திடமான வாழ்வருளும் திருநாராயணப் பெருமாள்!

வரலாற்றுப் பெருமையும் இறை சக்தியும் மிகுந்த ஆலயங்கள் பல கொண்டது நம் தமிழ்நாடு.
திடமான வாழ்வருளும் திருநாராயணப் பெருமாள்!

வரலாற்றுப் பெருமையும் இறை சக்தியும் மிகுந்த ஆலயங்கள் பல கொண்டது நம் தமிழ்நாடு. அவ்வகையில் அருள் நிறைந்து காணப்படும் ஓர் ஆலயம் சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலிருந்து தெற்கே ஒரகடகம் - ஸ்ரீ பெரும்புதூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குளத்தூர் என்ற சிறிய கிராமம். மக்கள் வழக்கில் கொளத்தூர் என்று அழைக்கின்றனர்.
 இந்த ஊரின் வரலாற்றுப் பெயர் செம்பியன் குளத்தூர், செம்பியன் என்ற சொல் சோழ மன்னர்களைக் குறிக்கும் சொல்லாகும். ஒரு காலத்தில் சாம வேதத்தில் தலை சிறந்த விற்பன்னர்கள் பலர் வாழ்ந்த புண்ணிய தலமாகும். இத்தலத்தில் இரண்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்று அகத்தியர், துளசியால் வழிபட்ட துளசீஸ்வரர் ஆலயம். மற்றொன்று ஸ்ரீ திருநாராயணப் பெருமாள் ஆலயமாகும். மிகுந்த வரப்ரசாதியான இப்பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்தாலே நம்மை மகிழ்வோடு பலமுறை தரிசனம் செய்ய வரவைத்திடும் அருள்பல மிக்கவர்.
 எங்கும் காணமுடியாத சிறப்பாக இத்தல தாயார் "ஆமோதவல்லி' என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். ஆமோதம் என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி, நறுமணம் என்று பொருள்படும். காஞ்சிபுரம் ஸ்ரீ தீபப் பிரகாசப்பெருமாள் வருடத்தில் ஒரு முறை இந்த குளத்தூர் தலத்தில் எழுந்தருளுவது சிறப்பானது. மேலும் இத்தலம் வைணவ மகாபுருஷரான ஸ்ரீமந்நிகமாந்த மகாதேசிகனால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடையது. அவருடைய அழகான வடிவை இக்கோயிலில் காணலாம்.
 2003 -ஆம் ஆண்டு நடந்த சம்ப்ரோஷணத்திற்குப் பிறகு தற்போது இந்த ஆலயத்தில் ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த ஜனசபை என்ற அமைப்பின் மூலம் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர்ணங்கள் தீட்டப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஆமோதவல்லி நாயகி சமேத ஸ்ரீ திருநாராயணப் பெருமாள் திருக்கோயில் அஷ்டபந்தன மகாசம்ப்ரோக்ஷணம் ஜூன் 20 -ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் ஜூன் 18 - இல் ஆரம்பமாகிறது.
 இத்திருத்தலத்திற்கு செல்ல சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து வெண்பாக்கம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்தில் செல்லலாம். ஆட்டோ வசதிகளும் உள்ளது.
 தொடர்புக்கு: ரமேஷ் - 94440 22133 / 98410 80017.
 - களக்காடு வ.மாரிசுப்பிரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com