Enable Javscript for better performance
பொருநை போற்றுதும்! 40 டாக்டர் சுதா சேஷய்யன்- Dinamani

சுடச்சுட

  
  sudha

  ஹரிகேசநல்லூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு அரியநாதர் என்று திருநாமம். அம்பாள் பெரியநாயகி. இந்தச் சிவபெருமானுக்கும் குபேரனுக்கும் தொடர்புள்ளது. விச்ரவா என்னும் முனிவரின் மகன்தான் வைச்ரவணன் என்றழைக்கப்படுகிற குபேரன். தர்மநியாயத்தில் ஊன்றியவனான இவனே நிதிக்குத் தலைவனாகத் திகழவேண்டும் என்றெண்ணிய பிரம்மா, இவனை நவநிதியங்களுக்கு அதிபதியாக்கி, வடக்கு திசைக்குத் தலைவனும் ஆக்கிவிட்டார். கூடவே, ஆங்காங்கே சென்று நிதிச்செலவுகள் முறையாக நடைபெறுகின்றனவா என்று மேற்பார்வையிடுவதற்காகத் தன்னிடம் இருந்த புஷ்பக விமானத்தையும் தந்துவிட்டார்.
   வானவீதியில் குபேரன் புஷ்பக விமானத்தில் இங்கும் அங்கும் பாய்வதைக் கண்டு பொறாமைப்பட்டவர்களில் தலையாயவர், அசுரகுல முதியவரான சுமாலி. அப்போதைய காலகட்டத்தில் அசுரகுலம் தளர்ந்திருந்தது. மீண்டும் அசுரகுலம் தழைக்கச் செய்ய வழி தேடிக்கொண்டிருந்த சுமாலிக்கு நிறைய மகள்கள்; அவர்களில் ஒருத்தி கைகசி. குபேரனைக் கைகசியிடம் காட்டி "இப்படியொரு பிள்ளை உனக்கிருந்தால்...' என்று கூறி, அவளை விச்ரவா முனிவரைச் சந்தித்து வாழும்படித் தூண்டினார். விச்ரவாவுக்கும் கைகசிக்கும் பிறந்த மகன்கள், ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் ஆகியோர். தாயின் உந்துதலால், குபேரனிடம் போரிட்டு, அழகாபுரியை அதகளப்படுத்திப் புஷ்பக விமானத்தைப் பறித்துவிட்டான் பத்துத்தலையன். தன்னுடைய செல்வத்தையும் ராஜ்ஜியத்தையும் இழந்திருந்த குபேரன், மனம் வருந்தித் தவித்தபோது, தந்தைக்குத் தந்தையான புலஸ்திய முனிவர், அரியநாதசுவாமியை வழிபடச் சொல்லி வழிகாட்டினாராம்.
   அரியநாதசுவாமியை வழிபட்ட குபேரன், தானும் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான். குபேரலிங்கத்தை இன்றும் இக்கோயிலில் காணலாம். குபேரனுக்குத் தனிச் சந்நிதியும் உண்டு. செல்வமும் செல்வாக்கும் பெற அரியநாதரையும் குபேரனையும் வழிபடவேண்டும் என்பது நம்பிக்கை. ஜ்யேஷ்டாதேவிக்கும் (ஸ்ரீதேவியின் அக்காள்) சனைச்வரனின் மகனான மாந்தி என்பவனுக்கும் இங்கே சந்நிதி உண்டு. மாந்தி தோஷமும் செவ்வாய் தோஷமும் தீருவதற்கு இது பரிகாரத் தலம். தவிர, தாமிரவருணிக் கரையில், தட்சிணாமூர்த்திக்கான சிறப்புத் தலங்களாகப் போற்றப்பெறும் பஞ்ச குருத் தலங்களில் ஹரிகேசநல்லூரும் ஒன்று.
   குபேரன் வழிபட்டதால், இந்த ஊருக்குக் குபேரபுரி என்றும் பெயர்.
   ஹரிகேசநல்லூர் என்னும் பெயரைப் பற்றியே பற்பல கருத்துகள் உண்டு. ஹரி, கேசவன் என்னும் விஷ்ணுத் திருநாமங்களைச் சேர்த்து ஹரிகேசவநல்லூர் என்பார்கள். கேசவன் என்னும் பெயர், தமிழ்நாட்டைக் காட்டிலும் மலையாளத்தில் வெகு பிரபலம். நெல்லைக்கும் கேரளத்திற்கும் அணுக்கம் என்பதால், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அவ்வளவாகக் காணப்படாத "கேசவன்' என்னும் பெயர், இப்பகுதிகளில் அதிகமாகப் புழங்கும். அரியநாதசுவாமித் திருக்கோயிலை, நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னர் கட்டினார் என்றும், இந்த மன்னருக்கு அரிகேசரி என்னும் பட்டம் இருந்ததால், இதுவே ஊர்ப்பெயருக்கும் காரணமானது என்பது சிலரின் கருத்து. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களும், இவ்வாறு இருக்கக்கூடும் என்கிறார்.
