கடவுள் கொடுத்த பத்து கட்டளைகள்

பொதுவாக, பாலைவனம் என்றால் மணல் பாங்கான மரம், செடி, கொடிகள் இல்லாத வெப்பமான பகுதி என்பது நம் மனக்கண்ணுக்கு வரும்.
கடவுள் கொடுத்த பத்து கட்டளைகள்

புண்ணிய பூமியில் புனிதப் பயணம்! 7
 பொதுவாக, பாலைவனம் என்றால் மணல் பாங்கான மரம், செடி, கொடிகள் இல்லாத வெப்பமான பகுதி என்பது நம் மனக்கண்ணுக்கு வரும். எகிப்தின் வடபகுதியில் தொடங்கும் சகாரா பாலைவனம் நாம் யூகிக்கும் பாலைவனம் போல தான் இருக்கும். ஆனால், எகிப்தின் தென் பகுதியில் இருக்கும் சினாய் பாலைவனம் அப்படி அல்ல. உதகை, கொடைக்கானல் போன்ற மலைகளில் புல், பூண்டு இல்லாமல் இருந்தால் எப்படி காட்சி அளிக்கும் என நமது மனக்கண்ணால் யூகித்தால் அதுபோல தான் சினாய் பாலைவனம் காட்சி அளிக்கும்.
 360 கோணத்தில் எங்கு பார்த்தாலும் மலைகள் நிறைந்தும், கண்ணுக்கு எட்டியவரை புல் பூண்டுகூட இல்லாத பகுதியாக தான் சினாய் பாலைவனம் இருக்கும். எகிப்தில் இருந்து புறப்பட்டு செங்கடலை கடந்த எபிரேயர்கள், சினாய் பாலைவனம் வழியாகத் தான் பயணம் செய்ததாக விவிலியத்தில் யாத்திராகமம் அதிகாரம் குறிப்பிடப்பிடுகிறது.
 சினாய் பாலைவனத்தில் எபிரேயர்கள் இருந்தபோது, கர்த்தர் சினாய் மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார் (யாத்திராகமம் 19: 18, 24-வது வசனங்கள்).
 கர்த்தருடன் மோசே உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்டார். அது தான் யூதர்கள், கிறிஸ்தவர்களின் 10 கட்டளைகள் என குறிப்பிடப்படுகிறது. யாத்திராகமம் 20-ஆம் அதிகாரத்தின்படி, 10 கட்டளைகளாவன:
 1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
 2. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
 3. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
 4. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
 5. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
 6. கொலை செய்யாதிருப்பாயாக.
 7. விபசாரம் செய்யாதிருப்பாயாக.
 8. களவு செய்யாதிருப்பாயாக.
 9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
 10. பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
 - ஜெபலின் ஜான்
 (தொடரும்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com