திருமூலர் குருபூஜை

திருமந்திரம் என்னும் பத்தாம் திருமுறையை உலகுக்கு அருளிய திருமூல நாயனார் அவதாரத் தலம் சாத்தனூர்.
திருமூலர் குருபூஜை

திருமந்திரம் என்னும் பத்தாம் திருமுறையை உலகுக்கு அருளிய திருமூல நாயனார் அவதாரத் தலம் சாத்தனூர். தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறைக்குக் கிழக்கே, திருவாவடுதுறைக்குத் தெற்கே, சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது 69 சாத்தனூர் என்று அழைக்கப்படும் இந்தக் கிராமம். இங்கு திருமூலநாயனாருக்கு ஓர் அழகான சிறு கோயில் 2009 -இல் எழுப்பப்பட்டு, தினசரி முறையாக ஆராதனை நடந்து வருவது ஆன்மிக அன்பர்கள் அறிந்ததே.
 2019 -ஆம் ஆண்டு மார்ச் மாதம், மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இவ்வாலயம் புதுப் பொலிவுடன் விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் அசுபதித் திருநாளன்று விசேஷ அபிஷேக ஆராதனைகளுடன் திருமந்திரப் பாராயணமும், சிறப்புச் சொற்பொழிவும் நடந்து வருகின்றன. தவிர, ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேக தினத்தன்று ஸம்வத்ஸர அபிஷேகமும், ஐப்பசி மாதம் அசுபதி நட்சத்திரத் திருநாளன்று குருபூஜை வைபவமும் மிக விமரிசையாக நிறைவேறி வருகின்றன.
 இந்த வருடம், திருமூல நாயனார் குருபூஜை விழா ஐப்பசி மாதம் 25 -ஆம் தேதி, 11.11.2019 திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலையில் கணபதி ஹோமம், திருமூலருக்கான சிறப்பு வேள்வி, அபிஷேகம், விசேஷ அலங்காரம் இவைகளுடன் பேராசிரியர் இரா. கண்ணனின் ஆன்மிக சொற்பொழிவும், அன்னம் பாலித்தலும் நடைபெறும். மாலையில் திருமூலநாயனாரின் உற்சவத்திருமேனி அலங்கார ஊர்தியில் அழைத்துச் செல்லப்படும். வழக்கம்போல், விழாவில் சாத்தனூரை சுற்றியுள்ள திருச்சைவ மடங்களின் ஆதினகர்த்தர்களும், சிவநெறிச் செல்வர்களும் வருகை புரிந்து அருளாசி வழங்க இருக்கிறார்கள்.
 குரு பூஜையில் பங்கேற்பதின் நோக்கம் என்ன? அதனால் என்ன பயன்? என்பதைச் சிறிது சிந்திப்போம்.
 "தெளிவு குருவின் திருமேனி காண்டல்
 தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
 தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
 தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!’
 அன்றாட வாழ்க்கையில் நாம் நிலையான குறிக்கோள் இல்லாமையால் இன்ப துன்பங்களுக்கு இறையாகிச் சுழல்கிறோம். அதிலிருந்து மீண்டு நிலையான பேரின்பத்தை அடைய வேண்டுமானால், நம் அறிவிலே குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்க வேண்டும். அது எப்படி? "கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்க’ என்பார் திருமூலர். நல்லதொரு ஞான குருவைச் சரணடைவதின் மூலமே அது சாத்தியமாகும்.
 குருவை அடைந்த பின் அந்த குருவின் திருவுருவத்தையே சிவனின் திருமேனியாகக் காணுதல், அவரது திருப்பெயரையே திருவைந்தெழுத்தாக எண்ணி எப்போதும் சொல்லுதல், அவரது வார்த்தைகளைக் கேட்டு அதன்படி ஒழுகுதல், அவரது கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்தல் இவைகளைச் செய்தால் உள்ளத்தில் மெய்ப்பொருளைப் பற்றிய தெளிவு ஏற்படும்.
 சாத்தனூர் திருமூலர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதன் மூலம், திருமூலர் கூறும் காண்டல், செப்பல், கேட்டல், சிந்தித்தல் என்ற நான்கு செயல்களிலும் ஒருங்கே பங்கேற்கும் அரியதொரு வாய்ப்பு கிடைக்கும்.
 அன்பர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற்று மகிழுமாறு அன்புடன் அழக்கப்படுகின்றனர். சாத்தனூரில் இயங்கும் திருமூலர் திருமந்திரப் பெருமன்றம் விழா ஏற்பாடுகள் அனைத்தையும் செவ்வனே செய்துள்ளனர்.
 தொடர்புக்கு: 94444 31691 / 98409 29729.
 - த. மகாதேவன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com