பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

சத்தியத்தைக் கைவிடாதே, எப்போதும் உற்சாகத்துடன் இரு. "பிறவியும் மூப்பும் மரணமும் உனக்கு இயல்பானவையாகும்' என்பதை நினைத்து பணிவுடன் நடந்துகொள்
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

• இறைவனை நாடுபவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும், எதிலும் அதிகப்பற்று வைக்கக் கூடாது. அவர்கள் இறைவனை வழிபடுவதிலிருந்து தவறக் கூடாது. "நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாம் அழியக் கூடியவை; அது போலவே நாம் பார்க்காத சொர்க்கம் போன்ற உலகங்களும் அழிவுள்ளவையாகும்' என்பதை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள்.
- உத்தவ கீதை
• சத்தியத்தைக் கைவிடாதே, எப்போதும் உற்சாகத்துடன் இரு. "பிறவியும் மூப்பும் மரணமும் உனக்கு இயல்பானவையாகும்' என்பதை நினைத்து பணிவுடன் நடந்துகொள். உலகியல் ஆசைகளில் உழலும் மனிதர்களிடம் அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் கொள்ளாதே. 
- ஸ்ரீ ராமபிரான்
• பாற்கடலைக் கடைந்தபோது தேவர்கள் தாங்கள் அடைந்த ரத்தினங்களால் திருப்தியடைந்துவிடவில்லை, கொடிய விஷத்தால் பயமடையவில்லை; அமுதத்தை அடையும் வரையில் அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடவில்லை. அதுபோல் ஒரு நிச்சயமான நோக்கமுடைய தீரர்கள் அதை அடையும் வரையில் ஓய்வதில்லை.
- பர்துருஹரியின் நீதி சதகம்
• பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும். 
- சுவாமி விவேகானந்தர்
• நெடுங்காலம் தொடர்ந்துவரும் பிறப்பு, இறப்பு என்ற நோய்க்கு "நான் யார்? பிறப்பு, இறப்பு என்ற சுழல் யாருக்கு ஏற்படுகிறது?' என்னும் ஆத்மாவைப் பற்றிய ஆராய்ச்சியே (ஆத்ம விச்சாரமே) நல்ல மருந்தாகும்.
- வசிஷ்டர் (யோகவாஷிட்ட சாரம்) 
• ராமபக்தியை பெற்றால் போதும், வேறு எதுவுமே வேண்டியதில்லை. என் பக்தனுக்கு ஞானமும் உலகப்பற்றின்மையும் தானாகவே வந்து சேரும். இது ரிஷிகளின் வாக்காகும். 
- ஸ்ரீ ராமபிரான்
• சுகம் வந்தாலும் சரி, துக்கம் வந்தாலும் சரி, மனம் சலனமடையாமல் இருப்பதற்குத் தைரியம் என்று பெயர். தங்கள் மேன்மையை விரும்பும் புத்திசாலிகள் எப்பொழுதும் தைரியத்துடன் இருக்க வேண்டும்.
- மகாபாரதம்
• சிலர் ஆத்மாவை உள்ளத்தில் தியானத்தின் மூலம் அனுபூதியில் உணர்கிறார்கள். வேறு சிலர் ஞானயோகத்தின் மூலமும், மற்றும் சிலர் கர்மயோகத்தின் மூலமும் ஆத்மாவை அனுபூதியில் உணர்கிறார்கள்.
- ஸ்ரீ கிருஷ்ணன்
• தீமை செய்யாமை, நன்மைகளையே செய்தல், அன்பும் அருளும் கொள்ளுதல், உண்மையும் தூய்மையும் உடைமையாதல் போன்றவையே மதமாகும்.
- புத்தர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com