மணமகனை கொடுத்த பேலூர் தான்தோன்றீஸ்வரர்!

நெடுங்காலமாக வசிட்டரும், ஏனைய முனிவர்களும் இவ்வெள்ளுரில் வாழ்ந்து வந்த பொழுது தான்தோன்றி ஈசர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார்.

நெடுங்காலமாக வசிட்டரும், ஏனைய முனிவர்களும் இவ்வெள்ளுரில் வாழ்ந்து வந்த பொழுது தான்தோன்றி ஈசர் வழிபாட்டிற்காக அவ்வாலயத்தில் பலாமரம் ஒன்றை வசிட்டர் உண்டாக்கினார். அம்மரத்தில் பழுக்கும் பலாக்கனி ஒன்றை நாள்தோறும் அவ்விறைவனுக்குப் படைத்து வந்தார். அங்ஙனம் படைத்து வரும் சமயம் துந்துமி என்ற அசுரன் ஒருவன் அக்கனியை அபகரித்துச் சாப்பிட்டான். அதுகண்ட முனிவர் சீற்றம் அடைந்து அவ்வரக்கனை மலையாகவும், பலா மரத்தை இலுப்பையாகவும் போகக்கடவது எனச் சபித்தார். அத்துடன் அவ்விலுப்பையும் எவருக்கும் பயனற்றதாகும்படி செய்து விட்டார்.

சைவ நாயன்மாராகிய கணம்புல்லர் என்பவர் இவ்வூரைச் சார்ந்தவர். சேக்கிழார் பெரிய புராணத்தில் கறைக்கண்டன் சருக்கத்தில் கணம்புல்ல நாயனாரின் ஊரைக் குறிப்பிடுங்கால் "பெருகு வட வெள்ளாற்றுத் தென்கரைப்பால் பிறங்கு பொழில் வருக்கை நெடுஞ்சுளை பொழி தேன் மடு நிறைந்து வயல் விளைக்கும் இருக்கு வேத்ர்' எனக் குறிப்பிடுகின்றார். வேத்ர் ஆகிப்பின்னர், பேத்ர் என மருவி வழங்கப்படுகிறது. எனவே கண்ணம்புல்ல நாயனார் பேத்ர் எனப்படும் பேலூரைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 இத்தலத்தில் மகாவிஷ்ணு ஆலயம் ஒன்று உள்ளது. இதில் மூலவர் 8 திருக்கரங்களோடு ஐம்படை ஆயுதங்களுடன் விளங்குகிறார். சிவாலயத்தில் குமரக்கடவுள் 6 முகங்களுடன் விளங்குவது ஓர் அற்புதக் காட்சியாகும்.
 மணமகன் கிடைக்கப் பெறதாத மங்கையர் தான்தோன்றி ஈசனது திருவடியைப் போற்றினால் விரைவில் மனம் விரும்பிய மணாளனைப் பெற்று மணம்புரிந்து மகிழ்வுடன் வாழலாம். இதனை இத்தல புராணத்தில் வரும் கரங்கன் வரலாற்றால் அறியலாம்.

கரங்கன் தம்மகள் சோமாவதிக்கு மணமகன் கிடைக்கப் பெறாமல் மகேசுவரனிடம் முறையிட, மூன்று நாள்களுக்குள் உனது இல்லத்தை நாடி மணமகன் வருவான். அவனுக்கு மணம் முடித்து மகிழ்வுடன் வாழ்வாய் என்று அருள்புரிந்தார். இது அப்படியே நடந்தது என்பது வரலாறு.
 அதுபோன்று இத்தல கல்யாண விநாயகரிடம் மாலைமாற்றி பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் செய்த திருமணம் தடையின்றி நடைபெறுவதாக ஐதீகம்.
 நீலநிறம் பொருந்திய பார்வதி தனது மைம்மேனி வண்ணம் நீங்கி பொன்னுடம்பு எய்துமாறு ஈசான திக்கில் உண்டாக்கிய பொற்கதிர் ஓடை என்ற சிறிய இடம் உள்ளது. பார்வதி அந்த ஓடையில் மூழ்கி எழுந்து பொன்னிறம் பொருந்தியமையால் கெளரி என்று துதி செய்வர். பார்வதி கொடுத்த பெயர் பொற்கதிர் ஓடை என்பதாகும். பொற்கதிர் ஓடை நீரை கையினால் தீண்டினால் அவர்கள் மனதில் விரும்பியவைகளையெல்லாம் கொடுக்கும். மூழ்கினால் உடம்பு பொன்னிறமாகி வாழ்வுற்றிருப்பர். இதன் கரையில் சேர்ந்தாலும், கையில் தீண்டினாலும், மூழ்கினாலும் முக்தி வீட்டை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
 வசிஷ்ட முனிவரும், அவரது மனைவி அருந்ததியும் மற்றும் சீடர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் யாகம் செய்து, தவப்பலனை இத்தலத்திற்கு அளித்தமையால், இது காசிக்கு இணையான புண்ணிய பூமியாக விளங்குகிறது. இந்த யாகமேட்டு சாம்பலே இக்கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. இறைவன் தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகியுடன் அருள்பாலிக்கிறார்.
 97அடி உயர ராஜகோபுரமும், கோயிலின் முன்புள்ள நான்கு கால் மண்டபம், யாழி மற்றும் குதிரை வீரன் சிற்பங்கள் கலை நுணுக்கங்களுடன் பதினாறு கால் மண்டபத்தில் அழகாக செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, நவகிரகங்கள், பிச்சாடனர், காலபைரவர் ஆகிய சந்நிதிகளும் உள்பிராகரத்தில் உள்ளன.
 வழித்தடம்: சேலம் மாநருக்கு கிழக்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது வாழப்பாடி. வாழப்பாடியில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள பேலூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 தொடர்புக்கு: 04292-241400.
 - பொ. ஜெயச்சந்திரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com