சுடச்சுட

  
  sudha

  பொதிகை மலைப் பகுதியைத் தம்முடைய வசிப்பிடமாகக் கொண்ட அகத்தியர், தாமிரவருணிக் கரையில், ஆங்காங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தாமிரா வடக்கு நோக்கி வளைகிற இடத்தில், வடகரையிலும் ஆற்று மணலில் சிவலிங்கம் பிடித்து வழிபட முனைந்தார். சிவலிங்கம் உருவாகவேயில்லை. ஆதங்கத்தோடு சுவாமியை வினவினாராம்: உனக்கென்ன கோட்டியா? இதன் பின்னர், அகத்தியரின் அன்புக்குக் கட்டுப்பட்டுச் சிவனாரும் லிங்க ரூபமாகக் காட்சி கொடுத்தாராம்.
   இதனால்தான், இந்த ஊர் சுவாமிக்குக் கோட்டியப்பர் என்று திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது செவிவழிக் கதை. "வளைவு' என்னும் பொருளைக் கொண்டு, மனம் முறுக்கிக் கொண்டவர்களையும் கோணிக் கொண்டவர்களையும் "கோட்டி' என்றழைப்பது வழக்கம். என்ன இருந்தாலும் சிவனார் பித்தன்தானே! பக்தியின் உரிமையில், அகத்தியர் இப்படிக் கூப்பிட்டிருப்பார் போலும்! மாறவர்மன் சுந்தர பாண்டிய மன்னனும், ஊர்க்காடு சேதுராயர்களும் இந்தக் கோயிலுக்குப் பற்பல திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
   இன்றைய அளவில், "ஊர்க்காடு' என்னும் ஊர், சின்னஞ்சிறு கிராமமாக இருந்தாலும், ஆங்காங்கே தென்படும் மதில் சிதைவுகளும், கோட்டை போன்ற கட்டுமானங்களும் இவ்வூரின் பண்டைய பெருமையைச் செப்புகின்றன.
   ஊர் போற்றும் ஊர்க்காடு
   ஊர்க்காடு ஜமீன் தலைமையாக இருந்திருக்கிறது. சிங்கம்பட்டியார்கள் தீர்த்தபதி என்று போற்றப்பட்டதுபோல, ஊர்க்காட்டார்கள் "úக்ஷத்திரபதி' என்று போற்றப்பட்டுள்ளனர். காரணம், இந்த ஜமீன் வம்சம், திருப்பணி செய்தும் திருவிழா நடத்தியும் கட்டிக் காத்துள்ள திருக்கோயில்கள்.
   இந்த ஊரில் ஐந்து அரண்மனைகள் இருந்தனவாம்! பட்டத்து அரண்மனை, தர்பார் அரண்மனை, கோயில் அரண்மனை, பூஜை அரண்மனை என்று நான்கு அரண்மனைகளின் பெயர்கள் தெரிகின்றன. ஐந்தாவது அரண்மனையின் பெயர் தெரியவில்லை.
   பட்டத்து அரன்மனை என்பது ஜமீன் குடும்பம் வசித்த இடமாகவும், தர்பார் அரண்மனை என்பது குடிபடைகளை ஜமீன்தார் சந்தித்த இடமாகவும் இருந்திருக்கவேண்டும். கோயில் அரண்மனையின் பகுதிகள் இப்போதும் உள்ளன. திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள இந்த அரண்மனையில் நாட்டிய மண்டபம், ஓவிய மண்டபம் போன்ற கலைக்கூடங்கள் இருந்துள்ளன. நாட்டிய மண்டபத்தின் மரப் படிக்கட்டுகளில் நாட்டிய மங்கையர் ஏறிப் போகும்போதே சலங்கைகளின் ஒலி, இசை எழுப்புமாம். இந்த அரண்மனை திருக்கோயிலுக்கு எதிரில் இருந்ததால், இதன் உப்பரிகையில்தான், ஜமீன் அரச மகளிர் அமர்ந்து கோயில் திருவிழாக்களைப் பார்வையிடுவார்களாம்.
   சேதிராயர்கள் என்று வழங்கப்பட்ட ஊர்க்காட்டு ஜமீன்தார்கள், ஆன்மீகப் பணியிலும் சமூகப் பணியிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டவர்கள். "சேதிராயர்' என்னும் பெயர், இவர்களுக்கு வழங்கப்பட்டதற்கான சரியான காரணத்தைக் காணமுடியவில்லை. "சேதி' என்பது ஒரு நாட்டின் பெயர். இப்போதைய மத்தியபிரதேச மாநிலப் பகுதிகளில் விளங்கிய சேதி நாட்டின் புகழ்மிக்க மன்னர், உபரிசரவஸு என்பவர் ஆவார். தமிழ்நாட்டிலும் ஒரு சேதி நாடு இருந்தது. சேர, சோழ, தொண்டை ராஜ்ஜியங்களுக்கு இடைப்பட்ட பகுதியாக இருந்ததால் "நடு நாடு' என்றழைக்கப்பட்டது இச்சேதி நாடு. கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி, சேதிராய இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஆட்சி நடத்திய நாடு, "மலையமான் நாடு', "மலாடு', "சேதிநாடு' என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
   சோழர்களின் கிளைக் குலத்தினருக்கும் முக்குலத்தோரின் சில பிரிவினருக்கும் சேதியர்கள் என்னும் பட்டம் உண்டு. இந்த வகை வம்சங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்களாக ஊர்க்காட்டு சேதிராய மன்னர்களும் இருந்திருக்கக்கூடும். சேதுராயர்கள் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். இதற்கேற்ப, ராமநாதபுர சேதுபதி மன்னர் குடும்பத்தோடு இவர்களுக்குத் திருமணச் சம்பந்தம் இருந்துள்ளது. இவ்வகையிலும், இவர்கள் சேதுராயர்கள் என்றழைக்கப்பட்டிருக்கலாம்.
   சிவனணைந்த பெருமான் சேதுராயர், கோட்டிலிங்க சேதுராயர், பால்துரை சேதுராயர் போன்றோர் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்துள்ளனர். இந்த ஜமீன் பரம்பரையில், கடைசி மன்னராக அரசாண்டவர் மீனாக்ஷி சுந்தர விநாயக விசாகப் பெருமாள் என்றும் வழங்கப்பெற்ற கோட்டிலிங்க சேதுராயர் ஆவார். இவருடைய மகளும் எல்.கே.ராணி என்று அழைக்கப்பட்டவருமான லிங்க காந்திமதி சுப்புலக்ஷ்மி நாச்சியார், சென்னை மாநகரில் வாழ்ந்தார். வடபழனி முருகன் மீது மிகுந்த பக்தி பூண்டு, முருகனையே தன்னுடைய வாரிசாக எண்ணி, சொத்துகளைக் கோயிலுக்குக் கொடுத்தார்.
   ஊர்க்காடு அருள்மிகு சிவகாமியம்மை உடனாய அருள்மிகு கோட்டியப்பர் திருக்கோயிலில், கைகள் உடைக்கப்பட்ட நிலையில், சிலை வடிவமாகச் சேதுராயர் ஒருவர் காட்சி தருகிறார். கோட்டியப்பரை வணங்குகிறார் என்றாலும் கூப்பிய இவரின் கரங்கள் ஏன் உடைக்கப்பட்டுள்ளன? இவர் யார்?
   இவர்தாம், நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர். ஊர்க்காட்டு ஜமீன் பரம்பரையில் மூத்த மகனுக்குக் கோட்டியப்பர் என்று பெயர் சூட்டுவதற்கும், ஊர்க்காரர்கள் பலரும் தத்தம் குடும்பங்களிலும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கும் இவரே காரணகர்த்தா.
   இதென்ன கதை? வாருங்கள், காண்போம்.
   - தொடரும்...
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai