திருத்தொண்டர் பெருமை சேர்க்கும் அறுபத்துமூவர் திருவிழா!

சிவபெருமான் மீது ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச் செய்த 63 சிவதொண்டர்களின் சரித்திரத்தைக் கூறுவது

சிவபெருமான் மீது ஆறாத அன்பு ஒன்றைக் கொண்டே செயற்கரிய செயல்களைச் செய்த 63 சிவதொண்டர்களின் சரித்திரத்தைக் கூறுவது, தெய்வத்திரு சேக்கிழார் இயற்றிய, பன்னிரண்டாவது சைவத்திருமுறை நூலான பெரிய புராணம். இந்த சிவ தொண்டர்களே நாயன்மார்களெனப் போற்றப்படுகின்றனர்.
 உலகம் உய்யவும், சைவம் தழைத்து ஓங்கவும், பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டத் தீந்தமிழ்ப் பாடல்களால் அமையப்பெற்ற இந்நூல், தில்லை அம்பலத்தரசனே அடியெடுத்துக் கொடுத்த பெருமை உடையது என்றால், அந்த சிவனடியார்களின் பெருமை புரிந்து கொள்ளலாம். இந்த அடியார்களைப் போற்றும் வகையிலும், அவர்களின் பெருமையை அடுத்த தலைமுறைகள் புரிந்து கொள்ளவும், தமிழகத்தின் பல திருக்கோயில்களில் அறுபத்து மூவர் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 அவ்வண்ணமே தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னையில் சிறப்புற்று விளங்கும் மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் உறையும் திருக்கோயிலிலும் அறுபத்து மூவர் உற்சவம் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழாவின் ஓர் அங்கமாகக் கொண்டாடப்படுகிறது.
 மயிலாப்பூர் என்பதே மயிலை என்று மருவியது. "மயிலையே கயிலை கயிலையே மயிலை'"என்ற சொல் வழக்கு இத்தலத்தின் பெருமையை விளக்கும். மயில்+ஆர்ப்பு + ஊர் என்பதே மயிலாப்பூர் என்றானது. ஒரு காலத்தில், மயில்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடமாக இது இருந்தது. ஸ்ரீபார்வதிதேவி, மயிலாக வந்து சிவனாரை வழிபட்ட அற்புதமான திருத்தலம். எனவே மயூராபுரி, மயிலை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
 இத்திருத்தலத்தில் கொண்டாடப்படும் பங்குனி பெருவிழா இவ்வாண்டு, 11.3.2019 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்திருவிழா 17- ஆம் தேதியும், அதற்கு மறுநாள் 18- ஆம் தேதி, பங்குனி விழாவின் சிகரமாக விளங்கும் அறுபத்துமூவர் திருவிழா நடைபெறுகின்றது.
 அன்று காலையில் திருஞானசம்பந்தர் எழுந்தருள, பூம்பாவையின் அஸ்தி கலசத்துடன் சிவநேசர் செட்டியாரும் வர, ஓதுவா மூர்த்திகள் - மட்டிட்ட புன்னையங் கானல் - திருப்பதிகத்தினை மனமுருகப் பாடுவர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் தீபாராதனை நிகழும். இறுதிப்பாடலான பத்தாம் பாடலின் போது அஸ்தி கலசமாகப் பாவிக்கப்பட்ட மலர் குவியலில் இருந்து பூம்பாவை உயிர் பெற்று எழுகின்றாள். சுற்றி நிற்கும் பக்தர்கள் மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.
 அன்று மாலையில் அறுபத்து மூவர் ஆனந்தப் பெருவிழாவில் விநாயகர் முன் செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் அருள்மிகு கபாலீஸ்வர்-கற்பகவல்லியும், வள்ளி, தேவயானியுடன் முருகப் பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வருகின்றனர். அவர்களுடன் - திருவள்ளுவர் வாசுகி, முண்டகக்கண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரெளபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் - என பலரும் சேர்ந்து கொண்டு இவ்விழாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.
 இவ்விழாவையொட்டி மயிலை கபாலீஸ்வரர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. சென்னை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கு வருகைதரும் பக்தர்களின் பசியார, பல தர்ம ஸ்தாபனங்களும், அடியார்களும், ஆங்காங்கே நீர் மோர், குளிர்பானங்கள், மதிய உணவு, இனிப்புகள் உள்ளிட்டவை வழங்கி, ஆனந்த கோலாகலமாக திருவிழா நிநடைபெறுகின்றது. மார்ச் 20 -ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
 - ரஞ்சனா பாலசுப்ரமணியன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com