அச்சுதபுரம் அழைக்கிறது!

தஞ்சாவூருக்கு கிழக்கே தஞ்சையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் (திருவாரூர் வழி) தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சாலியமங்கலம். கி.பி 16 -ஆம் நூற்றாண்டில் தஞ்சையை
அச்சுதபுரம் அழைக்கிறது!

தஞ்சாவூருக்கு கிழக்கே தஞ்சையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் (திருவாரூர் வழி) தேசிய நெடுஞ்சாலையில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சாலியமங்கலம். கி.பி 16 -ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான அச்சதப்ப நாயக்கர் தன் ஆட்சிக்காலத்தில் அந்தணர்களை இங்கு குடியமர்த்தி அவர்களுக்கு மானிய நிலங்கள் அளித்து நமது பண்பாட்டினையும், கலாசாரத்தையும் காத்திட பாகவதமேள நாட்டிய நாடகங்களை நடத்திட ஊக்குவித்தார். அவரது நினைவினைப் போற்றும் வண்ணம் இவ்வூருக்கு அச்சுதபுரம் என்னும் பெயரும் ஏற்பட்டதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்நாட்டிய நாடகங்களில் பயன்படுத்தப்படும் கீர்த்தனைகளிலும் "அச்சுதபுரம்' என்ற முத்திரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
 மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வூரில் வாழ்ந்த பரம பாகவ தோத்தமர்களால் ஸ்ரீ பக்த பிரகலாதா, விப்ரநாராயணா, ருக்மாங்கதா, ருக்மணி கல்யாணம், சீதாகல்யாணம், ஹரிச்சந்திரா ஆகிய நாட்டிய நாடகங்கள் இவ்வூரில் ஸ்ரீராமநவமி, மற்றும் நரசிம்ம ஜெயந்தி உத்சவ நாள்களில் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. தற்போது ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழாக் காலத்தில் ஸ்ரீ பக்த பிரகலாதாவும், மறுநாள் ஸ்ரீ ருக்மணி பரிணயம் நாட்டிய நாடகங்கள் மட்டும் நடைபெற்று வருகின்றன. மேற்படி நாடகங்கள் கடந்த 374 ஆண்டுகளாக நிர்விக்னமாக நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. வசனங்கள், கீர்த்தனைகள், தெலுங்கு மொழியில் இருந்த போதிலும் தெரிந்த புராணம் என்பதால் மக்களால் பெரிதும் விரும்பி ரசிக்கக்கூடியதாக உள்ளது.
 இவ்வூரின் கண் அக்ரஹாரத்தை ஒட்டி ஸ்ரீலெட்சுமி நாராயணர் கோயிலும், ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோயிலும் வழிபாட்டில் உள்ளது. பெருமாள் கோயில், கருடமண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்பில் பிரதான தெய்வமாக ஸ்ரீலெட்சுமி நாராயணருக்கு சந்நிதியும், மண்டபத்தில் ஸ்ரீ தும்பிக்கை ஆழ்வார், ஸ்ரீ லெஷ்மி நரசிம்மர், பாமா ருக்மிணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர், யோக நரசிம்ம மூர்த்தியுடன் சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய தெய்வ மூர்த்தங்கள் சந்நிதிகளுடன் அழகுற அமைந்துள்ளது. உற்சவமூர்த்தியாக ஸ்ரீநிவாஸப் பெருமாள் அருள்புருகின்றார். ஆலயம் பின்புறம் திருக்குளம் அமைந்துள்ளது.
 இவ்வூருக்கு சிறப்பே அத்திமரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ நரசிம்ம முக பிம்பமேயாகும் (முகபடாம்). பிரகலாத சரித்திர நாடகத்தில் நரசிம்ம அவதாரக் காட்சியில் பயன்படுத்தப்படும் இந்த முகபடாம் (மாஸ்க்) மிகவும் சான்னித்தியம் வாய்ந்தது. நித்திய வழிபாட்டில் உள்ளது. அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து இதுவரை நம்மால் முடியாத அனைத்துக் காரியங்களையும் க்ஷண நேரத்தில் செய்து முடிக்க உதவும் ஓர்அற்புதமான நரசிம்மர் இவர் என்பது பக்தர்களின் ஏகோபித்த அபிப்ராயம். நம்பிக்கையும் கூட, இந்த முகபிம்பத்தை அணிந்து கொண்டு ஒரு தத்ரூபமான நரசிம்ம அவதாரக் காட்சியை இவ்வூரில் இன்றும் நடத்திக்காட்டுகின்றார்கள். அது பக்தியின் எல்லை என்றால் மிகையாகாது.
 ஸ்ரீலஷ்மி நரசிம்ம பாகவத மேளபக்த சமாஜத்தின் ஆதரவில் இவ்வாண்டு நிகழ்ச்சிகளாக, மே 15, 16 தேதிகளில் அபிநயத்துடன் ஸ்ரீ சீதா கல்யாண வைபவமும், மகோத்சவமும், மே 17 -ஆம் தேதி, ப்ராண ப்ரதிஷ்டை ஆராதனை, கருடசேவை வைபவமும் இரவு ஸ்ரீ பக்த பிரகலாதா நாட்டிய நாடகமும், மே 18 அதிகாலை ஸ்ரீநரசிம்ம அவதாரக் காட்சியும் நடைபெறுகின்றது. மே 18-ஸ்ரீ ருக்மணி பரிணயம் நாடகமும், மே 19 -ஆஞ்சயே உத்சவத்துடன் விழா முடிவு பெறுகிறது.
 பள்ளி, கல்லூரி விடுமுறை நாளில் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் அவசியம் இந்நாடகங்களைபார்க்க வைக்க வேண்டும். இந்த தெய்வீக கலை தொடர்ந்து நடைபெற ஆதரவு அளிக்க வேண்டும்.
 தொடர்புக்கு: 94436 74366 / 95859 92304.
 - எஸ். வெங்கட்ராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com