சுடச்சுட

  
  vm2

  பிரம்மனின் தலை கிள்ளப்பட்டதால் தேகக்குறை ஏற்பட்டு பூஜை செய்யும் தகுதியை இழந்தான். முனிவர்கள், தேவர்கள் சொன்னபடி பாலாற்றங்கரையில் மண்ணாளும் வேந்தன் ஜனகனும் மாதவனும் சேர்ந்து இருந்த இடத்தில் தரிசனம் செய்து பெருமாளை பூஜை செய்தான். பின்னர் குறைகள் நீங்கி இழந்த பிரம்மலோகப் பதவியை மீண்டும் பெற்றான்.
  சிவபெருமான் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, பாலாற்றங்கரையில் வடக்கில் இருந்து தெற்கே ஓடும் நதி தீரத்தில் எழுந்தருளி ஜனக மகாராஜாவால் ஆராதிக்கப்படும் ஆதிவரதரான வரதராஜப் பெருமாள் மற்றும் குருவரதராஜரைத் தேடிப்போனார். அன்றைய நாள் சித்திரை மாதத்திய அட்சய திருதியை தினமாகும். ஆதிகாஞ்சி எனப்பெற்ற அவ்விடத்தில் பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாரை வணங்கவும் "அக்ஷய " (குறை நீங்குக) என நல்வாக்கு தாயாரிடமிருந்து கிடைத்தது. சிவனின் தோஷம் நீங்கியது. அதற்கு பிரதியுபகாரமாக தன் மூத்த மகன் விநாயகரை "அட்சய பாத்திர விநாயகர்' என்ற பெயரோடு தாயாருக்குத் துணையாக இருத்தியதாக வரலாறு .
  தனிக்கோயில் தாயாருக்கு பெருந்தேவி தாயார் என்று பெயர். பெருந்தேவி தாயார் முப்பெரும் சக்திகளின் ஆதாரப் பீடத்தில், பத்மாசனத்தில் சுந்தர மஹாலட்சுமி என்ற பெயருக்கு ஏற்ப அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றார். பெருமாள் திருநாமம் "கமல' வரதராஜப்பெருமாள் ஆகும். கமல வரதராஜர் காஞ்சி வரதருக்கும் மூத்தவர் என்பது முன்னோர் வாக்கு.
  சுக்கிரன் தேவ சக்தியை அடைய குறுக்கீடுகள் பல வரவும் தாயாரை வேண்டி தடைகள் நீங்கி சுக்கிரன் எனும் பதம் பெற்றார். தனது பக்தனாக சரணாகதி அடைந்த அவரை வலது திருவடியிலேயே ஆறாவது விரலாக சேர்த்து கொண்டாள் தாயார். ஆறு விரல்கள் ஓர் அதிசய அமைப்பாகும். தன்னை வணங்குவோருக்கு எவ்வகை தோஷங்கள் இருந்தாலும் அவற்றை நீக்கி சுக்ர அனுக்ரகத்தை தரச் செய்கிறாள் என்பது ஐதீகம்! குபேரன் இங்கு தாயார் சந்நிதியிலேயே எழுந்தருளியுள்ளார்.
  ஜானகிபுரம்: தசரதன் தனக்கு மழலைச்செல்வம் இல்லை என்பதற்காக இந்த பெருமாளுக்கு பூஜை செய்து வேண்ட, சீதை பூமியில் இருந்து புத்திரியாக கிடைத்தாள். ஜனகருக்கு ஜானகி கிடைத்த இடம் கோயிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஜானகிபுரம் ஆகும்.
  கமலவரதராஜப்பெருமாள்: கருவறையில் மூலவர் நின்ற திருக்கோலத்தில், வலது கரத்தில் தாயார் அளித்த தாமரை மொட்டு வைத்துக் கொண்டு கமல வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அருளுகின்றார்.
  மேற்கு நோக்கிய சந்நிதி! ராஜகோபுரம் இல்லை. பலிபீடம், கொடிமரத்தை ஒட்டி, கருடாழ்வார் சந்நிதி கிழக்கு முகமாய் காணப்படுகிறது. திருச்சுற்றில் ஆண்டாள், தாயார் சந்நிதிகள் அமைந்துள்ளன. மேற்கே ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.
  கல்வெட்டில் கோயில்: 1251 -ஆம் ஆண்டில் பாண்டியன் சடையவர்மன் சுந்தர பாண்டியன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர், ராஜ நாராயண சம்புவராயன் கல்வெட்டுகள் உள்ளன. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புடன் இருந்த இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம் ஆகும்.
  பரிகாரங்கள்: தாயாரையும் பெருமாளையும் வேண்டிக் கொள்வதால் திருமணம் விரைவில் கைகூடும் என்பர். இங்கு சுக்ர கோமுகம் என்ற கோமுகம் உள்ளது. அதற்கு திருமஞ்சனம் செய்து மஞ்சள் பூசி குங்குமப் பொட்டு வைத்து ஆறு வாரங்கள், ஆறு தீபங்கள் ஏற்றி ஆறு சுக்ரவாரங்கள் வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பதும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும் நெடுங்காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும்.
  சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருஊறல் விழா, அட்சய திருதியை, ஆனித்திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி மூன்றாம் சனி, பங்குனி உத்திரம் என விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தற்போதைக்கு எல்லா புறப்பாடுகளும் உள்ளேயே நிகழ்கின்றன. இருப்பினும் அருகில் நடைபெறும் திருவூறல் திருவிழா சிறப்பானதாகும்.
  சுந்தர மகாலட்சுமி கருணையால் சுக்கிரன், குபேரன் போன்றோர் பலன் பெற்று குடிகொண்ட கோயில்; சிவபெருமானின் தோஷம் அட்சய திருதியை அன்று நீங்கிய கோயில் என்பது தனி சிறப்பாகும்.
  காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் கூட்டுச்சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் அரசர்கோவில் இருக்கிறது.
  தொடர்புக்கு : 88706 30150 / 96985 10956.
  - செங்கை பி. அமுதா

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai