அல்லாஹ்வை அணுகும் அனுகூலம் 

"அணுகு' என்னும் சொல்லுக்கு "நெருங்கு' என்று பொருள். நெருக்கமான அல்லாஹ்வை நெருங்குவதால் அடையும் அனுகூலம் இம்மை மறுமை இரண்டிலும் இரட்டிக்கும் அளவுடையதாக இருக்கும்
அல்லாஹ்வை அணுகும் அனுகூலம் 

"அணுகு' என்னும் சொல்லுக்கு "நெருங்கு' என்று பொருள். நெருக்கமான அல்லாஹ்வை நெருங்குவதால் அடையும் அனுகூலம் இம்மை மறுமை இரண்டிலும் இரட்டிக்கும் அளவுடையதாக இருக்கும் என்பதை இயம்பும் இறைமறை குர்ஆனின் வசனங்களை வகையாய் ஆய்வோம்; வாகை சூடுவோம்.
 நபிமார்களைப் பின்பற்றி நாமும் அல்லாஹ்வை அனுதினமும் அணுகியே இருக்க வேண்டும். அகிலத்தைப் படைத்து தக்க முறையில் பக்குவப்படுத்தும் அகில உலகின் இரட்சகனான அல்லாஹ்வை அணுகும் நோக்கிலேயே முஃமீன்கள் (அடியார்கள்) வாழவேண்டும் என்பதை " என்னை நோக்கி நிற்பவர்களின் வழியைப் பின்பற்றி நட'' என்று நவிலும் நற்குர்ஆனின் 31-15 ஆவது வசனப்படி வாழ்ந்த நபிமார்களின் நல்வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்வோம்.
 நம் ஒவ்வொரு அணுகுதலும் அல்லாஹ்வை நுணுக்கமாக நோக்குவதாக அமைய வேண்டும். நாம் எல்லா காலங்களிலும் அல்லாஹ்வை முன்னோக்கி இருக்க வேண்டும். அவ்வாறு அல்லாஹ்வை நோக்கி இருப்பதற்குப் பெரும் பயன் உண்டு. இத்தகு பயன்களை இறைநூதர்கள் பெற்றனர்.
 லூத் நபியின் போதனைகளை ஏற்காது இயற்கைக்குப் புறம்பாக முரணாக மூர்க்கமாக வழிகெட்ட மக்கள் வாழ்ந்த ஊரை அழிக்க வந்த வானவர்களிடம் வாதாடி நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு அவ்வூரைக் காக்க கோரி அந்நல்லார் லூத்நபி என்று எடுத்துரைத்த இப்ராஹீம் நபியை, "இப்ராஹீம் மிக்க சகிப்பு தன்மை உடையவர்; இளகிய மனமுடையவராக இருந்தார். நம்பால் மீளுகிறவர்'' என்று இப்ராஹீம் நபியை இறைமறை குர்ஆனின் 11.75 ஆவது வசனம் புகழ்கிறது.
 தாவூது நபியின் ஒரு தவறான முடிவை அந்நபிக்கு அறிவிக்க வானவர்களைக் கொண்டு ஒரு வழக்கைச் சமர்ப்பிக்க செய்தோன் சர்வ வல்லமையுடைய அல்லாஹ். இதனை 38-24 ஆவது வசனம் "இதற்குள் நிச்சயமாக நாம் தாவூதைச் சோதனைக்கு உள்ளாக்கி விட்டோம் என்று தாவூத் எண்ணி தன் இறைவனிடம் தன் குற்றத்தை மன்னிக்கும்படி கோரி சிரம் பணிந்து வணங்கி தன் இறைவனை நோக்கி இறைஞ்சினார்'' என்று கூறுகிறது.
 ஸுஐப் நபி இறைவன் அருளிய ஆதாரத்தின் அடிப்படையில் உங்களுக்கு நேர் வழியைக் காட்டுகிறேன். எனக்கு அழகிய உணவைத் தருபவன் அல்லாஹ். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன். அவன்பால் மீள்வேன் என்று அளவில் எடையில் குறைத்து பொது மக்களுக்கு நுகர்வோருக்கு இழப்பை உண்டாக்கி படுபாதக வியாபார மோசடி செய்யும் பொய்யில் புரளும் மக்களை எச்சரித்தார்கள். மேலும் இறை கொள்கையை ஏற்காத நூஹ் நபி, ஹுது நபி, ஸாலிஹ் நபி காலங்களில் வாழ்ந்த மக்கள் வேதனைக்கு ஆளானதையும் அறிவித்து எச்சரித்தார்கள்.
 லூத் நபி போதனையை ஏற்காது வேதனைக்கு உள்ளான லூத் நபி காலத்து மக்கள் அழிக்கப்பட்ட இடம் அவர்கள் வாழும் ஊரில் இருந்து அருகில் இருப்பதையும் இயம்பினார்கள். அல்லாஹ்விடம் அபயம் கோரி மன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிகரற்ற அன்பு நிறைந்தவன். அல்லாஹ்வை அணுகினால் அடையும் அனுகூலத்தை அறிவிக்கின்றன அருமறை குர்ஆனின் 11-88 முதல் 90 ஆவது வரையுள்ள வசனங்கள்.
 மேற்குறிப்பிட்ட நபிமார்கள் போல நாமும் அச்சிறப்பினைப் பெறும் வழி. அல்லாஹ்வின் அடியான் -இறை நம்பிக்கையாளன் தொடர்ந்து இறைவனிடம் பாவமன்னிப்பு தேடியும் பரிசுத்த நாயகனாகிய அவனிடமே சரணடைந்து வாழ்ந்து வந்தால் அவன் உண்மையான முஃமீன்களில் (அல்லாஹ்வின் அடியான்) ஒருவனாகின்றான். இதனால் எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த அடியானிடம் அழகிய முறையில் கருணையோடு இருக்கின்றான். இறைவனிடம் அடியான் பாவமன்னிப்பு கேட்கும்பொழுது இறைவன் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். அந்த அடியானின் பாவங்களை மன்னித்து விடுகிறான். இதனைப்பற்றி இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் இருக்கின்றேன். அவன் என்னை நினைக்கும்பொழுது நான் அவனுடன் இருப்பேன் என்று கூறுகிறான்.
 அல்லாஹ்வின் மீது ஆணையாக பாலைவனத்தில் தொலைத்துவிட்ட தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்கும்பொழுது உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட தன் அடியான் பாவமன்னிப்பு கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான். யார் என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் நெருங்குகிறாரோ நான் அவரிடம் இரு கைகளின் நீளம் வரை நெருங்குகிறேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவரை நோக்கி விரைந்து வருகிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்'' நூல்- முஸ்லிம்.
 மகிழ்விலும் துன்பத்திலும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடமே ஒதுங்க வேண்டும். இதனால் இறைவனையே நோக்கமாக கொண்டு வாழும் பாக்கியம் கிடைக்கும் என்று எழில்மறை குர்ஆனின் 39 -8 ஆவது வசனம் கூறுகிறது. அல்லாஹ்வை அணுகும் முறைகளில் முக்கியமானது தொழுகை. தொழுகை தீமையை போக்கி இறை விசுவாசத்தைப் பெருக்கும் என்பதைக் கூறும் குர்ஆனின் 11-114 ஆவது வசனம், " பகலில் இரு முனைகளிலும் இரவில் ஒரு பாகத்திலும் நீங்கள் தொழுங்கள். நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடும். இறைவனைத் துதி செய்து புகழ்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல்''.
 ஏக இறை கொள்கையை ஏற்காதவர்கள் எதிர்வாதம் புரியும் பொழுதும் ஏற்றவர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும் பொழுதும் எப்படி நடக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் 42-10 ஆவது வசனப்படி, "அந்த அல்லாஹ்தான் என் இறைவன். அவனையே முற்றிலும் நம்பி அவனையே நோக்கி இருக்கிறேன். அவனிடமே மீள்வேன்'' என்று உறுதியாக கூறவேண்டும்.
 இவ்வசனத்தை ஒட்டி ஒப்பிலா நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனை இறைஞ்சியது, " என் இறைவனே உனக்கு அதிகமாக நன்றி செலுத்துபவராகவும் உன்னை அதிகமாக துதிப்பவராகவும் உனக்கு அதிகம் கட்டுப்பட்டவராகவும் உன்னிடம் பணிவாக இருப்பவராகவும் உன்னையே முழுமையாக நோக்கி இருப்பவராகவும் என்னை ஆக்கி அருள்வாயாக!'' நூல்- இப்னு மஜா, திர்மிதீ, அபூதாவூத்.
 அல்லாஹ்வை எல்லா நிலைகளிலும் நேரங்களிலும் நினைத்து கடின முயற்சிகளைக் கணமும் பயிற்சி செய்து செய்யாதன செய்ய தூண்டும் இச்சைகளை விட்டு விலகி இன்னல்களை திண்ணமாக எண்ணி முறியடித்து அறிவின் ஆழத்தில் மூழ்கி முக்குளித்து எக்கணமும் தக்கோன் அல்லாஹ்வின் அடிபணிவதில் ஆழ்ந்திருப்பதே அல்லாஹ்வை அணுகி அனுகூலத்தை அடைய வைக்கும்.
 - மு.அ. அபுல் அமீன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com