Enable Javscript for better performance
பசிப்பிணி போக்கும் அன்னசத்திரம் - கூடலூர் திருக்கோயில்- Dinamani

சுடச்சுட

  

  பசிப்பிணி போக்கும் அன்னசத்திரம் - கூடலூர் திருக்கோயில்

  By DIN  |   Published on : 21st June 2019 02:31 PM  |   அ+அ அ-   |    |  

  G3

  ஆலய அமைப்பு: வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், பழைய அன்னசத்திரம் கூடலூர் என்ற பெயருடைய தற்போதைய கூடலூர் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்த கோயில், அருள்மிகு ஸ்ரீ ஏலவார் குழலி அம்பிகை (ஸ்ரீ காமாட்சி அம்பாள்) உடனுறை ஸ்ரீ நாகேஸ்வரர் எனும் கைலாசநாதர் திருக்கோயில்.
  தலம், தீர்த்தம், மூர்த்தம் ஆகிய மூன்று வகையிலும் சிறந்து விளங்கி கலியின் தாக்கத்தால் சிதைவுற்று எவரும் நெருங்கா வண்ணம் புதரில் மறைந்திருந்து, சிவனார் தான் உலகிற்கு வெளிப்படவேண்டிய தருணம் பக்தர்கள் அணுகி வர அனுக்கிரஹம் செய்தார். அதன்படியே கிராமத்தில் உள்ளவர் சிலரின் மனதில் சிவனார் தோன்றி ஆலயம் எழுப்ப பணித்தார்.
  புதையுண்டு கிடந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கத்தையும், ஸ்ரீ அம்பிகை, விநாயகர், ஐந்து தலை நாகலிங்க சிற்பம், காதுடைந்த நந்தியின் சிற்பம் போன்றவைகளை கண்டெடுத்து ஓர் கொட்டகையில் வைத்து பூஜித்து வந்தனர்.
  புதியதாக ஆலயம் எழுப்ப கூடலூர் கிராம மக்கள் முயற்சிகள் மேற்கொண்டு ஸ்ரீ கைலாச கணபதி சாரிடபுள் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலமாக திருப்பணியை ஏழைக்கூலி தொழிலாளர்கள் மேற்கொண்டு செய்து வருகின்றனர்.

  கிழக்கு முகம் பார்த்த கருவறை, அந்தராளம், முகமண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. கண்ணி மூலையில் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கும் அதற்கருகில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிக்கும் தனித்தனியே சந்நிதிகள் கட்டப்பட்டுள்ளன. நந்தி மண்டபம், சண்டிகேஸ்வரருக்கு தனித்தனியே சந்நிதிகள் அமைக்க வேண்டும்.
  திருக்குளம் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. திருக்குளத் திருப்பணியை செய்ய வேண்டியுள்ளது. திருக்குளத்திற்கு மேலே சிதிலமடைந்த நிலையில் ஒர் அன்னசத்திரம் அமைந்துள்ளது. அன்னசத்திரத்தை சீரமைக்கும் திருப்பணியும் திருக்கோயிலைச் சுற்றிலும் மதிற்சுவர் அமைக்கும் திருப்பணியும், திருக்கோயில் முழுவதும் வர்ணம் பூசுதல், மின் விளக்குகள் பொருத்த தேவையான உதிரிப்பொருட்கள் வாங்குதல் போன்ற பல திருப்பணி வேலைகள் நடைபெற வேண்டியுள்ளது.

  ஆலயத்தின் சிறப்புகள் : ஒரு கருங்கற்பலகையில், கண்ணப்ப நாயனார், ஒரு காலால் சிவபெருமானின் கண்ணருகே வைத்து தன் கண்ணை எடுத்து வைக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். முற்காலத்தில் இத்திருக்கோயிலை தரிசிக்க வருகின்ற பக்தர்களுக்கும் திருவிழாக் காலங்களில் வருகின்ற பக்தர்களுக்கும் தங்கி இளைப்பாறவும் பசி போக்கிட அன்னம் பாலிக்கவும் அன்ன சத்திரம் கட்டியுள்ளனர் என்பது தெளிவாகிறது. எனவேதான் இவ்வூருக்கு அன்னசத்திரம் கூடலூர் என்ற பெயர் வரக் காரணமாயிற்று.
  இங்குள்ள சிவபெருமானை வணங்குபவர்களுக்கு தரித்திரம் அண்டாது. உணவுக்குப் பஞ்சம் வராது. விவசாயிகள் இத்திருக்கோயிலில் வீற்றிருந்து அருளும் சிவபெருமானை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்வதால் விளைச்சல் பெருகும்.
  பிரம்மாண்டமான அன்னசத்திரத்தை பழுதகற்றி சீராக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். 
  பரிகாரங்கள் : திருமணத்தடையுள்ளவர்கள் இவ்வாலயத்திலுள்ள சிவனையும், அம்பிகையையும் விநாயகப்பெருமானையும் மற்றும் முருகப் பெருமானையும் வணங்கி தீபங்கள் ஏற்றி அர்ச்சனை செய்து, பிரார்த்தனை செய்து கொண்டால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உறவில் ஏற்படும் பிரிவினை போன்ற குறைபாடுகளை நீக்கி அருளும் தலம். 
  பேருந்து வசதிகள் : சென்னையிலிருந்து-அரக்கோணம் வழியாக சித்தூர் செல்லும் அரசுப்பேருந்து தடம் எண். 164FC அரக்கோணத்திலிருந்து நகரப்பேருந்து 45C, 46C 161 பேருந்துகளில் பயணித்தால் கூடலூர் என்று கேட்டு இறங்கவும். சென்னையிலிருந்து 100 கி.மீ. தூரமும் அரக்கோணம் - சோளிங்கர் செல்லும் வழியில் 17 கி.மீ. தூரத்தில் கூடலூர் அமைந்துள்ளது.
  வேண்டுகோள் : இத்திருக்கோயில் திருப்பணியில் பக்தர்கள், பங்கேற்று, பொன்பொருள், உதவி செய்வதால் நல்லிணக்கத்தையும், குடும்ப ஒற்றுமையையும், அன்யோன்யத்தையும் பெறுவதோடு, நம் பிற்கால சந்ததியினருக்கு அளவற்ற புண்ணியத்தையும் சேர்த்திடலாம். 
  தொடர்புக்கு : மணிகண்டன்- 97876 66111; 
  சுப்பிரமணி-97869 06351.
  - க. கிருஷ்ணகுமார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai