தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை!

நம் கலாச்சாரத்தில் எவ்வளவு பற்றற்ற ஞானியாகத் திகழ்ந்தாலும் பெற்ற தாய் என்றால் அந்தஸ்து அதிகம். பட்டினத்தார் தாயார் இறந்த போது ஓடோடி வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
தாயார் இல்லத்தில் தனயன் பாதுகை!

நம் கலாச்சாரத்தில் எவ்வளவு பற்றற்ற ஞானியாகத் திகழ்ந்தாலும் பெற்ற தாய் என்றால் அந்தஸ்து அதிகம். பட்டினத்தார் தாயார் இறந்த போது ஓடோடி வந்து இறுதி மரியாதை செலுத்தினார். ஆதி சங்கரர் ஊரே எதிர்த்து நின்ற போதும் அவள் தகனத்தை நடத்தி வைத்தார். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரிடம் தஞ்சம் புகுந்த பகவான் ரமணரும் அன்னையை கடைசிக் காலத்தில் காப்பாற்றி முக்தியும் பெற்றுத் தந்தார். இந்த வரிசையில் காஞ்சி முனியும் அன்னையின் கருணையை எப்போதும் மறவாமல் இருந்தார்.
 அவர் தாயாரின் சொந்த கிராமம் காவிரி வடகரையில் திருவையாற்றுக்கு அருகில் உள்ள ஈச்சங்குடி என்னும் இடம். ஸ்ரீ கச்சபுரீஸ்வரர் ஆலயம் புராதனமாக அங்கே அருள் வழங்கி வருகிறார். தன் தாயார் வசித்த இல்லத்தில் தடையின்றி வேத கோஷம் முழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார். தன் பூத உடலை விடுப்பதற்கு ஒரு வருடம் முன்பாக பெரியவர் தன் ஆசையை பெங்களூரு அன்பர் ஹரி என்பவரிடம் சொல்லியிருக்கிறார்.
 உலகை உய்விக்க வந்த மணிவிளக்கைச் சுமந்த வயிற்றுக்குச் சொந்தக்காரி வசித்த இல்லம் ஆயிற்றே, சாதாரணமான விஷயமா இது? மெய்யன்பர்கள் முயற்சியால் வேதபாடசாலை துவக்கப்பட்டு குரு பூஜை நடக்க இருக்கும் செய்தி அறிவிக்க அந்த பெங்களூரு அன்பர் பெரியவரின் சந்நிதிக்கு மறுபடியும் சென்ற நாள் 8-1-1994.
 மகாசமாதிக்குச் சில மணி நேரங்கள் முன்னர் அந்த மகிழ்ச்சியான செய்தி கேட்டு பூரிப்புடன் ஒரு ஜோடி பாதுகைகளை அணிந்து ஆசிர்வதித்து அதைப் பாடசாலையில் வைக்கச் சொன்னார் மகாஸ்வாமிகள். பாடசாலை இன்றளவும் ஈச்சங்குடியில் இயங்கி வருகிறது. அந்த கிராமம் செல்பவர்களுக்கு சந்திரமெளலீஸ்வரர் அருள், மஹாலட்சுமி அம்மாள் ஆசீர்வாதம், பெரியவர் கருணை அனைத்தும் ஒரு சேரக் கிடைக்கிறது.
 தொடர்புக்கு: 94443 92452.
 - ஸ்ரீதர் சாமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com