புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 33

கி.மு. 586-இல் எருசலேம் தேவாலயமும், நகரமும் பாபிலோன் (இப்போதைய ஈராக்) ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவரால் அழிக்கப்பட்டது.
புண்ணிய பூமியில் புனிதப் பயணம் 33

அலெக்சாண்டர் கட்டுப்பாட்டில் எருசலேம்:
கி.மு. 586-இல் எருசலேம் தேவாலயமும், நகரமும் பாபிலோன் (இப்போதைய ஈராக்) ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவரால் அழிக்கப்பட்டது. யூதர்களும் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டனர். அதன்பிறகு கி.மு. 537-இல் கோரேஸ் என்ற பெர்சிய மன்னரின் கட்டளைபடி, யூதர்கள் தாய் நாடு திரும்பி மீண்டும் எருசலேமின் தேவாலயத்தை கட்ட அனுமதி பெற்றனர் (2 நாளாகமம் 36:22, 23-ஆம் வசனங்கள், எஸ்றா 1:1 முதல் 4 வசனங்கள்).
அதைத் தொடர்ந்து, கிமு 333-இல் அலெக்சாண்டர் இஸ்ரேலை பிடித்து தனது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தார். அப்போது எருசலேம் நகரம், பெர்சிய அரசாட்சியின்கீழ் வந்தது. அலெக்சாண்டருக்கு பின்னர் கி.மு. 323-இல் எகிப்து நாட்டின் முதலாம் பிதோலமி என்பவர் பாலஸ்தீனத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்ரேலை முகமதியர்கள் ஆக்கிரமித்ததில் இருந்து இஸ்ரேலில் முகமதியர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதி பாலஸ்தீனம் என அழைக்கப்படத் தொடங்கியது.
பின்னர் கிமு 198-இல் செலுக்கிய மன்னர் 3-ஆம் அந்தியோக்ஸ் யூதேயாவை (இஸ்ரேல்) வெற்றி பெற்று எருசலேமை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து சிரியாவுக்கு கப்பம் கட்ட செய்தார். அதன்பிறகு மக்கபேயரின் தலைமையில் யூதர்கள், சிரியாவுக்கு எதிராக போரிட்டு சிரியாவை தோற்கடித்தனர். மக்கபேயர்கள் அல்லது ஹஸ்மோனியர்கள் என அழைக்கப்பட்ட மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களால் கிமு 165-இல் எருசலேம் தேவாலயம் புதுப்பிக்கப்பட்டது.
கி.மு. 63-இல் எருசலேம் ரோம ஆட்சியின் கீழ் வந்தது. அதன்பிறகு ஏரோது மன்னர் குடும்பத்தினர் பெரும்பாலான பாலஸ்தீனத்தை ஆண்டு வந்தனர். முதல் ஏரோது கி.மு. 40 முதல் 44-க்கு இடைபட்ட காலத்தில் எருசலேம் தேவாலயம் உள்பட எருசலேமின் பல பகுதிகளை புதுப்பித்து கட்டினார். பாலஸ்தீனம் மீண்டும் ரோமர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது.
அதில் பொந்தியூ பிலாத்து என்பவர் பாலஸ்தீன பகுதியின் ஆளுநராக இருந்தபோது தான் இயேசு கி.பி. 32-ஆம் ஆண்டு நிசான் மாதத்தில் சிலுவையில் அறையப்பட்டார் (யோவான் 19: 1-22-ஆம் வசனங்கள்). யூதர்களின் தொடர் கலகத்தால் ரோமர்கள் கி.பி. 7-ஆம் ஆண்டில் எருசலேமையும், அதில் இருந்த தேவாலயத்தையும் அழித்து தரைமட்டமாக்கினார்கள். கி.பி. 135-இல் பர்கோக்பா என்பவர் தன்னை யூதர்களின் மேசியா என்று அறிவித்துக்கொண்டு ரோமர்களுக்கு எதிராக கலகம் உண்டாக்கினார். இருப்பினும் இது தோல்வியில் முடிந்து எருசலேமில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் முதலாம் கான்ஸ்டன்டைன் காலத்தில் கிறிஸ்தவம் ரோம அரசின் மார்க்கமாக மாறிய பிறகு எருசலேம் உலக கிறிஸ்தவர்களின் புனித நகரமாக மாறியது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் எருசலேமில் உள்ள THE CHURCH OF THE HOLY SEPULCHRE உள்பட பல புனித இடங்கள் எருசலேமிலும், இஸ்ரேல் நாட்டில் பல இடங்களிலும் உருவாக்கப்பட்டன.
கி.பி. 614 முதல் 628 வரையிலான குறுகிய காலகட்டம் தவிர, கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 638- இல் அரேபியர்கள் எருசலேமை பிடிக்கும் காலம் வரை எருசலேம் ரோமர்கள் (பின்னர் பைசாண்டியர்கள்) கட்டுப்பாட்டில் இருந்தது.
சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி: கி.பி. 688 முதல் 691 வரை டூம் ஆப் தி ராக் என்ற மசூதி, எருசலேம் தேவாலயம் இருந்த இடத்தில் அரேபியர்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் 11-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளில் இருந்து எருசலேமுக்கு புனித பயணம் வந்த யூத, கிறிஸ்தவ புனித பயணிகளுக்கு பல்வேறு இடையூறுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கி.பி.1071-இல் துருக்கிய பெர்சியர்கள் எருசலேமை பிடித்தனர்.
அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவம் பலமாக இருந்தது. அப்போது ஐரோப்பிய நாடுகளில் இருந்த கிறிஸ்தவர்கள் சிலுவை வீரர்கள் என்ற பெயரில் புறப்பட்டு வந்து சிலுவைப் போர்கள் நடத்தி கி.பி.1099-இல் எருசலேமை கைப்பற்றினர். இருப்பினும் 1187-இல் சலாதீன் என்ற அரேபிய மன்னர் எருசலேமை பிடித்தார். அதன் பின்னர் அய்யுபிட், மம்லுக் என்பவர்கள் கி.பி.1517 வரை எருசலேமையும், இஸ்ரேலையும் ஆண்டனர். தொடர்ந்து 1517 முதல் 1917-ஆம் ஆண்டு வரை ஒட்டம்மான் பேரரசு எருசலேமை ஆண்டது.
பிரிட்டன் கட்டுப்பாட்டில் எருசலேம்: 
அதன்பிறகு எருசலேம் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. 1923 முதல் 1948-ஆம் ஆண்டு வரை பாலஸ்தீனத்தின் தலைநகராக எருசலேம் இருந்தது. இக்காலத்தில் அரேபியர்கள், எருசலேமில் வாழ்ந்த யூதர்களுக்கு எதிராக கலகம் செய்தனர். 1948-இல் இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் பிரிட்டனால் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டபோது எருசலேம் சர்வதேச நகரமாக ஐ.நா.வின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதை அரேபியர்கள் ஏற்கவில்லை. ஆனால், சுதந்திரம் பெற்ற அடுத்த ஆண்டே 1949-இல் எருசலேமை, ஜோர்தான், இஸ்ரேல் நாடுகள் பங்கிட்டுக்கொண்டன. 1967-இல் நடந்த 6 நாள்கள் போருக்கு பின்னர் எருசலேம், இஸ்ரேலின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த போரின்போது ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின்படி "டூம் ஆப் த ராக்' உள்பட எருசலேமில் உள்ள அனைத்து புனித இடங்களையும் பாதுகாப்பதாக இஸ்ரேல் நாடு உறுதி அளித்தது.
இதன்படி, டூம் ஆப் த ராக் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டிலும், அர்மேனியர்கள் கட்டுப்பட்டில் சில தேவாலயங்களும், யூதர்களின் கட்டுப்பாட்டில் பிற பகுதிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- ஜெபலின் ஜான்
(தொடரும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com