நேசனின் நேசர்களை நேசித்தல்

எல்லா சமயங்களும் தோற்றுவித்தவர்களையும் தோன்றல்களையும் தோத்திரம் செய்ய சாத்திரம் படைக்கும்.
நேசனின் நேசர்களை நேசித்தல்

எல்லா சமயங்களும் தோற்றுவித்தவர்களையும் தோன்றல்களையும் தோத்திரம் செய்ய சாத்திரம் படைக்கும். இறைதூது பெற்றவர்களும் வேதம் பெற்றவர்களும் வேறுபட்டவர்கள் அல்ல. கூறு படுத்தி பார்க்க வேண்டாம். அவர்கள் அனைவரும் இறைவனாம் நேசனின் நேசர்களே. நேசனின் நேசர்களை நேசிக்க சொல்லி விசுவாசத்தை விரிவாக்குகிறது திருகுர்ஆனின் 2-136 ஆவது வசனம் "அல்லாஹ்வையும் எங்கள் மீது அருளப்பட்டவைகளையும் இப்ராஹீம், இஸ்மாயில், இஸ்ஹாத், யாகூப் இன்னும் இவர்களின் சந்ததிகள் முதலியோரின் மீது அருளப்பட்டவற்றையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் வழங்கப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசம் கொண்டோம். அவர்களில் எவருக்கும் இடையில் நாங்கள் பாகுபாட்டைச் செய்ய மாட்டோம். நாங்கள் அவனுக்கே கீழ்படிகிறவர்கள் என்று நீங்கள் கூறுங்கள்''.
 அல்லாஹ்வை வணங்காது அவனின் படைப்புகளை அவனுக்கு இணையாக வைத்து வணங்குபவர்கள் இறைவனாம் நேசனின் நேசர்கள் அல்லர். உறுதியுடன் அல்லாஹ்வை மட்டும் அடிபணிபவர்களே நேசனின் நேசர்கள். நேசனின் நேசர்களை நேரிய வழியில் சீராய் வாழ செப்புகிறது செம்மறை குர்ஆனின் 2-165 ஆவது வசனம். நபிமார்கள் நேசனின் நேசர்கள். அவர்கள் காட்டியபடி அல்லாஹ்விற்கு அஞ்சி நபிமார்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை நம்பி இறைவனைத் தொழுது தக்கோருக்குத் தக்கபடி தர்மம் கொடுத்து ஒப்பந்தங்களை ஒழுங்காய் நிறைவேற்றி சிரமங்கள் ஏற்படும் பொழுது பொறுமை காப்போரே நேசனின் நேசர்களை நேசிப்பவர்கள் எனறு பேசுகிறது 2-177 ஆவது வசனம்.
 நேசனின் நேசர்களை நேசிப்பது என்பது அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் தூதர்களையும் விசுவாசித்து அல்லாஹ்விடம் மீளுவதை உணர்ந்து மன்னிப்பு கோருவதும் ஆகும் என்று அறிவிக்கிறது அருமறை குர்ஆனின் 2-285 ஆவது வசனம். உங்களிலிருந்து ஒரு சாரார் நன்மையின்பால் அழைப்பவர்களாகவும் நன்மையை ஏவுகிறவர்களாகவும் தீயதை விட்டு விலக்குகிறவர்களாகவும் இருப்பார்கள். அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று நேசனின் நேசர்களின் நேரிய வழியைச் சீராய் சொல்கிறது செம்மறை குர்ஆனின் 3-104 ஆவது வசனம். விசுவாசம் கொண்டவர்கள் விசுவாசிகளை அல்லாது பிறரை நேசிக்க கூடாது என்ற 3-118 ஆவது வசனம் நேசனின் நேசர்களையே நேசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
 விசுவாசிக்கும் ஆண்களும் பெண்களும் அவர்களில் ஒருவருக்கொருவர் மற்றவருக்கு நேசர்களாக இருக்கின்றனர். அவர்கள் நன்மையை ஏவி தீயதைத் தடுப்பார்கள். தொழுகையை நிறைவேற்றி ஜகாத்தைக் கொடுப்பார்கள். அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் வழிபடுவார்கள். அவர்களுக்கு அல்லாஹ் கிருபை செய்வான் என்று செப்பும் செம்மறை குர்ஆனின் 9-71 ஆவது வசனம் அல்லாஹ்வின் நேசனின் நேசர்களின் ஆறு பண்புகளைப் பகர்ந்து அப்பண்புகளைக் கடைபிடிப்போரை நாம் நேசிக்க போதிக்கிறது. அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி நடப்போருக்கு நன்மாராயம் கூற நந்நபி (ஸல்) அவர்களுக்கு அறிவுறுத்தும் திருமறை குர்ஆனின் 9-112 ஆவது வசனப்படி நேசனின் நேசர்களை நேசிக்க வேண்டும். விசுவாசிகள் அல்லாஹ்விற்குப் பயந்து உண்மையாளர்களுடன் உறவு பூண புகலும் 9-119 ஆவது வசனமும் நேசனின் நேசர்களை நேசிக்க சொல்கிறது.
 நீதியாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான் என்று 49-9, 60 -8 ஆவது வசனங்கள் வரையறுக்கின்றன. உலகில் அதிகமான நாடுகளில் குடியாட்சி கோலோச்சும் தற்காலத்தில் மக்கள் ஆட்சியின் மாண்புகள் மதிப்பு இழக்கும் பொழுதும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பொழுதும் மனித நேயம் பாதிக்கப்படும் பொழுதும் தறிகெட்ட நெறிபிறழும் சட்டங்கள் முறையற்று இயற்றப்படும் பொழுதும் நிறையை குத்திகாட்டி நிறைவான தீர்ப்புகள் வழங்கி தியாகத்தை வியாபாரமாக்காமல் விலைக்கு விற்காமல் நிலை நாட்டும் நீதிபதிகள் நேசனின் நேசர்கள் என்பதையும் அந்த நேசர்கள் மக்களால் நேசிக்கப்படுவதையும் நிதர்சனத்தில் காண்கிறோம்.
 எங்கள் நட்பு (இறைவன்) அல்லாஹ் என்று கூறி உறுதியாக இருப்பவர்கள் நேசனின் நேசர்கள் என்று உறுதிபடுத்துகிறது 41-30 ஆவது வசனம். நபி தோழர் ஸýப்யானுப்னு அப்தில்லாஹித் தக்பீ (ரலி) அண்ணல் நபி (ஸல்) அவரிகளிடம் பற்றி பிடித்து பக்குவமாய் நடக்கும் செயலைச் செப்புமாறு கேட்பொழுது இவ்வசனத்தை இயம்பிய நயமான நபி (ஸல்) அவர்கள் என் இறைவன் அல்லாஹ் என்று கூறி அதில் நிலையாக நிற்க நினைவுறுத்தினார்கள். உங்களில் மிக கண்ணியமானவர் அல்லாஹ்விடத்தில் மிக்க பயபக்தி உள்ளவர் என்ற 49- 13 ஆவது வசனம் ஆதம்- ஹவ்வா இணையில் உருவான மக்களில் ஏற்றத்தாழ்வு கிடையாது. எல்லாரும் சமமானவர்களே. ஆயினும் அல்லாஹ்விடத்தில் மிக்க பயபக்தி உடையோர் கண்ணியப் படுத்தப்படுவர் என்று உரைத்திறது. நேசனின் நேசர்களை நேசிப்பது நேசர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் கண்ணியம்.
 ஈசா நபி அவர்களிடம் மனிதரில் உயர்ந்தவர்கள் யார் என்று கேட்டனர். இருபிடி மண்ணை கையில் எடுத்து இம்மண்ணில் உயர்ந்தது எது என்று மக்களையே வினவினார். இருபிடி மண்ணையும் ஒரு பிடி மண்ணாக்கி எறிந்து விட்டு மண்ணால் படைக்கப்பட்ட மனிதரில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. அல்லாஹ்விடத்தில் மிக்க பயபக்தி உடையவர் அவர்களில் கண்ணியம் ஆனவர் என்று அறிவித்தார்கள்.
 அல்லாஹ்வையும் அவனின் நூதரையும் விசுவாசித்து ஐயமின்றி அவர்களின் உயிர் உடைமைகளை அல்லாஹ்வின் பாதையில் பணயம் செய்கிறவர்கள் உண்மையானவர் என்று உரைக்கும் 49- 15 ஆவது வசனம் நேசனின் நேசர்களை நிதர்சனத்தில் காண காட்சிபடுத்துகிறது. அல்லாஹ்வை அந்தரங்கத்தில் அஞ்சுபவர்கள் நேசனின் நேசத்தைப் பெற்றவர்கள் என்பது 67-12 ஆவது வசனத்தில் உணர்வோர் உணரும் உட்பொருளாக உரைக்கப்படுகிறது. பகிரங்கத்தில் பலரும் அறிய அல்லாஹ்வை அஞ்சுவதைவிட தனித்து யாரும் காணாத பொழுது அல்லாஹ்வை அஞ்சி விஞ்சிடாது வரம்பு மீறாது வரையறுத்தபடி செயல்படும் செம்மல்கள் நேசனின் நேசர்கள்.
 அல்லாஹ்வின் படைப்புகள் நேசத்திற்குரியவை அல்ல. அல்லாஹ் மட்டுமே நேசன் என்று கூறும் 26-77 ஆவது வசனப்படி எண்ணற்ற இன்னல்களையும் இடுக்கண்களையும் இடையுறாது துய்த்த பொழுதும் துவளாது ஏக இறை கொள்கையை மறுப்பவர்களுக்கு மறைக்காது மக்களுக்கு எடுத்துரைத்த இப்ராஹீம் நபி ஹலீலுல்லாஹ்- நேசனின் நேசர் என்ற பெயரைப் பெற்றார்கள். அந்த நேசனின் நேசரின் நேர்வழியே சீராய் செப்பப்பட்டது இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களாலும். அந்த நேசனின் நேசர் இன்றும் நேசிக்கப்படுகிறார்கள்.
 நேசனின் நேசர்களை நேசித்து நேரிய வழியில் சீராய் வாழ்வோம். பேராளன் அல்லாஹ்வின் பேரருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com