பொருநை போற்றுதும்! 31- டாக்டர் சுதா சேஷய்யன்

கன்னடியன் அணையும் கால்வாயும், 15 அல்லது 16 நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பொருநை போற்றுதும்! 31- டாக்டர் சுதா சேஷய்யன்

கன்னடியன் அணையும் கால்வாயும், 15 அல்லது 16 நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறப்பட்டுள்ள கதையெல்லாம் உண்மையா, கற்பனையா என்று சிலர் பரிகாசம் பேசக்கூடும். யாரோ ஒருவர் இருந்திருக்கிறார், ஊருக்கு நல்லது செய்திருக்கிறார்! கதையில் வருகிற தகவல்கள் சில, கற்பனையாகக்கூட இருந்துவிட்டுப் போகட்டும்; அதனாலென்ன? தர்ம வழியில் செல்வத்தைச் செலவழிக்கவேண்டும் என்பதற்கும், பிறப்பும் குலமும் முக்கியமல்ல, எண்ணச் சிறப்பே முக்கியம் என்பதற்கும், சத்தியம் சாமி வடிவில் வெளிப்படும் என்பதற்கும், பொருநையாள் கற்பிக்கும் பாடம்தான் கன்னடியன் கால்வாயின் கவின் வரலாறு. "என் காதல் மலையளவு உயரமானது' என்றுரைக்கும் காதலனின் கற்பனையில் கவித்துவம் இருப்பதாக நினைத்தால், அறத்தை அறிவுறுத்தும் ஆற்றுக் கதையும் கவிதைதான்!
 1880 - வாக்கில், கேப்டன் ஹார்ஸ்லி, கன்னடியன் அணையைச் செப்பனிட்டிருக்கிறார். இடைப்பட்ட காலத்திலும் அணையும் கால்வாயும் பற்பல சீர்பணிகளைக் கண்டிருக்கக்கூடும். இன்றளவில் சுமார் 33.95 கி.மீ. நீளம் கொண்ட கன்னடியன் கால்வாய், வீரவநல்லூர், சேரன்மாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம் பகுதிகளில் 17 -க்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்களுக்கு நீர் தருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சாகுபடிக்குக் கொணர்ந்து, இந்தப் பகுதி மக்களின் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமை, கன்னடியன் கால்வாய்க்கு உண்டு.
 பிடித்த புளியும் எரித்த சுவாமியும்
 ஆற்றுப் போக்கும் அறப் போக்குமாக இருக்கும் இந்தக் கதையின் வரலாற்றுப் படிவுகளை அம்பாசமுத்திரத்திலும் காணக்கூடுகிறது. இதற்காக, இப்போதைய அம்பையின் தெற்குப் பகுதியிலுள்ள அருள்மிகு காச்யபநாத சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லலாம், வாருங்கள்.
 மக்கள் வழக்கில் காசிநாத சுவாமி என்று வழங்கப்படுகிற இக்கோயில் மூலவர், காச்யப முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்றவர்; ஆகவே, காச்யப நாதர் அல்லது காச்யபேச்வரர். காச்யப முனிவர் இப்பகுதிக்கு வந்தார்; தாமிராவின் திருக்கரையில் மணல் லிங்கம் பிடித்து வழிபட்டார்; இறைவனைத் தீர்த்தமாட்டுவதற்காகத் தீர்த்தம் ஏற்படுத்தினார்; அபிஷேக ஆராதனைகள் செய்தார். இவ்வாறு இங்கே எழுந்தருளிய காச்யபேச்வரருக்குத் திருப்போத்துடையார், திருப்போத்துடைய நாயனார், போத்துடைய ஆழ்வார், போத்துடைய மாதேவர், போத்து பட்டாரகர் என்றெல்லாம் திருநாமங்கள். "போத்து' என்பது விலங்குகளின் இளங்கன்றைக் குறிக்கும் சொல்; பொதுவாக விலங்கினக் கன்று என்றாலும், இளங்காளைக்குக் குறிப்பாகப் பயன்படுத்தப்படும். ரிஷபக் காளையை வாகனமாகக் கொண்டவர் என்பதால் சிவனாருக்குப் போத்தீசர் என்று திருநாமம். போத்தீச்வரம் என்றழைக்கப்பட்ட அம்பை, காலப்போக்கில் "போற்றீச்வரம்' ஆனது (போற்றி என்று சொல்லவேண்டியதைப் பழக்கத்தில் "போத்தி' என்று கொச்சைப்படுத்தி விட்டதாகக் கருதிவிட்டனர் போலும்!).
 ராஜ ராஜ சோழன், முதலாம் குலோத்துங்கன், குலசேகர பாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகியோர் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர். கோயிலின் தெற்கு நுழைவாயில் அருகே, பொருநையாள் சுழித்துப் பாய்கிறாள். இங்கு, கங்கை நல்லாள் வந்து பொருநையோடு கலப்பதாக ஐதீகம். ஆகவே, இந்தப் பகுதியைக் காசி என்றும், சுவாமியை காசிநாதர் என்றும் போற்றுவது வழக்கம். கிழக்கு நோக்கியவராக அருள்கிறார் அருள்மிகு காச்யபேச்வரர்.
 இந்த சுவாமிக்குப் பூஜைகள் செய்த அர்ச்சகர்தான், தங்க மூட்டையைப் பருப்பு மூட்டை என்று சொன்னவர். இந்த சுவாமியின் சக்தியைத்தான் புளியமரத்திற்கு மாற்றினார். காச்யபேச்வரர் சந்நிதியை வலம் வரும்போது, பிராகாரத்தின் தென் சுற்றில் அருள்மிகு எரித்தாள் உடையாரையும் தரிசிக்கலாம். சிவலிங்கத் திருமேனியாக, மேற்கு நோக்கியவராக எழுந்தருளியிருக்கிறார். அர்ச்சகரை எரித்தவர் என்பதாலும் தீமையைத் தடுத்து ஆட்கொண்டவர் என்பதாலும், எரித்தாட்கொண்டார், எரிச்சாடுடையார், எரித்தாள் உடையார் (எரித்த திருவடி கொண்டவர்) போன்ற பெயர்கள். இந்தக் கோயிலையே எரித்தாளுடையார் கோயில் என்று குறிப்பிடுவார்கள்.
 கன்னடியருக்கு பதிலாக, சிவசர்மா என்னும் அந்தணர் பெருஞ்செல்வத்தோடு தென்னாடு வந்தார் என்றும், அம்பாசமுத்திர அர்ச்சகரிடத்தில் செல்வத்தைக் கொடுத்துவிட்டு அகத்தியரைக் காணச் சென்றார் என்றும், ஏமாற்ற முற்பட்ட அர்ச்சகருக்குச் சாந்தவேதப் பிரமோதனன் என்று பெயர் என்றும் மாற்றுத் தகவல்கள் சில இப்பகுதியில் உலவுகின்றன.
 புதிய சிக்கலும் பிள்ளையார் மிளகும்
 கன்னடியன் கால்வாயின் கதை இத்தோடு முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்கிறது. அணையையும் கட்டி, கால்வாயையும் அமைத்து, காலாச்சி மதகையும் உருவாக்கிவிட்டார் கன்னடியர். ஆனால், ஆற்றுவரத்து குறைந்த காலத்தில், அணையின் காரணமாகவும் கால்வாய்ப் பாய்ச்சல் காரணமாகவும், ஆற்றின் கிழக்குத் தொடர்ச்சிக்கு நீர் குறைந்தது. கலங்கிவிட்டார் கன்னடியர். "ஐயோ, சில பகுதிகளின் பாசனத்திற்கு உதவும் என்று பார்த்தால், பிற பகுதிகளுக்கு நீர் குறைகிறதே' என்று தவித்தார். அகத்தியரை எண்ணித் தவமிருந்தார். அந்தணரின் உள்ளத்தில் தோன்றிய அகத்தியர் வழி ஒன்றைக் காட்டினார்.
 கால்வாய்க்குப் பக்கத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்யச் சொன்னார். இந்த விநாயகரின் திருமேனி முழுவதும் மிளகை அரைத்துப் பூசி, பின்னர் அபிஷேகம் செய்யச் சொன்னார். அபிஷேக நீர் கால்வாயில் கலந்துவிடும். இவ்வாறு செய்தால், கால்வாயிலும் சரி, பொருநையிலும் சரி, நீர் வரத்து குறையாது என்றருளினார். சேரன்மாதேவியில் எழுந்தருளியிருக்கும் இந்தப் பிள்ளையாருக்கே "மிளகுப் பிள்ளையார்' என்று பெயர். இப்போதும், தண்ணீர்க் கஷ்டம் வரும்போதெல்லாம், பொருநைக் கரை விவசாயிகள் மிளகுப் பிள்ளையாருக்கு மிளகரைத்துப் போடுகிறார்கள்.
 பாசனத்திற்காகத் திறந்துவிடும்போது, கன்னடியன் அணைக்கட்டில்தான் முதலில் திறக்கவேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள். கால்வாயில் நீர் பாய்ந்துவரும்போது, மிளகுப் பிள்ளையார் மகிழ்ச்சி அடைகிறாராம். தம்முடைய அருளை நீராவியாக்கிப் பொதிகைமீது மேகங்களாகச் செலுத்துகிறாராம். இதனால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெருமழை பொழிந்து, தாமிரவருணியில் தண்ணீர் பிரவாகம் பொங்கும். கன்னடியன் அணை மட்டுமல்லாமல், பிற அணைகளிலும், கிளை நதிகளிலும், கால்வாய்களிலும் நீர் வரத்து அதிகரிக்கும். விளைச்சல் பெருகும். சுபிட்சம் நிறையும். மக்களின் வாழ்வு சிறக்கும்.
 - தொடரும்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com