   நெல்லைப் பகுதியை வெற்றி கொண்டதால் "நெல்வேலி வென்ற நெடுமாறன்' என்னும் பட்டப்பெயரையும் பெற்ற நின்ற சீர் நெடுமாற மன்னர், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்; திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சமகாலத்தவராக 7- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அரிகேசரி மாறவர்மன் என்றும் அரிகேசரி பராங்குசன் என்றும் அழைக்கப்பெற்ற இந்த மன்னர், செழியன் சேந்த ஜயந்தவர்ம மன்னரின் மகன்; 670 முதல் 700 வரை ஆட்சி நடத்தியவர். சேந்தமாறன் என்றும் தேர்மாறன் என்றும்கூட பாராட்டப்பட்ட இவருடைய பெயரால் வழங்கப்படும் அரிகேசநல்லூர், தேனி மாவட்டத்தில், முல்லை ஆற்றங்கரையிலுள்ள சின்னமனூர் (செப்பேடுகளுக்குப் புகழ்பெற்ற சின்னமனூர்தான்) ஆகும். சின்னமனூர் அருள்மிகு சிவகாமி உடனுறை அருள்மிகு பூலாநந்தீச்வரர் திருக்கோயில், இவரால் கட்டுவிக்கப்பெற்றது.
   இதே மன்னருடைய பெயர்தான், தாமிரவருணித் தென்கரை ஹரிகேசநல்லூருக்கும் வழங்கப்படுகிறதா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். தவிர, இந்தப் பகுதிகளில் "பிற்காலப் பாண்டிய வம்சாவளி' மன்னர்கள் பலரும் திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்த வம்சாவளிக்குக் காரணகர்த்தர்களாக இருந்தவர்கள், சக அரசர்களாக ஆட்சி செய்த (ஒரே அரசில், ஒரே சமயத்தில், பொறுப்புகளைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டு ஒற்றுமையோடு ஆட்சி செய்பவர்களே "சக அரசர்கள்'; இப்படிப்பட்டவர்கள் பலரை, சோழ வம்சாவளியிலும் பாண்டிய வம்சாவளியிலும் நிரம்பவே சந்திக்கலாம்) ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் (ஆட்சிக்காலம்: 1251—-1268) மற்றும் ஜடாவர்மன் வீரபாண்டியன் (ஆட்சிக்காலம்: 1253-—1275) ஆகியோர் ஆவர்.
   முற்காலப் பாண்டியர்களில் ஓரிருவருக்கு இருந்தாலும், பிற்காலப் பாண்டிய வம்சாவளியில், ஜடாவர்மன் மற்றும் மாறவர்மன் என்னும் பட்டப்பெயர்கள், அடுத்தடுத்த அரசர்களுக்கு மாறி மாறி வழங்கப்பட்டுள்ளன. "ஜடாவர்மன்' என்னும் பட்டம், ஜடாமுடிநாதரான சிவபெருமானைத் தங்களுடைய உறவினராகக் கருதி (என்ன இருந்தாலும், மீனாட்சியைக் கைப்பிடித்த மதுரை மாப்பிள்ளையான சொக்கேசன் தானே அவர்!), அவருடைய வழித்தோன்றல்களாகத் தங்களைப் பணிப்படுத்திக் கொண்டதன் அடையாளமே ஆகும். "ஜடாவர்மன்' என்னும் பெயரே, "சடையவர்மன்' என்றும் "கோச்சடையான்' என்றும் வழங்கும்.
   ஜடாவர்ம மன்னர்கள் திருப்பணி செய்தபோது, ஜடாமுடிதாரியான சிவபெருமான் என்பதைக் காட்டுவதற்காக "ஹரிகேச' என்னும் திருநாமத்தைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
   எதுவாக இருந்தாலும், "ஹரிகேச' என்னும் பெயர் விளங்கி ஒளிரச் செய்தவர், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். தம்முடைய கீர்த்தனங்களில், வாக்கேயக்கார முத்திரையாக "ஹரிகேச' என்னும் பதத்தைப் பயன்படுத்தினார். சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்துள்ள "ஹிமகிரி தனயே ஹேமலதே' என்னும் கீர்த்தனை வெகு பிரபலம். இதன் சரணம் கீழ்க்காணுமாறு அமைகிறது:
   "ஆசாம்பரே ஹரிகேச விலாúஸ அனந்த ரூபே அம்ருத ப்ரதாபே' ஆசையை ஆடையாக அணிந்தவளே (காமேச்வரி என்னும் பெயரின் இன்னொரு வடிவம்), "செந்தலையரிடம் வசிப்பவளே, எல்லையற்றவளே, முடிவில்லாத கீர்த்தி கொண்டவளே' என்று லலிதாம்பிகையைப் பாடும்போது ஹரிகேசனான சிவனாரையும் துதிக்கிறார்.
   "அந்தகாசுர சூதனா, அக்னி லோசனா' என்றொரு சஹானா ராகக் கீர்த்தனம். "மூஷிக வாஹன பூஜித, ஸ்ரீ ஹர ஹர சங்கர, சிவகாமி மனோஹர, ஸ்ரீ ஹரிகேசா, சித்சபேசா, ஈசா' என்பது இதன் சரணம்.
   - தொடரும்...
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai