கணவனைக் காத்த காரிகை!

"ஏதர்மராஜரே, நான் உண்மையான பதிவிரதை; உன்னைத் தொடர்ந்து நான் வரும்போதே இது உனக்கு தெரியவில்லையா? என் கணவன் உயிரை திரும்பத் தா' என்றாள் அந்த காரிகை
கணவனைக் காத்த காரிகை!

"ஏதர்மராஜரே, நான் உண்மையான பதிவிரதை; உன்னைத் தொடர்ந்து நான் வரும்போதே இது உனக்கு தெரியவில்லையா? என் கணவன் உயிரை திரும்பத் தா' என்றாள் அந்த காரிகை. அதற்கு யமதர்மர் "தாயே மானிட பெண்ணான நீ என்னை பின் தொடர்வதால் உன் பதிவிரதா சக்தியை உணர்கிறேன். அதற்காக உனக்கு நான் ஒரு வரம் தருகிறேன். ஆனால் என்னை நீ பின் தொடராதே' என்றார். "சரி, அப்படியானால் சால்வ நாட்டின் சிபி வம்சத்து மன்னனும், என் மாமனாரும் ஆன தியுமத்சேன மஹாராஜாவிற்கு; அவர் இழந்த பார்வையையும், நாட்டையும் திரும்பத் தரவேண்டும்' என்றாள். தர்மராஜனும் தந்தார். அவளும் வணங்கி திரும்பவும் பின் தொடர்ந்தாள்.
 "தாயே என்னோடு இப்படித் தொடராதே; உன் கணவனின் உயிரை மட்டும் என்னால் தர இயலாது' என்றார். அந்த நங்கை நல்லாள் சமயோஜிதமாக, "சரி தர்மரே, உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை; என் மாமனாரின் சந்ததி அழியாமல் இருக்கவும், அவருடைய அரசு சத்யவானின் மகன்களுக்கு கிடைக்கவும் வரம் தாருங்கள்' என்றாள். கொஞ்சம்கூட யோசிக்காமல் "தந்தேன்' என்று கூறி யமதர்மர் மாட்டிக் கொண்டார். பின்னர், "எனக்கு குழந்தை வரம் தந்த மஹாப்பிரபுவே; தங்களின் வரத்தின்படி என் குழந்தை பேற்றுக்கு என் கணவரைத் தாருங்கள்' என்றாள். திகைத்துப்போன எமதர்மர், "ஓர் உயிருக்கு அதன் காலம் முடிந்தபின் அந்த உயிரை எடுப்பதற்கு மட்டுமே எனக்கு உரிமை உண்டு; நீ கேட்பதைப்போல் திரும்பத் தரும் அதிகாரம் எனக்கு இல்லை' என்றாலும் உன் விடாமுயற்சிக்குப் பரிசாக உன் கணவனின் உயிரைத் தருகிறேன்; உன் குழந்தைகள் அரசாளும், அன்பு மரணத்தை வெல்லும் என்பதற்கு நீ சான்று' என்றார். அவளே, சாவித்ரி ஆவாள்.
 மந்திர நாட்டு மன்னன் அசுவபதிக்கு சூரியனின் அருளால் கிடைத்த மகள் என்பதால் சாவித்ரி என பெயரிட்டு வளர்த்து வந்தான். சாவித்ரிக்கு திறமையான மணாளனை அவளே தேர்வு செய்ய விரும்பினாள். விதியின் வலிமையால் தன் நாட்டைத் துறந்து காட்டில் தன் தாய், தந்தையருடன் இருந்த இளவரசரான சத்தியவான் மீது விருப்பம் கொண்டு; நாரதர் இன்னும் 12 மாதங்களில் சத்தியவான் இறந்துவிடுவான் என்று எச்சரித்தும் கேளாமல்; அவனையே மணப்பேன் என்ற உறுதியுடன் தன் தாய் தந்தையின் ஆசியுடன் மணந்தாள்.
 வாழ்வு நகர்ந்தது; என்றைக்கு சத்தியவான் இறப்பான் என்பது சாவித்ரிக்கு தெரிந்திருந்தாலும்; அவனிடம் சொல்லாமல்; இறப்பதற்கு மூன்று நாள்களே உள்ள நிலையில் ஊன் உறக்கமின்றி கடும் விரதம் மேற்கொண்டாள். அடுத்த நாள் காட்டிற்கு விறகு வெட்டச்சென்ற தன் கணவனுடன் தானும் சென்றாள். களைப்பின் மிகுதியால் சாவித்ரியின் மடிமீது தலைவைத்து சற்று உறங்க ஆரம்பித்த அவன் உயிர் பிரிந்தது. அப்போது சத்தியவானின் உயிரை எடுத்துச்செல்ல வந்த எமதூதர்களால் அவனை நெருங்க முடியவில்லை. எனவே எமனே நேரில் வந்து சாவித்ரியைப் பார்த்து உயிர் பிரிந்த உடலை விட்டுவிடு, மரணம் என்பது மனிதனின் விதி; என்றபின் சாவித்ரி உடலை விட்டு விலகி நின்றாள். இதன் தொடர்ச்சி தான் நாம் ஆரம்பத்தில் படித்த சம்பாஷனை. மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது மார்கண்டேய முனிவர் பதிபக்தியின் மேன்மையை போற்றும் முகமாக இந்த கதையை சொன்னார்.
 தமிழ் மாதம் மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் சாவித்ரி விரதம் இருந்து இந்த பேற்றினை பெற்றதால்; மங்கையர்கள் ஒவ்வொரு வருடமும் இதனை காமாட்சி நோன்பு, கெüரி நோன்பு, சாவித்ரி விரதம் என்று பல பெயர்களில் கூறினாலும் நம் தமிழகத்தில் காரடையான் நோன்பு என்றே அழைக்கின்றனர்.
 இந்த நன்னாளில் சுமங்கலிகள்; காலையிலிருந்து பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் எதையும் உண்ணாமல், பழவகைகளை மட்டும் சாப்பிட்டு மாலைவரை நோன்பிருந்து காராமணி என்ற தானியத்தை ஊற வைத்து கார் அரிசியில் போட்டு வேகவைத்து வெல்ல அடை, உப்பு அடை, கெட்டி வெண்ணெய் மற்றும் பலவகையான பழங்களை வைத்து காமாட்சி அம்மனுக்கு படைத்து மாங்கல்ய பலம் வேண்டி கீழ்கண்ட மந்திரத்துடன் பூஜை செய்வார்கள்.
 ஸ்லோகம்: "உருகாத வெண்ணெய்யும் ஓரடையும் நான் நூற்றேன், ஒருக்காலும் என் கணவன் பிரியாதிருக்க வேண்டும்'
 என்று வணங்கி, வீட்டிலுள்ள மூத்த சுமங்கலி. பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்தி மற்றவர்களுக்கு மஞ்சள் கயிற்றினை கழுத்தில் கட்டிவிடுவார்கள்.
 இந்த வருடம் 15.3.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 5:00 மணி முதல் 5:30 மணிக்குள் மாசியும் பங்குனியும் கூடும் காரடையான் நோன்பு வருகிறது. கால தேவனுடன் போராடி தன் கணவனைக் காத்த காரிகை சத்தியவான் சாவித்ரி இந்த விரத நாளில் மானசீகமாக வந்து ஆசிர்வதிப்பாள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
 - எஸ். எஸ். சீதாராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com