வளம் தரும் வரதன் தரிசனம்!
By DIN | Published On : 28th June 2019 10:46 AM | Last Updated : 28th June 2019 10:46 AM | அ+அ அ- |

அத்திகிரி - 4
ஆழ்வார்களும் ஆசாரியர்களும் பாட்டன் பூட்டன் முதல் நமது முன்னோர்கள் கண்டு வணங்கி சுகானுபவம் பெற்ற அத்தி வரதன் 40 ஆண்டுகளுக்குப் பின் அருட்காட்சி தரப்போகும் நாளை நோக்கி காலம் விரைவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. நம் ஆயுட் காலத்தில் கண்டு கைகூப்பி வணங்கி தொழுதிட மாட்டோமா என்று எண்ணியிருந்தவர்கள் கனவு மெய்ப்படப் போகிறது.
அவ்வருளாளன் தொண்டரோடு தானும் கடந்து வந்த வரலாறு பார்க்க வரதன் வழிபாட்டின் உன்னத நிலையை உணர முடிகிறது
பண்டொரு காலத்தில் பிரம்மா செய்த அச்வமேத யாகத்தில் மகிழ்ந்து காட்சியளித்த பேரருளாளன் மங்களம் முகிழ் முகத்துடன் விளங்கிடக் கண்டார். நான்முகன் இப்பெருமாளை இவ்வாறே இத்திருக்கோலத்திலேயே தன்னுடைய ஜீவிதகாலம் முழுவதையும் கண்டு களித்திட அருள வேண்டும் என்று வேண்டினான். பெருமாள் இந்நிலையில் இக்காரியம் கைகூடாது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய வேண்டியிருக்கிறது. என் அர்ச்சாரூபத்தினை எழுந்தருளப் பண்ணி ஸ்ரீ பாஞ்சராத்திர ஆகமத்தின் படி ஆராதித்து, உற்சவங்களையும் நடத்திட பணித்தார்.
பிரம்மனும் வெகுகாலம் அவ்வாறே செய்து, இவ்வேழமலை (அத்திகிரி) நாயகனிடம் விடைபெற்று பிரம்மலோகம் சென்றார். நான்முகன் காலத்திலிருந்து திருபிரதிஷ்டை செய்த சித்திரைமாதம், ஹஸ்த நட்சத்திரம் அவதார உற்சவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது நான்முகன் எழுந்தருளுவித்த திருமேனி தாருமயமானது (அத்தி மரத்தால் ஆனது) என்று ஸ்ரீ காஞ்சி மாகாத்ம்ய புராணத்தில் தெளிவாய் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ தேசிகனும், இந்த திருமேனியை காப்பீடு (தைலக்காப்பு) திருமேனி இல்லை என்று கூறியதாகக் கருதப்படுகிறது.
வரதர் கோயிலின் கொடிமரத்தின் கீழ் பக்கம் இருக்கும் உதயபாநு மண்டபத்தில் உள்ள ஒரு தெலுங்கு மொழிக் கல்வெட்டில், "சாலிவாஹன சகாப்தம் 1703 ப்லவநாம ஸம்வத்ஸரம் ஆஷாடமாதம் சுத்த, தசமி சனிவாரம் அநந்த ஸரஸ்ஸின் நீரிரைத்தார்கள். அப்போது நீராழி மண்டபத்திற்கு தென்மேற்குக் கம்பத்திற்கு சரியாக அத்திகிரி வரதர் சயனித்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பெருமாள் தீர்த்தத்தில் நீர்ப்படுத்தின காலம் இன்னதென்று அறியமுடியவில்லை கி.பி.17-ஆம் நூற்றாண்டிலே அத்திவரதர் அக்குளத்தில் இருந்துள்ளார் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது.
அத்திவரதர் தீர்த்தக்குளத்தில் எழுந்தருள வேண்டிய காரணத்தை பார்க்கலாம்:
ஸ்ரீ தாத தேசிகன் காலத்திற்குப் பின்பு அவர் திருக்குமாரனான திருமலை தாததேசிகனும் வேங்கடவாத தாததேசிகனுமாய் பேரருளாளன் அத்திவரதரின் ஸ்ரீ காரியங்களை நிர்வகித்துக் கொண்டிருந்தனர். அந்நிய படையெடுப்புகளின் காரணத்தால் பேரருளாளன் சந்நிதிக்கு தீங்கு நேருமோ என்றெண்ணி பயந்து, அதிகம் எவரும் தெரியாமல் பெரிய பெருமாளை திருவனந்தன் ஸரசிலே விட்டனர். பின் உற்சவத் திருமேனிகளை எடுத்துக் கொண்டு உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் சென்று பெருமாளை ஆராதிக்க உதவிட வேண்டினர். அவரும் இவர்கள் வேண்டுதலுக்கிசைந்து பெருமாளை தன்வசம் வைத்துக்கொண்டு, ஊரைச் சுற்றிக் காவலிட்டு, அந்நியர் ஒருவரும் நுழைய முடியாத படி செய்து, ஜமீன் நியமப்படி திருவாராதனங்களை நடத்தி வந்தார்.
அப்போது ஜமீன் சந்ததியில் ஒருவரும், தேனை மயிலூர் ஸ்ரீ பாஞ்சராத்திரம் பட்டரில் ஒருவருமாக அவ்விடத்திலேயே இருந்து திருவாராதனைகளைச் செய்து வந்தார்கள். இப்படியே 40 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்தது. இந்த நாற்பதாண்டு காலம் தான் இன்று வரை அத்திவரதரை கண்டு வழிபடுவதற்கான காலமாக கருத்திற்கொள்ளப்பட்டு தொடர்கிறது என்று கருதலாம்.
கச்சியம்பதியில் பெரிய பெருமாளை சேமித்து வைத்த பெரியோர்களும் இல்லாதபடியால் இச் செய்தியறிந்தார் ஒருவரும் இல்லை. அக்காலங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயில் இப்படியே இருந்தது. வேங்கடவரத்தாத தேசிகன் திருக்குமாரரிலொருவராகிய திருமலை தாதாசார்யர் என்பவருக்குப் பெருமாளை எழுந்தருளப்பண்ணி முன்போல் திருவாராதங்களை நடத்த வேண்டுமென்று ஆவலுண்டாயிற்று. ஆராதனத்திலிருந்த மூலவர் இருக்கும் இடமும் தெரியவில்லை. ஜமீனுக்கு உற்சவரை திரும்ப அனுப்பக்கூடிய எண்ணமுமில்லை . இந்நிலையில் பெருமாளே திருக்கோயில் பட்டர் ஒருவரின் கனவில் அத்தி வரதராய் வந்து பழைய சீவரம் என்னும் ஊரில் மலைமேல் தன்னைப்போலவே ஒரு பிரதிபிம்பமாக வரதர் இருப்பதாகவும் அவரை கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து பூஜித்துக் கொள்ளும்படியும் தெரிவித்தார். திருக்குளத்தில் உள்ள தன்னை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிக்கொணர்ந்து ஒரு மண்டல காலம் வெளியில் பூஜை செய்து விடும்படியும் ஆணையிட்டிருக்கிறார். அதன்படியே பழைய சீவரத்திற்குச் சென்று பார்த்தபோது அவர்கள் பெருமாள் கூறிய அதே இடத்தில் இவரைப் போலவே ஒரு பிரதிபிம்பமாக இருந்த சிலாத்திருமேனியைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து (தற்போது உள்ள மூலவர்) வழிபட்டிருக்கின்றனர். இன்றும் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் காஞ்சியிலிருந்து பழைய சீவரத்திற்கு பார்வேட்டை உற்சவமாக சென்று வருவது இதன் அடிப்படைதான் என்றும் கருத இடமுண்டு.
லாலா தொண்டரமல்லன் என்ற ஜமீன்தார் அப்போதைய ஆற்காடு நவாபிடம் சேனாதிபதியாய் இருந்தார். ஸ்ரீவைஷ்ணவ ஈடுபாட்டோடு, திருப்பதிக்கருகில் வசித்துக் கொண்டு, பெரிய ஜீயரிடத்தில் அபிமானம் கொண்டிருந்தார். திருமலை தாதாசார்யரும் இதனையறிந்து பெரிய ஜீயரிடம் சென்று தான் வந்த காரியத்தை தெரிவித்தார். அவரும் மகிழ்ந்து, நல்லதொரு கைங்கர்யமென்று தொண்டரமல்லனை வரவழைத்து, எப்படியாவது இவர் திருவுள்ளத்தை நிறைவேற்றிட கேட்டுக்கொண்டார்.
தொண்டரமல்லனும் அதற்கிசைந்து உடன்கூட்டத்தாரோடு உடையார்பாளையம் சென்று, ஜமீன்தாருக்கு தன் பிருதாக்களைக் காட்டி பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொடுக்கும்படி கேட்க, அவருமிசைந்து கொடுத்தார். நடுவே ஆர்க்காடு நவாபு இச்செய்தியறிந்து, அதனைத் தடுத்து நிறுத்திட, படைகளை அங்கங்கு நிறுத்தி, பெருமாளை கொண்டு செல்லவிடாமல் தடுத்தபோது இவர்கள் ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஒளிந்திருந்து, ஒரு காலத்தில் எல்லாரும் ஒன்று சேர்ந்து, நாம் எல்லாரும் தனித்தனியே இருந்து, "அடோ பய்யா?' என்று சப்தம் சொன்னால் ஒத்தைத் திருச்சின்னம் ஊதவேண்டியது, உடனே எல்லாரும் ஒன்று சேரவேண்டியது, முன்னே ஒரு நெருப்புச் சட்டியும் பின்னே அழுகையுமாய் நடுவில் சவம் போலே பெருமாளை ஆசந்தியில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு காடு தாண்டவேணும் இப்படி வந்தால் தான் நடுவில் எதிரிகள் தொந்தரவு இல்லாமல் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போகலாம் என்றும் நிச்சயித்து, அதன்படியே தொண்டரமல்ல ஜமீன்தார் உதவியால் உற்சவமூர்த்திப் பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து திருவத்தி மாமலையிலே சேர்த்தார்கள்.
இப்படி உற்சவப் பெருமாளை அவர்கள் கொண்டு வந்த காலம், விரோதி வருடம் பால்குண மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம், சனிவாரம், அமாவாஸ்யை திதி, விருஷப லக்னம் என்று இங்குள்ள கல்வெட்டொன்றால் அறியமுடிகிறது. இந்த கல்வெட்டு பெருந்தேவித் தாயார் சந்நிதியின் வடபுறம் திருமுற்றத்திலிருக்கும் குத்துக்கல்லில் தெலுங்குக் கல்வெட்டாகக் காணப்படுகின்றது.
இந்த உற்சவதிருமூர்த்தியின் திருமுகத்தில் தான் பிரம்மன் யாகம் செய்த போது எழுந்தருளியதால் ஏற்பட்ட வடுக்கள் காணப்படுவதாக இன்றும் அடியார்களால் கருதப்படுகிறது. இம்மூர்த்தி இன்று திருக்கோயிலின் கண்ணாடி அறையில் வழிபாட்டில் உள்ளார்.
இந்நிகழ்வுகளின் சான்றாக இன்றும் இந்த சந்நிதியில் பங்குனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் உடையார்பாளையம் ஜமீனிலிருந்து ஆண்டுதோறும் செலவு செய்து விசேஷமாக ஓர் உற்சவத்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. திருமலை தாதாசார்யர் உற்சவத் திருமேனி கிடைத்து விட்டபடியால் தாமுகந்தருளப் பண்ணின விக்ரகத்தைச் சந்நிதியிலேயே திருமஞ்சனத் திருமேனியாகக் கொண்டு பூசனைகளைத் தொடர்ந்தார் என்று அத்தி வரதன் வைபவம் என்ற நூலில் கூறப்படுகிறது. மேலும் தேனை மயிலூர் பட்டரைக் கொண்டு ஸ்ரீ பாஞ்ச ராத்திர சாஸ்திரப்படிக்கு திருவாராதனாதிகளை நடத்தி வந்தார். ஆகையால் இப்போதும் திருவத்திமா மலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் தானே ஒருவனாகி, ஒப்பில்லா முதல்வனாகி அருட்பாலித்தல் கண்கூடு.
அதற்கு முன்னெழுந்தருளி இருந்த திருமேனி இப்போது அனந்ததீர்த்தத்திலிருந்து வெளியேறி சேவை தரவிருக்கும் தாருமயமான திருமேனியே என்பதில் ஐயத்திற்கிடமில்லை. ஆகையால் இப்போது மங்களகரமான எழிலார்ந்த ஒப்பிலாத் திருமேனியோடு அருள்தரக் காத்திருக்கும் தாருமயமான (அத்தி மரம்) எம்பெருமாள் திருமேனி அன்று முதல் ஆழ்வார்களும், ஸ்ரீமன் நாதமுனிகளும் ராமானுஜரும், ஸ்ரீ தேசிகன் உள்ளிட்ட மற்ற ஆசார்யர்கள் அனைவரும் மங்களாசாசனம் செய்து ஆராதித்த திருமேனிதான் தீர்த்தத்தில் எழுந்தருளி இருப்பதால் திருவனந்தாழ்வானே நித்யாராதனம் செய்தருளுவதாக கருதப்படுகிறது. சமயச்சான்றோர்களின் நற்சொல்லே சாமான்யர்களின் ஆழ்நம்பிக்கையாகவும் திகழ்கிறது.
ஸ்ரீ ஆதி அத்திகிரி வரதர், மூலவர் என்று அழைக்கப்படும் இப்பெருமாள், கடந்த 40 ஆண்டுகளாக அனந்தசரஸ் புஷ்கரணி குளத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தின் நடுவே தண்ணீருக்குள் இருக்கிறார். இதற்கு முன்பு அதாவது 2.7.1979 -ஆம் ஆண்டும் அதற்கும் முன்பு 12.7.1937-ஆம் ஆண்டிலும் பெருமாளை தண்ணீரிலிருந்து வெளியே எழுந்தருளச் செய்து, கண்டு வணங்கி அருள்பெற்றிருக்கிறார்கள். 48 - ஆம் நாள் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு மீண்டும் அனந்தசரஸிலேயே திரும்ப எழுந்தருளியுள்ளார். இந்நிகழ்வு திருக்கோயிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பு 13.06.1892, அதற்கும் முன்பு 18.8.1854-ஆண்டிலும் வெளிவந்து பொதுமக்களுக்கு தரிசனம் தந்திருக்கிறார்.
அத்திவரதர் தரிசனத்தை ஒட்டி, 2019 ஜூலை 1 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதிவரை, அத்திவரதர் தரிசனத்தை காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்.
- முனைவர் கோ . சசிகலா