Enable Javscript for better performance
அறிவும் - செல்வமும் தரும் ஆலயம்!- Dinamani

சுடச்சுட

  
  vm4

  பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் அவர்களின் பணிநிலை முடிவுக்கு வர, உலகம் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அரி அயன் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால்{ஏற்றுக் கொண்டமையால்- இத்தலம் "காயாரோகணம்' எனப் பெயர் பெற்றது.
   இத்திருத்தலம் மற்றும் மகாலட்சுமியும் நவக்கிரக குருவும் வழிபட்ட சிறப்பு கொண்டது. காயாரோகணம் என வழங்கப்படும் காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் முதன்மையான ஒன்றாகும். காஞ்சியில் சிவத்தலங்கள் பல இருந்தாலும் திருவேகம்பம் எனப்படும் ஏகாம்பரநாதர் கோயில் , கச்சபேசம் என்கிற கச்சபேஸ்வரர் கோயில் காயாரோகணம் என்னும் காயாரோகணேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் மிகப்பெருஞ்சிறப்புடையவையாகும்.
   இந்த மூன்று தலங்களும் உமை, சரசுவதி, இலக்குமி என்னும் மூன்று சக்திகளால் வழிபடப்பட்டனவாகும். காஞ்சி காயாரோகணம் காஞ்சிக்கு உயிர்த்தலம் என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் சிவபெருமான், திருமால், பிரம்மா இருவரையும் ஒடுக்கி அவர்களின் சரீரத்தை தன் தோள் மேல் தாங்கி திரு நடனம் புரிந்தார்.
   மகாலட்சுமி தன் கணவனான திருமாலைப் பிரிந்து இத்தலத்துக்கு அருகில் ஐங்கோணக் குளம் ஒன்று எடுத்து அதில் நீராடி இத்தலத்து இறைவனை வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்டதால் மீண்டும் திருமாலைச் சேர்ந்தாள். பிரகஸ்பதி தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.
   இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் இக்கோயிலில் காயாரோகணேசுவரர் அருள் வேண்டி இங்கேயே தவம் செய்தார். அவரது தவத்தை மெச்சிய காயாரோகணேசுவரர் நேரில் காட்சி தந்தருளினார்.
   என் பணியோடு இங்கிருந்து நின்னை தினம் தொழுது கொண்டிருக்கவும் அருள வேண்டினார். இறைவனோ "என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்' என திருவாய் மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி லிங்கத்தே மறைந்தருளினார். காயாரோகணேசுவரரை வணங்கி தவம் செய்ததால் ஊழிக்காலம் வரை நவக்கிரக அந்தஸ்தை இறைவன் அருளினார். அதனால் பிரகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.
   மகாலட்சுமி மற்றும் குருவை வணங்கி உரிய வழிபாட்டுமுறைகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கும் என்பது தல வரலாறு மூலம் விளங்குகிறது. யமன் இங்கு வந்து இறைவனைப் பூசித்தான். அவனை " தென் திசைக்குத் தலைவனாக்கி, "இங்கு வந்து எம்மை வணங்குவோருக்கு அல்லல் செய்தால் அன்று இப்பதவி உன்னை நீங்கும்' என்றருளினார். யமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர் என நிறுவினான்.
   காஞ்சிபுரம், வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம், அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.
   அதனால் வியாழக்கிழமைகளில் இங்குள்ள தாயார்குளத்தில் நீராடி எம்பெருமானை வழிபடுவோர் லட்சுமியின் அருளைப் பெறுவார்கள் என்பது இத்தலத்து சிறப்புகளில் ஒன்றாகும். மேலும் வியாழ (குரு) பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப்பெற்ற இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.
   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் தாயார் குளம் அருகில் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி செல்லும் பிரதான சாலையில் 2 -ஆவது கி.மீ. தொலைவில் மேட்டுத்தெரு பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஆட்டோ வசதிகள் உள்ளன.
   தொடர்புக்கு: 90439 24629/ 96776 53044.
   - ஆ. குமரன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai