருள் குறித்து இக்கதை வலியுறுத்துகிறது என்று கொள்ளலாம். அடைக்கலம் கொடுப்பதை எப்போதுமே பெருமையானதாகத்தான், பொருநைக் கரை போற்றியிருக்கிறது.  
அம்பாசமுத்திரத்தைத் தாண்டியதும், ஊர்க்காட்டுப் பகுதியில் வடக்கு நோக்கித் திரும்புகிற பொருநையாள், அத்தாழநல்லூர் வழியாகப் பாய்கிறாள். பொருநையின் கிழக்குக் கரையில் அத்தாழநல்லூரும் மேற்குக் கரையில் ரங்கசமுத்திரமும் அழகு சேர்க்கிற பகுதி இது!

அத்தாழநல்லூர் அருள்மிகு தெற்கு நாச்சியார், வடக்கு நாச்சியார் உடனாய அருள்மிகு ஆதிமூலநாதர் திருக்கோயிலும் (பெருமாள் கோயில்), அருள்மிகு மரகதாம்பிகை உடனாய அருள்மிகு மூன்றீச்வரர் திருக்கோயிலும் அமைந்துள்ள அழகான சிற்றூர். 

ஆதிமூலநாதரின் கோயிலின் உற்சவர் அருள்மிகு கஜேந்திர வரதர் ஆவார். ஆமாம், முதலை வாயில் மாட்டிக்கொண்ட கஜேந்திர யானை, "ஆதிமூலமே' என்றலறி, அதைக் கேட்டு ஓடோடி வந்து காப்பாற்றிய பெருமாளின் அருள் பெற்ற தலம் இதுதான்! கஜேந்திரனுக்கு வரம் கொடுத்தருளிய சம்பவமே இந்த ஊரின் பெயருக்குக் காரணம். "அத்தி ஆழ நல்லூர்' (அத்தி=ஹஸ்தி என்னும் வடசொல், அத்தி = யானை என்றாகும்; ஆழ=ஆழ்ந்து கதறிய என்பதைக் குறிப்பது) என்பதே காலப்போக்கில் "அத்தாழநல்லூர்' என்றாகிவிட்டது போலும். பழைய இலக்கியங்களில், "யானை காத்த நல்லூர்' என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டுள்ளது. "அத்தாழம்' என்னும் சொல்லுக்கு "மாலைக்காலம்' என்னும் பொருளும் உண்டு. 

இயற்கையின் வளங்கள் அனைத்தும் எழிலாய் அமைந்த பொருநைக் கரை, மாலை வேளைகளில் மங்கலம் பொருந்தியதாக, வசித்தோரையும் வந்தோரையும் வசப்படுத்தியிருக்கும்தானே! அதனால், இப்படியொரு பெயர் அமைந்ததோ? 

- தொடரும்... 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com