Enable Javscript for better performance
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்- Dinamani

சுடச்சுட

  

  பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

  By DIN  |   Published on : 21st June 2019 02:32 PM  |   அ+அ அ-   |    |  

  kamalanandhar

  * உலகியல் பற்றை ஏற்படுத்தும் எண்ணங்களைத் துறக்காமல் ஆன்மிக விழிப்பு உண்டாவதில்லை, இறையனுபூதியும் கிடைப்பதில்லை. மனதில் உலகியல் இருக்கும்போது கபடத்தனம் இருக்கவே செய்யும். கள்ளம் கபடமற்ற எளிய மனம் இல்லாமல் இறைவனை அடைய முடியாது.
  - ஸ்ரீ ராமகிருஷ்ணர்
  * இந்த உலக வாழ்க்கை "தூக்கத்தில் கனவு' போன்றது. இந்த உண்மையை மிகவும் நன்றாக ஆராய்ந்து பார்த்து, வீட்டில் அகங்காரம் மமகாரம் இல்லாமல் பற்றற்று வாழ்ந்து வர வேண்டும்.
  - உத்தவ கீதை
  * மனிதப்பிறவி கிடைப்பதற்கு மிகவும் அரியது. அவ்விதம் மனிதராகப் பிறந்து விவேக உணர்வுடன் இருப்பது, தர்மவழியில் நடப்பது, ஆத்மாவையும் அது அல்லாததையும் பிரித்து அறிவது, முக்தி போன்றவை பல கோடிப் பிறவிகளில் செய்த புண்ணியம் இல்லாமல் ஒருவர் அடைய முடியாது.
  - ஆதிசங்கரர்
  * குழந்தாய்! நீ கவலைப்படாதே! இந்த உலகப்பந்தங்கள் அனைத்தும் நிலையில்லாதவைதான். இன்று அவையே வாழ்க்கையின் சாரமும் பயனும் என்று தோன்றும். ஆனால், நாளை அவை மறைந்துவிடும். இறைவனுடன் உனக்குள்ள தொடர்பே உண்மையானது.
  - ஸ்ரீ சாரதாதேவியார்
  * மனிதன் முடிவுக் காலம் எய்தியபோது படபடப்பற்ற
  வனாக இருக்க வேண்டும். மேலும் அவன் உடலிலும் உடலின் வழிவந்த உறவிலும் உள்ள பற்றைப் பற்றின்மை என்ற வாளினால் வெட்டி வீழ்த்த வேண்டும்.
  - வியாசபுத்திரர் பரிக்ஷித்து மன்னனுக்குக் கூறிய அறிவுரை
  * இறைவனே எல்லாமாக ஆகியிருக்கிறார். அவரைத் தவிர்த்துவிட்டு உலகம் என்பது கிடையாது. அத்தகைய இறைவனை அனுபூதியில் உணர்ந்துவிட்டால் கிரியைகள் தானாக நழுவிவிடுகின்றன.
  - ஸ்ரீ ராமகிருஷ்ணர்
  * வணக்கத்தால் உயர்ந்த நிலையைப் பெறுபவர்களாகவும், பிறருடைய நற்குணங்களைப் போற்றுவதால் தங்களுடைய நற்குணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும், பிறர் நன்மைக்காக உழைத்துத் தங்கள் நன்மையை வளர்த்துக் கொள்பவர்களாகவும், பிறர் கோபத்தைப் பொறுமையால் தணிப்பவர்களாகவும், நல்ல வார்த்தைகளினால் கடும் பேச்சுடையவர்களைக் கண்டிப்பவர்களாகவும் உள்ள சாதுக்கள் இந்த உலகில் வெகுமதிக்கப் படுகிறார்கள். ஆச்சரியமான நடத்தையுடைய அவர்களை யார்தான் கொண்டாட மாட்டார்கள்?
  - பர்த்ருஹரியின் நீதி சதகம்
  * கோடைக் காலத்தில் சூரியனின் செங்கிரணங்கள் தண்ணீரை வற்றச் செய்கின்றன. அது போன்றே இரவும் பகலும் மாறி மாறிச் சென்று, உலகிலுள்ள உயிர்களின் ஆயுளை அபகரித்துச் செல்கின்றன.
  - ஸ்ரீ ராமபிரான்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai