Enable Javscript for better performance
பஞ்சமில்லா பெருவாழ்வு அருளும் அன்னாபிஷேகம் !- Dinamani

சுடச்சுட

  
  vm7

  சிவனாரின் அபிமான தொண்டனும், கோள்களில் ஒருவனும் ஆன சந்திரன் மீது முக்கண்ணன் அதிக பற்று கொண்டவர். இதன் வெளிப்பாடாக இமயோன் தன் தலையில் சந்திரனை தூக்கி வைத்துக் கொண்டார். இதனால் சிவனாருக்கு சந்திரசேகரன், பிறைசூடன் என்ற பெயரும் உண்டு.
   தட்ச பிரஜாபதியின் மனைவி பிரசூதிக்கு பிறந்த ஐம்பது குழந்தைகளில் இருபத்தியேழு பேர் அஸ்வதி முதல் ரேவதி வரையிலுள்ள நட்சத்திரங்கள் ஆவர். சோமன் என்ற பெயர் கொண்ட, ஒன்பது கோள்களில் அழகனான சந்திரனுக்கு இவர்களை திருமணம் செய்து கொடுத்து அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சந்திரனோ இவர்களில் ரோஹினியின் மீது மட்டும் அதிகம் மையல் கொண்டு மற்ற 26 நங்கையர்களையும் உதாசீனப்படுத்தினான். இதனால் வெகுண்ட அனைவரும் தங்கள் நிலையை தன் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். பெரும் வல்லமையுடையவனும், தபஸ்வியுமான தட்சன், இதற்கான காரணத்தை சந்திரனிடம் கேட்டான். ஆனால் சந்திரனோ காரணம் சொல்லத் தெரியாமல் திகைத்து நிற்க "உன் கலைகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் தேயட்டும்" என தட்சன் சபித்தான்.
   சந்திரனோ, இந்திரனில் ஆரம்பித்து அனைவரிடமும் தனக்கேற்பட்ட இந்த சாபத்தினை போக்க வேண்டி மன்றாடினான். ஆனால் தட்சனின் கோபத்திற்கு அஞ்சிய அனைவரும் சந்திரனிடம் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தினர். இதற்கே இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. மூன்றாம் நாள் கைலாயநாதன் சிவனாரிடம் அபயம் வேண்டினான். அவர் சந்திரனின் நிலையை உணர்ந்து தன் தலைமீது எடுத்து வைத்து அடைக்கலம் தந்தார். அன்று முதல் சிவனாரின் அருளைப்பெற வானத்தில் மூன்றாம் பிறையை பார்ப்பது வழக்கமாயிற்று. பின் சிவனார் சந்திரனிடம் "உன் தவறை உணர்வதற்காக உன் கலைகள் ஒவ்வொன்றாய் தேய்ந்து பின் வளர அருள்கின்றோம்; என்றாலும் ஐப்பசி பெளர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் மிளிர்வாய்' என அருளாசி வழங்கினார்.
   சூரியன் துலா ராசியில் பிரவேசிக்கும் நாளே ஐப்பசி மாதம் ஆகும். அதுபோன்று சந்திரன் முழுநிலவாக தெரியும் நன்னாளில் அதன் வலதுபுறம் அஸ்வினி நட்சத்திரம் தோன்றி நிற்கும். இதனை ஐப்பசி, அஸ்விஜா, அஸ்வயுஜா என்றும் துலா மாதம் (துலாம் என்பது தராசைப்போல் சமனானது) என்றும் கூறுகிறார்கள்.
   சந்திரபகவானை நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியின் மீது ஆதிக்கம் கொண்டவராக ஜோதிடத்தில் கூறுகிறார்கள். நம் உணவின் முக்கிய தானியமான அரிசியிலிருந்து சாதம் கிடைப்பதால் அதனை நமக்களித்த, சந்திரனை பிறையாகக் கொண்ட சிவனாருக்கு, அபிஷேகம் செய்து வழிபடுவதை விவசாயிகள் நன்றிக் கடனாக செய்து வந்தார்கள். ஐப்பசி மாத பெளர்ணமியன்று சிவபிரான் மனமகிழ்வோடு இருப்பதாகவும்; அன்னம் அல்லது சோறு என்பது சிவனின் அம்சமாக பார்க்கப்படுவதால் அன்று அன்னாபிஷேகம் செய்வதாலும் அதனை தரிசிப்பதாலும் பெரும் பேறு பெற்றவர்களாக ஆவார்கள் என சிவபுராணம் சொல்கிறது.
   "அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று அனைத்து சிவன் கோயில்களிலும் செய்வது வழக்கமான ஒன்று. முதலில் எப்போதும் செய்யும் வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்துவிட்டு புதிதாக அறுவடை செய்த நெல்மணிகளை உரலிலிட்டு குத்தி அரிசியாக்கி வரும் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் மூடி பலவகையான காய்கறிகளால் அலங்கரித்து, பூஜித்து பின்னர் அனைவருக்கும் அந்த அன்னத்தை பிரசாதமாக வழங்குவார்கள். மேலும் மிகுதி அன்னத்தை நீர் நிலைகளில் சேர்பித்து மீன் போன்ற ஜீவராசிகளுக்கும் அளித்துவிடுவார்கள்.
   இந்த வைபவத்தில் கலந்து கொண்டு அந்த பிரசாதத்தை பெரும் தம்பதியர் இணைபிரியாமல் வாழ்வாங்கு வாழ்வார்கள்" என தெய்வத்தின் குரலில் மஹாசுவாமிகள் கூறுகிறார். அதனால் அன்று மாலை ஒவ்வொரு சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அந்த அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையிலும் சிவனார் குடிபுகுந்துள்ளதால் இதனை தரிசிக்கும் பக்தர்கள் கோடிலிங்க தரிசன பலனை அடைகிறார்கள்.
   அனைத்து சிவாலயங்களிலும் இந்த அன்னாபிஷேகம் நடைபெற்றாலும்; கங்கைகொண்டான் என்ற பெயர் பெற்ற ராஜேந்திர சோழனின் பெருமுயற்சியில் கட்டப்பட்ட, தஞ்சை பெரிய கோயிலுக்கு இணையான கங்கைகொண்ட சோழபுரம் சிவனாருக்கு, அந்தநாளில் மஹாசுவாமிகளின் அருளாணைக்கு இணங்க நூறு மூட்டை அரிசியில் அன்னம் வடிக்கப்பட்டு வெகுவிமரிசையாக ஒவ்வொரு வருடமும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அச்சமயம் அதன் சுற்றுவட்டாரத்து கிராம மக்கள் அனைவரும் பேதமின்றி கலந்து கொண்டு வழிபட்டு இறையனாரின் பிரசாத்தை பெற்று உண்டு மகிழ்கிறார்கள். இதுபோன்று தஞ்சை பெருவுடையார் கோயிலிலும் அந்த நாளில் அன்னாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
   விஞ்ஞான ரீதியாகவும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வருவதால் அப்போது சந்திரன் மிகவும் ஒளியுள்ளதாக தெரியும் என்கின்றனர். ஐப்பசிக்குபின் வரும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் பகல் பொழுது கம்மியாகவும், இரவு அதிகமாகவும் இருக்கும். வரும் நவம்பர் 12 - ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அண்ணலுக்கு அன்னாபிஷேகம் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறுகிறது. வடலூர் வள்ளலார் சொன்னதைப்போல் "பஞ்சமில்லா பெருவாழ்வு' வாழ இறைவனை வணங்கி மகிழ்வோம்.
   - எஸ். எஸ். சீதாராமன்
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai