பங்குனி உத்திர திருநாளும் பஞ்சகருட சேவையும்!

பங்குனி உத்திர திருநாளும் பஞ்சகருட சேவையும்!

தஞ்சை மாநகரம், மகதம், மாளவம், புலிந்தம், மத்ஸ்யம் முதலான 56 தேசத்துள் மேலான தெய்வ பூமியாகத் திகழ்கின்றது.

தஞ்சை மாநகரம், மகதம், மாளவம், புலிந்தம், மத்ஸ்யம் முதலான 56 தேசத்துள் மேலான தெய்வ பூமியாகத் திகழ்கின்றது. தஞ்சைக் கோயில், தஞ்சை மாமணிக்கோயில், என்றவாறெல்லாம் போற்றப்பெறும் இந்த ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசத்திற்கு "ஸித்தி திக்ஷத்திரம்' என்ற மற்றொரு பெயரை கண்டியூர்த் தலபுராணம் தெரிவிக்கின்றது.
 "கண்டன திக்ஷத்திரம்' ஆகிய திருக்கண்டியூர் திவ்யதேசம் காவிரி நதிக்கு தெற்கிலும், "ஸித்தி திக்ஷத்திரம்' விண்ணாற்றங்கரைக்கு வடக்கிலும், "ஸங்கம திக்ஷத்திர'மாகிய "கூடலூர்' ஆடுதுறை பெருமாள் கோயிலுக்கு தென்மேற்கிலும் அமைந்துள்ளது. இத்தலத்துறை எம்பெருமான் தன்னை அண்டிவருபவர்களின் பாபங்களை அகற்றுவதால் தலத்திற்கும் கண்டனபுரம் என்பது பெயர்.
 ஒரு காலத்தில் பலிச்சக்கரவர்த்தி இத்தலத்தினை பிரதிஷ்டை செய்தார் என்பதால் இதற்கு பலி திக்ஷத்திரம் என்ற பெயருமுண்டு. இத்தல வழிபாடு சாயுஜ்ய முக்தியை அளிக்கும் என்கிறது இத்தல புராணம். கமலாக்ருதி விமானத்தையும், கமலவல்லி நாதனையும் வணங்குதல் அளவற்ற பயனைத்தரும்.
 ஒருசமயம், ஜகத்ஸ்ருஷ்டியின்போது மிகத் தத்துவரூபமாக பிரம்மதேவனை விஷ்ணு படைத்தார். பிரம்மதேவருக்கு ஐந்து முகங்கள் இருந்தபடியால் அதைக்கண்டு மகாலட்சுமி திடுக்கிட்டாள். இயற்கைக்கு மாறான இந்த பிரமனை ஈன்றதால் மகாவிஷ்ணு நம்மைப் பார்க்காமல் இருந்துவிடுவாரோ என மகாலட்சுமி ஐயமுற்றாள். தன் மகனான பிரம்மாவின் நடுமுகத்தை அகற்ற சிவபெருமானை வேண்ட, பிரம்மாவின் நடுமுகத்தை எடுத்தார் ஈஸ்வரன். அதனால் பிரம்மஹத்திதோஷம் சிவபெருமானைப் பற்றுகிறது. பின்னர் நாராயணன் அருளால் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுதலை பெற்றார் என கண்டனபுர திக்ஷத்திர மாகாத்மியம் கூறுகிறது.
 பஞ்சகருடசேவை
 திருக்கண்டியூர் திவ்யதேசம்- ஸ்ரீ அரசாப விமோசனப் பெருமாளுக்கு 9 நாள்கள் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில் நிறைவடையுமாறு கொண்டாடப்பெறுகிறது. பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் திருவையாற்றுக்கு அருகிலுள்ள ராயம்பேட்டைக்கு ஸ்ரீ அரசாபஹரன் எழுந்தருளுகிறார். ராயம்பேட்டையில் ஸ்ரீ வரதராஜகோபாலப் பெருமாள் அருள்பாலிக்கின்றார். ஆதிகாலத்தில் கொள்ளேகாலப் பகுதியைச் சார்ந்த சத்யாகால ஸ்ரீவைஷ்ணவர்களான சடமர்ஷண கோத்திரத்தவர்கள் ராயம்பேட்டையில் குடியேறி பஞ்சகருட சேவை விழாவினை சிறப்பாகச் செய்து வந்தனர். அவ்விழாவில் தலத்து எம்பெருமான் ராயம்பேட்டை ஸ்ரீ வரதராஜகோபாலன், கல்யாணபுரம் ஸ்ரீநிவாசன், பெரும்புலியூர் ஸ்ரீ சுந்தரராஜன், திங்களூர் ஸ்ரீ வரதராஜன், கண்டியூர் ஸ்ரீ அரன்சாபம் தீர்த்தவன் ஆகியோர் கருடசேவைக் காட்சிதருவர்.
 அவ்வாறமையும் பஞ்சகருட சேவைக்கு பதிலாக இன்றைய நாளில் கல்யாணபுரம், பெரும்புலியூர் எம்பெருமான்களைத் தவிர மற்ற ராயம்பேட்டை, திங்களூர், கண்டியூர் ஆகிய மூன்று தலத்துப் பெருமாள்களை மட்டும் கருடசேவைதனில் கண்டு மகிழலாம்.
 இவ்வாலயத்தில் தற்போது பிரம்மோற்சவம் நடைபெற்று வருகின்றது. 16.3.2019 அன்று நான்காம் திருநாள் கருடசேவை. அன்றைய தினம் காலை வீதியுலாவை முடித்துக்கொண்டு ஸ்ரீ அரசாப விமோசனப் பெருமாள் ராயம்பேட்டை விஜயம் செய்து, கருடசேவையில் கண்டியூருக்கு எழுந்தருளுவது கண்கொள்ளாக் காட்சியாகும். 21.3.2019 அன்று பங்குனி உத்திரத்தில் திருத்தேர் பவனியுடன் விழா நிறைவடைகிறது. திருக்கண்டியூர் திவ்யதேசம் தஞ்சைக்கு வடக்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 - முனைவர் ஆ. வீரராகவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com