மாநபிகளின் மன்னிக்கும் மாண்பு
By DIN | Published On : 08th November 2019 03:40 PM | Last Updated : 08th November 2019 03:40 PM | அ+அ அ- |

தண்டிக்கும் ஆற்றலும் ஆதிகாரமும் இழைத்தவனைத் தண்டிக்காது அமைதியாக கண்டித்து அறிவுறுத்தி மன்னிப்பது மகத்தான மாண்பின் வெளிப்பாடு. அந்த மாண்பை மாநபி (ஸல்) அவர்களின் வாழ்வில் முழுமையாக காணலாம்.
யூத பெண் ஒருத்தி சமைத்த ஆட்டு இறைச்சியில் நஞ்சைக் கலந்து நந்நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கினாள். நஞ்சு இருப்பதைக் கண்டுபிடித்த காருண்ய நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் பொறுமையாக விசாரித்தார்கள். அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். சுற்றி நின்ற தோழர்கள் சுழற்றி வீசி அவளின் தலையை கொய்ய வாளை உருவினர். வான்மறையை மொழிந்த வள்ளல் நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை மன்னித்தார்கள்.
ஒரு தொழும் பள்ளியின் உள்ளே அவசரமாக நுழைந்த கிராமவாசி ஒருவர் ஓரமாக சென்று சிறுநீர் கழித்தார். துடித்த தோழர்கள் அவரைப் பிடித்திழுக்க ஓடினர். கிராமவாசி சிறுநீர் கழித்து முடியும்வரை தடை செய்யாது இருக்க இனிய நபி (ஸல் ) அவர்கள் இயம்பினார்கள். கிராமவாசியிடம் தொழும் பள்ளியின் புனிதத்தைப் புரியும்படி விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தோழர்களைச் சமாதானப்படுத்தினார்கள். தோழர்கள் பொறுமையாக சுத்தம் செய்தனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அபுல் அஹ்வாஸ் ஜஷ்மி (ரலி) சில பணிக்காக சந்திக்க சென்றவர் ஜஸ்மி (ரலி) அவர்களைச் சரியாக உபசரிக்கவில்லை. முகம் மலர்ந்து உரையாடவில்லை. அவர் இவரைச் சந்திக்க வரும் பொழுது அவ்வாறே இவரும் நடந்து கொள்ளலாமா? என்று கேட்டார். அவர் இவரிடம் வரும்பொழுது பழையதை மன்னித்து பண்போடு அவரை உபசரித்து உரையாட பணித்தார்கள் பாசநபி (ஸல்) அவர்கள். நூல்- மிஸ்காத்.
அல்லாஹ் அடியார்களின் மன்னிப்பை ஏற்கின்றான். அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிகிறான் என்று எடுத்துரைக்கிறது எழில்மறை குர்ஆனின் 42-24, 25 ஆவது வசனங்கள். இவ்வசனத்திற்கு விழுமிய நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம், இறக்கும் வரை மனிதன் கேட்கும் மன்னிப்பை அல்லாஹ் ஏற்கிறான். மாநபி (ஸல்)அவர்களின் மன்னிக்கும் மாண்பை, ""நபியே! நிச்சயமாக நீர் மகத்தான நற்குணங்களில் இருக்கிறீர்'' என்று 68- 4 ஆவது வசனத்தில் புகழ்கிறான்.
மக்காவிற்கு தென்கிழக்கே எழுபது மைல் தொலைவில் தாயிப் என்ற ஊரில் வாழ்ந்த பனூதகீப் இனத்தினரும் சிலை வணக்க வழிபாட்டில் மூழ்கி இருந்தனர். நபித்துவம் பெற்ற பதினொன்றாம் ஆண்டு ஜமாத்துல் ஆகிர் மாதத்தில் நடந்தே நந்நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் ஜைது (ரலி) அவர்களுடன் தாயிபுக்குச் சென்றார்கள் தாஹா நபி (ஸல்) அவர்கள்.
தாயிப்பில் பனூதகீப் இன ஸாக்கிப் பிரிவு தலைவர்களான அப்துயஃவீல், மஸ்வூது, ஹபீப் என்ற செல்வாக்கு மிக்க மூன்று சகோதரர்களிடம் ஏக இறை கொள்கையை எடுத்துரைத்தார்கள். அச்சகோதரர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஏக இறை கொள்கையை ஏளனம் செய்தனர். பத்து நாள்கள் தங்கி சத்திய நெறியைச் சாற்றியும் ஏற்றிடாத தாயிப் மக்கள் தாஹா நபி (ஸல்) அவர்கள் மக்கா திரும்பும்பொழுது கல்லெறிந்து காயப்படுத்தினார்கள். கல்லடியினால் ஏற்பட்ட காயத்தைத் துடைத்த ஜைது (ரலி) தாயிப் மக்களைச் சபிக்குமாறு வேண்டினர். சாந்த நபி (ஸல்) அவர்கள் அம்மக்கள் பின்னர் திருந்துவர். இவர்கள் திருந்தவில்லை என்றாலும் இவர்களின் பரம்பரை திருந்தும் என்று கூறி மன்னித்தார்கள். தாயிப் ஒரு சிறந்த இஸ்லாமிய நகரமாக பொலிவுடன் விளங்குகிறது. 2015 -இல் என் புனித உம்ரா பயணத்தில் தாயிப் நகரைச் சுற்றிப் பார்த்தேன். சுந்தர நபி (ஸல்) அவர்களின் வாக்குப்படி தாயிப் நகரம் வாகாய் வலிவுடன் வளம் நிறைந்து தொழும் பள்ளிகள் விசாலமாய் விளங்க இலங்கி நிற்கிறது இஸ்லாமிய பெருநகரமாக திருநகரமாக.
மன்னிக்கும் மாண்புடைய மாநபி (ஸல்) அவர்கள் பிறந்த மீலாது நபி 10.11.2019 -இல் கொண்டாடப்படுகிறது. அந்நந்நாளில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இன்னா செய்தாரும் எண்ணி நாணும் வண்ணம் மன்னித்து மாறுபடாது வேறுபடாது ஊறு நேராது உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண் களைய உற்றுழி உதவியது போல நாமும் இயன்றதை முயன்று உதவ உறுதி பூணுவோம். இறுதி தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆசியுடன் இறைவன் அருளைப் பெறுவோம்.
- மு.அ. அபுல் அமீன்