சுடச்சுட

  
  sudha

  மருத மலர்களை விரும்புகிற சிவனார், இம்மரத்தில் கோயில் கொள்கிறார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. மூன்று முக்கிய சிவத்தலங்கள், மருத மரத்தோடு தொடர்புடையவை. ஆந்திர நாட்டில் இருக்கிற ஸ்ரீ சைலம் (இங்கெழுந்தருளியிருப்பவர் சென்னமல்லிகார்ஜுனர்), காவிரிக் கரையில் கும்பகோணத்திற்கு அருகிலிருக்கிற திருவிடை மருதூர் (இங்கெழுந்தருளியிருப்பவர் மகாலிங்கேச்வரர்), பொருநைக் கரையின் திருப்புடைமருதூர் ஆகியவையே இம்மூன்று தலங்கள். இம்மூன்று தலங்களும், தலைமருது அல்லது உத்தரமருது, இடை மருது, கடை மருது அல்லது புடை மருது என்று முறையே போற்றப்படுகின்றன.
   இதுவுமொரு தென் காசி!
   புடார்ஜுனமான இத்தலம், சுரேந்திரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வந்து வழிபட்டுத் தன்னுடைய சாபத்தை இந்திரன் போக்கிக் கொண்டதே இதற்குக் காரணம். விருத்திராசுரன் என்னும் அசுரனைக் கொல்ல வேண்டிய கட்டாயம் இந்திரனுக்கு ஏற்பட்டது. இருந்தாலும், கொலைப் பாவம் பீடித்தது. தன் பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காகப் பொருநையாளை நாடினான் தேவர் தலைவன். இந்திராணியோடு புடைமருதூரை அடைந்தவன், தீர்த்தம் உண்டாக்கிச் சிவனாரை வழிபட்டான். பாவமும் நீங்கப்பெற்றான். இந்திரன் ஏற்படுத்திய தீர்த்தமே சுரேந்திர மோக்ஷ தீர்த்தம் என்று வழங்கப்பெறுகிறது. இந்திரனே மருதமரமாக மாறி நின்று வழிபட்டான் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
   தேவர்கள் ஒருமுறை, காசிக்கு நிகரான தலம் வேறு ஏதாவது பூவுலகில் உண்டா என்று சிவபெருமானிடம் கேட்டார்களாம். தம்முடைய பிரம்மதண்டத்தை அவர்களிடம் கொடுத்த இறைவனார், பூவுலகில் நிலத்தில் அதனை வைக்கும்படியும், எங்கு சென்று அந்த தண்டம் நிலைக்கிறதோ அதுவே காசிக்கு நிகரான புண்ணிய பூமி என்றும் தெரிவித்தார். அவர்களும் அவ்வாறே செய்ய, பிரம்மதண்டம் திருப்புடைமருதூரில் வந்து நின்றது. தக்ஷிணகாசியான இத்தலத்தை, ஊழிப் பிரளய காலத்திலும் சிவபெருமான் காத்தார். இங்கு இறப்பவர்களைப் பார்வதி தேவி தன்னுடைய மடியில் இட்டுக் கொள்கிறாள். மரணத்தைத் தழுவுபவரின் வலக் காதில் ராம நாமத்தைச் சிவபெருமானே ஓத, திவ்ய விமானம் வந்து அந்த ஜீவனைத் திருக்கைலாயத்திற்கு அழைத்துச் செல்கிறது. சிதம்பரநாத தேசிகர் இயற்றியுள்ள "நாறும்பூநாதர் திருவிளையாடல் புராணம்', முனிவர் ஒருவரின் தர்மபத்தினி இறந்தபோது, இத்தகைய சம்பவத்தை வியாசரும் வசிட்டரும் இன்னும் பல முனிவரும் கண்ணுற்றதாகத் தெரிவிக்கிறது.
   சனகாதியருக்கு பிரம்மவித்யையை தக்ஷிணாமூர்த்தி உபதேசித்த தலம், 21 நாள்கள் கேதாரகெளரி விரதமிருந்து இந்திரனோடு இந்திராணி இணைந்த தலம், விராட் புருஷனின் வலக்கண் ஆய தலம் என்று ஏகப்பட்ட மகிமைகள் இத்தலத்திற்கு உள்ளன. எல்லாவற்றையும் விட மிக மிக விசேஷம் – தம்முடைய நடனக் காட்சியை இங்குதான் சிவபெருமான் விஷ்ணுவுக்குக் காட்டினார்.
   இதே நடனக்காட்சியை, வியாக்ரபாதருக்கும் பதஞ்சலிக்கும் சிதம்பரத்தில் காட்டினார். மகாவிஷ்ணு பார்த்துப் பரவசப்பட்ட நடனக் காட்சியைத் தானும் காணவேண்டும் என்று ஆசைப்பட்டுத் தவமிருந்த ஆதிசேஷன், பதஞ்சலியாக பூவுலகம் வந்தார். ஆக, தில்லைச் சிதம்பரத்தின் நடனத் திருக்காட்சிக்கும் முன்பாக இறைவனார் நடனக் காட்சி அருளிய திருத்தலம் இது. இந்த ஆதித் திருக்காட்சியைத் தைப்பூசத் திருநாளில் அருளினார். ஆகவேதான், மீண்டும் சிதம்பரத்தில் இக்காட்சியை அருளியபோதும், தைப்பூச நாளையே தேர்ந்தெடுத்தார். தில்லைக் கனகசபைக்கும் மதுரை ரஜதசபைக்கும் திருவாலங்காட்டு ரத்தினசபைக்கும் நெல்லைத் தாமிரசபைக்கும் குற்றாலச் சித்திரசபைக்கும் முன்னோடியான நடனசபை என்பதால், இங்கு எழுந்தருளியிருக்கும் நடராஜரின் சபைக்கு, "நித்திய சபை' என்று திருநாமம்.
   திருப்புடைமருதூரின் அம்பாள், அருள்மிகு கோமதி அம்மன். சகலவிதமான நோய்களையும் தீர்த்து பக்தர்களைக் காப்பாற்றுபவள். 21 நாள்கள் விரதமிருந்து இவளின் சந்நிதியில் வழிபட்டால், பிணிகள் அனைத்தையும் போக்கி, எல்லா நலங்களையும் இவள் தருவாள். இந்த அம்பாளுக்கான விசேஷ நேர்த்திக் கடன் ஒன்றுண்டு. பாயசம் செய்து, ஆற்றங்கரையில் நீராடி, படித்துறையில் படியைக் கழுவி, அங்கிருந்தபடியே அம்பாளை வழிபட்டு, படியிலேயே பாயசத்தை இட்டு அதை உண்பார்கள். இப்படிச் செய்தால், நோய்களைப் போக்குவாள், பிள்ளைப் பேற்றைத் தருவாள், செளபாக்கியம் அளிப்பாள். இதற்குப் "படி பாயசம்' என்றே பெயர்.
   நெல்லைக்காரர்களுக்கு அருள்மிகு கோமதியம்மன் மீது ப்ரீதி அதிகம். வீட்டுக்கு வீடு, பெண் குழந்தைகளுக்கு "கோமதி' என்னும் பெயர் சூட்டப்படும் (கோமதி என்று பெயர் வைத்து, அதைச் செல்லமாகக் "கோமா' என்று அழைப்பது வெகு சகஜம்). "அழகுக்கு அரசி' என்று பொருள் தரும் திருநாமத்தைக் கொண்ட இவள், அபூர்வமான நீலக்கல் திருமேனியில் காட்சி தருகிறாள்.
   அம்பிகை அழகுக்கு அரசி என்றால், ஐயனும் அழகுக்கு அரசர்தானே!
   முதன்முதலில், ஆதிமனுவுக்காகக் காட்சி கொடுத்தபோது, மருதமரம் வெடித்துத்தான் சிவனார் வெளிப்போந்தார். அதாவது, மரத்துக்குள் இருந்துகொண்டு, அதை ஒட்டச் செய்து கொண்டு, பின்னர் வெடித்து வெளிப் போந்தார். ஆகவே, இவருக்கு "லேபனசுந்தரர்' என்று திருநாமம். "லேபனம்' என்றால் "ஒட்டுதல்', "ஒட்டச் செய்தல்', "அப்புதல்' என்று பொருள்கள். மார்த்தாண்ட மகாராஜாவுக்காகவும் இந்திரனுக்காகவும்கூட, மரத்தில் அப்பிக்கொண்டுதான் ஆவிர்பவித்தார்.
   புடார்ஜுனராகவும் லேபனசுந்தரராகவும் எழுந்தருளியிருக்கும் சுவாமிக்கு நாறும்பூநாதர் என்னும் திருநாமம் எவ்வாறு தோன்றியது. அதுவும் ஒரு சுவாரசியக் கதைதான்..
   - தொடரும்...
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai