சுடச்சுட

  
  v6

  அத்திகிரி - 3
   'க' என்றால் பிரம்மா; அஞ்சிதம் என்றால் பூஜிக்கப்பட்டது என்ற பொருளில் பிரம்மா பூஜித்த தலம் காஞ்சி என வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் பிரம்மன், யாகம் செய்து வழிபட்டதால், காஞ்சியில் அமைந்துள்ளது தேவராஜப் பெருமாள் கோயிலில் கிடைத்துள்ள தொல்புராண வரலாறுகளின் அடிப்படையில் இத்தலம் ஸ்ரீவிஷ்ணு சேத்திரம், விஷ்ணு சாலை, ஹரி சேத்திரம், புண்ணியகோடி சேத்திரம், வைகுண்ட சேத்திரம், ஹஸ்திசைல சேத்திரம், திரிஸ்ரோத சேத்திரம், திருக்கச்சி மற்றும் ஹஸ்திகிரி போன்ற பெயர்கள் கொண்டு வழங்கப்படுகிறது.
   பிருகு மகரிஷிக்கு நாரத முனிவரால் பிரம்மாண்ட புராணம் 18 அத்தியாயங்களில் ஹஸ்திகிரி மகாத்மியம் பகுதியில் இது விவரிக்கப்படுகிறது.
   ஒரு முறை திருமகள், கலைமகள் இருவரில் உயர்ந்தவர் யார்?' என விவாதம் எழ, இருவரும் முதலில் பிரம்மனிடம் சென்று விடை வேண்டினர். "இலக்குமியே சிறந்தவள்!' என்றார் பிரம்மா. சினம்கொண்ட கலை மகள் பிரம்மனின் சிருஷ்டி தண்டத்தை பறித்துக் கொண்டு பிரிந்து சென்றாள். சிருஷ்டி தண்டம் இல்லாததால், படைப்புத் தொழில் தடைப்பட்டது.
   மகாவிஷ்ணு, "குறை தீர வேண்டுமானால் நூறு அசுவ மேத யாகம் செய்தல் வேண்டும். இல்லையென்றால் ஒன்றுக்கு நூறாக பலன் தரும் காஞ்சிக்குச் சென்று, ஒரு முறை அசுவமேத யாகம் செய்ய வேண்டும்!'' என்று அருளி மறைந்தார்.
   பூலோகம் வந்த பிரம்மன், காஞ்சியில் அசுவமேத யாகத்தைத் துவங்க பத்தினி வேண்டும் என்பதால், வியாசரிடம் "கலைவாணியை சமாதானம் செய்து அழைத்து வரக்கூற, கலைமகள் வர மறுத்து விட்டாள். ஆதலால் சாவித்திரி தேவியுடன் யாகத்தைத் துவக்கினார். அதிக கோபங்கொண்ட சரஸ்வதி, யாகத்தைத் தடுக்க அக்னி மற்றும் அசுரர்கள் ஆகியோரை ஏவினாள்.
   பிரம்மன், திருமாலை சரணடைந்தார். யாகத்தைக் காக்க மஹாவிஷ்ணு சரஸ்வதியின் தடைகளைத் தகர்த்தார். சரஸ்வதி, நதியாகமாறி வேகவதியாய் பாய்ந்து வந்தாள். நதியை வழிமறித்து தம் கை கால்களைப் பரப்பி குறுக்காகப் படுத்துக் கொண்டார் மகாவிஷ்ணு. தன் செயலிற்கு வெட்கம் அடைந்த சரஸ்வதி, அந்தர்வாகினியாக பூமிக்குள் மறைத்துக் கொண்டாள். யாகம் இனிதே நிறைவுற்றது. யாகத்தில் ஜோதிப் பிழம்பாகத் தோன்றி பெருமாள், சிருஷ்டி தண்டத்தை பிரம்மனுக்குத் தந்தருளினார். பிறகு, பிரம்மனின் வேண்டுகோளின்படி, அங்கேயே புண்ணியகோடி விமானத்தில் ஸ்ரீவரதராஜர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டார்.
   இருவரும் அதே கேள்வியை இந்திரனிடமும் கேட்டனர். அவனும் "திருமகளே!' என்றான். சினந்த கலைவாணி, இந்திரனை மதங்கொண்ட யானை ஆகும்படி சபித்தாள். வருந்திய இந்திரனை ஆறுதல்படுத்திய திருமகள் "பூலோகத்தில், பிரகலாதனை சந்தித்து ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெற்று. ஸ்ரீவரதராஜ úக்ஷத்திரத்தை அடைந்து தவம் செய்து சாபம் நீங்குக!'' என்று ஆற்றுப்படுத்தினாள். யானையாக மாறிய இந்திரன், தலத்தை அடைந்து, தன் இதயத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை தியானம் செய்ய ஸ்ரீநரசிம்ம மூர்த்தி தோன்றி கஜரூபத்தை இரண்டாகப் பிளக்க . இந்திரன் சுயவுருவடைந்தான். ஸ்ரீநரசிம்மமூர்த்தி, கஜ ரூபத்தை மலையாகக் கொண்டு குகை நரசிம்மராகி அவனுக்கு அருள்பாலித்தார். எனவே இந்த பகுதி "யானைமலை' என்ற பொருளில் "ஹஸ்தி கிரி' எனப்படுகிறது.
   இல்லறம் - துறவறத்தில் "சிறந்தது எது...? என்ற தர்க்கம் எழுந்தபோது, "துறவறமே சிறந்தது!' என்று தீர்ப்பளித்தார் பிரகஸ்பதி. மாற்றுக் கருத்து கொண்ட இந்திரன் வெகுண்டு, "பூலோகத்தில் பிரகஸ்பதி ஏழையாகப் பிறக்கக் சாபம் கொடுத்தான். அதன்படி பூமியில் பிறந்து ஒருவேளை உணவுக்கும் வழியில்லாமல் துன்புற்றார். ஒரு நாள் அவர் உணவருந்தும்போது நாய் ஒன்று தொல்லை தந்தது. அவர் அதை விரட்ட, கோபம் கொண்ட நாய், "நீ நாயாக பிறப்பாய்!' என்று சாபமளித்தது . பிரகஸ்பதி , பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கு வந்து பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார்.
   ஸ்ரீவரதராஜர் கோயிலில் உள்ள "வையமாளிகை பல்லி' தரிசனம் சிறப்பானது. ஸ்ரீஸ்ருங்கி பேரர் எனும் முனிவரின் குமாரர்கள் ஹேமன் மற்றும் சுக்லன். இவர்கள் கெளதம முனிவரிடம் வேதம் பயின்று வந்தனர். தினமும் குருவின் பூஜைக்குத் தேவையான பொருட்களை சேகரித்து தருவது இவர்களின் வழக்கம். ஒரு நாள் சேகரித்து வைத்த தீர்த்தக் குடத்தில் இருந்து இரண்டு பல்லிகள் துள்ளிக் குதித்து வெளியேறின.
   சீடர்களது கவனக்குறைவைக் கண்ட கெளதமர், இருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார். சாப விமோசனம் வேண்டிய சீடர்கள், சத்திய விரத úக்ஷத்திரமான காஞ்சிக்கு சென்று ஸ்ரீவரதராஜரை தியானித்து தவம் செய்தனர். பின்பொரு காலத்தில், யானை ரூபத்தில் இருந்த இந்திரன், ஸ்ரீநரசிம்மர் அருளால் சுயரூபம் அடைந்த போது இவர்களும் சாப விமோசனம் பெற்றனர்.
   இந்த வரலாறைக் கேட்டறிந்த இந்திரன் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு பல்லி ரூபங்களை இங்கு பிரதிஷ்டை செய்தான். மூலவருக்கு ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்று பல திருநாமங்கள் வழங்குகின்றன. அருளை வழங்கக்கூடியவன் அருளாளன். அதுவே வடமொழியில் வரதன் என்றாயிற்று. இப்பூவுலக உயிர்களின் அரசனாகவும் விளங்கும் பெருமாள் இங்கு தேவராஜன் என அழைக்கப்படுகிறார்.
   பெருந்தேவனார் என்ற சங்ககாலப் புலவர், "திருவேங்கடம் சோலை மலை தென்னரங்கம் திருவத்தியூர் என்று சொன்னார்க்கு உண்டோ துயர்'? எனப் பாடியுள்ளார். "உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்' என பூதத்தாழ்வாரும் வியக்கிறார்.
   நம்மாழ்வார் தமது திருவாய் மொழி முதல் பாசுரத்தில் "அயர்வறு அமரர்கள் அதிபதி எவனவன்'"என்றது இப்பெருமாளைத் தான் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. இப்பெருமானைத் திருக்கச்சி நம்பிகள் தேவராஜஷ்டகம்"என்னும் தோத்திரத்தாலும், வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத்"என்னும் தோத்திரத்தாலும், மணவாள மாமுனிகள்" தேவராஜ மங்களம் என்னும் தோத்திரத்தாலும் போற்றியுள்ளனர்.
   சோழ அரசவையில் கண்களிழந்த கூரத்தாழ்வார், "ஸ்ரீவரதராஜ ஸ்தவம்' என்ற துதியைப் பாடுகிறார். பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது, பிராட்டியின் அழகான முககுறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளைச் செய்கிறான்.
   கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைப் புலவர் கவி காளமேகம் காஞ்சியில் கருட சேவையின் போது ஒளிமிக்க கருடன் மீது சுடர்விட்டுப் பிரகாசிக்கும் பொன்வண்ணத் திருமேனியில் வரதர் திருவீதி உலாவைக் கண்டு பெருமாளை வணங்கி நிந்தாஸ்துதியாக ஒரு பாடலைப் பாடியுள்ளார்.
   தொல்பழங்காலம் முதல் புகழ்பெற்ற திருத்தலமாக அதில் உறையும் தேப்பெருமாள் மக்கள் வழிபாட்டில் இருக்கின்றான் என்பது வரலாறாகும்.
   - முனைவர் கோ . சசிகலா
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai