Enable Javscript for better performance
பொருநை போற்றுதும்! 66- Dinamani

சுடச்சுட

  
  sudha

  மாதங்கள் பல உருண்டோடின. 
  ஓரிரவு... ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார் திம்மராஜா. கனவு வந்தது. கனவில்... மாடுகன்றுகளை மேய்த்துக் கொண்டு ஒரு சிறுவன்! கன்னங்குழியச் சிரித்தான்... மயில்பீலியை எடுத்துக் கேசத்தில் சூட்டிக் கொண்டான்... மாட்டுக் குச்சியையே உதட்டில் வைத்து ஊதினான்... வேய்ங்குழல் நாதம் ஒலிக்க... திம்மராஜா திடுக்கிட்டார். இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே... இவன்... இவன்... மெல்லப் புரிந்தது. அன்றைக்கு அருகில் வந்து வருங்காலம் கூறியவனும், இன்றைக்கு அகத்தில் வந்து அருள்காலம் காட்டியவனும் அந்த மாயக் கண்ணன்தான் என்பது! 
  எந்த இடத்தில், எந்த மேய்ச்சல் காட்டில் சிறுவனாகப் படுத்துக் கிடந்தோமோ அந்த இடத்தைத் தேடி வந்தார் திம்மராஜா. அப்பாஜிக்கு ஆயர் சிறுவன் அதிசயக் காட்சி காட்டிய இடம் அதுதானே! அந்த இடத்திலேயே, தன் உள்ளம் திருடிய வெண்ணெய்த் திருடனுக்குத் திருக்கோயில் எழுப்பினார். திம்மராஜா அப்பாஜி எழுப்பிய திருக்கோயில்தான், அருள்மிகு நவநீதகிருஷ்ணன் திருக்கோயில். 
  அற்புதமான பிரார்த்தனைத் தலம் இது. பிள்ளைப் பேறு வேண்டுபவர்கள், பெளர்ணமிதோறும் வந்து வழிபட்டால், ஆசை நிறைவேறுவது நிச்சயம். நேரில் வரமுடியாதவர்கள், மானசீகமாகப் பிரார்த்தித்து, நவநீதகிருஷ்ணனை உள்ளத்தில் கொலு வைத்து, ரோஹிணி நட்சத்திர நாள்களில் விரதமிருந்தால், மாயக்கிருஷ்ணனின் அருள் கிட்டுமாம். 
  செவல் பகுதியில், அவ்வப்போது விதவிதமான பறவைகள் காணப்படுகின்றன. சிறுகொக்கு, சாம்பல் நாரை, செந்நாரை, குருட்டுக் கொக்கு, உண்ணிக்கொக்கு, நீர்க்காகம், முக்குளிப்பான், அன்றில், அரிவாள் மூக்கன், செம்பருந்து, கள்ளப்பருந்து, இலைக்கோழிகள், ஆள்காட்டிகள், புள்ளிப்புறா, சாம்பல் தகைவிலான், தேன்சிட்டு, கரிச்சான் போன்ற தமிழ்நாட்டுப் பறவைகள் பலவற்றையும், செவல் மட்டுமல்லாமல், பொருநைக் கரைப் பகுதிகள் அனைத்திலுமே பொதுவாகக் காணலாம். 
  சித்தம் நிறைத்த சித்தர்வனம்
  பொருநையின் தென் கரையில், தேசமாணிக்கம், மேலச் செவல், கீழச் செவல் ஆகிய பகுதிகள்; வட கரையில், சுத்தமல்லி. 
  செவல் பகுதிகளுக்கும் சுத்தமல்லிக்கும் இடையில், ஆற்றின் கரைகளை ஒட்டி அடர்ந்த காடுகள் இருந்துள்ளன. இந்தக் காடுகளுக்குச் சித்தர்வனம் என்ற பெயரும் இருந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில், ஆறு இரண்டாகப் பிரிந்து, இரண்டு பிரிவுகளுக்கும் இடையில், நிலத் தீவு ஒன்றும் இருந்திருக்கவேண்டும் (கீழ்வரும் தலமகிமைக் கதைகளிலிருந்தும், இப்பகுதி நில ஆய்வுகளிலிருந்தும் இதை ஊகிக்கலாம்). சித்தர்கள் பலர், இக்காடுகளில் தவம் செய்தனராம். தீவில் இருந்த காடுகளில் பிரம்மாவும் சரஸ்வதியும் பரசுராமரும் வழிபட்டதாகத் தெரிகிறது. 
  இந்தப் பகுதியில், சிறியதாக, எந்த ஆடம்பரமும் இல்லாமல், வழக்கமான கிராமத்துச் சிறு கோயில் போல் தோற்றம் தரும் வகையில் உள்ள கோயில்கள் சில, நம் கருத்தைக் கவர்கின்றன. காரணம்: மூன்று கோயில்களிலும் சுவாமிக்கு இருக்கும் ஒரே திருநாமம்! அதெப்படி ஒரே பெயரில் மூன்று சுவாமிகள்...? 
  தெய்வத் திருமேனிகள் அத்தனையும் ஒற்றைப் பரம்பொருளின் வெளிப்பாடுகள்தாம் என்கிற சனாதன தர்மக் கோட்பாட்டுக்கு அப்பாற்பட்டு, அந்தந்தக் கோயிலின் தெய்வத் திருமேனியை அந்தந்தப் பெயரால் வணங்குவது யதார்த்தம். இருந்தாலும், சராசரி யதார்த்தத்தைத் தொட்டுக்கொண்டு, சர்வ வியாபகப் பரத்துவத்தை வெளிப்படுத்த அந்த சர்வேச்வரன் முடிவெடுத்துவிட்டால்...? ஆண்டவனின் அரும்பெரும் திருவிளையாட்டுக்கான கதை ஒன்றுதான் இப்பகுதியில் நிலவுகிறது; வாருங்கள், அதையும் காண்போம். 
  ஆறு இரண்டாகப் பிரிந்து, நடுத்தீவில் காடு இருந்ததல்லவா? இந்தக் காடுதான், பரசுராமர் தவமியற்றிய சித்தர்வனம். ஒருமுறை, முனிவர்கள் சிலரிடமிருந்து, சரஸ்வதி தேவி சாபம் பெற்றாள். சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்து சிவபூஜை செய்ய விழைந்தாள். சிவபூஜைக்குத் தக்க இடம் தாமிரவருணிக்கரையே என்று பிரம்மா தேர்ந்தெடுத்துக் கொடுக்க, சரஸ்வதியும் சித்தர்வனம் அடைந்தாள். பிரம்மாவின் கட்டளைப்படியே, அவளுடைய சிவபூஜைக்காகச் சிவலிங்கம் ஒன்றை விச்வகர்மாவும் வடிவமைத்தார். 
  விச்வகர்மா அமைத்த சிவலிங்கம், சித்தர்வனத்தின் பாறையொன்றில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. "சித்தீச்வரர்' என்றே பெயர் பெற்றது. சரஸ்வதியும் களிப்போடு பூஜை செய்து விமோசனம் பெற்றாள். சில காலத்திற்குப் பின்னர், பொதிகை மலைச் சாரலில் சஞ்சாரம் செய்து, பொருநைக் கரையில் சிவபூஜை செய்துவந்த அகத்தியர், இப்பகுதிக்கு வந்தார். கைலைச் சிவனாரை எண்ணியபடியே, "கைலைநாதனே காட்சி தரமாட்டாயா?' என்று ஆதங்கப்பட்டபடியே ஆற்றங்கரையில் அலைந்தார். தீவுத்திட்டில் திரிந்தார். 
  (தொடரும்...)


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai