ராமாபுரத்தில் சிறுவரம்பூர் திருவேங்கடவன்!

தஞ்சையில் பள்ளி ஏரியையும், லக்ஷ்மிராஜபுர அக்ரஹாரத்தையும் இணைக்கின்ற பெருவழிச்சாலைப் பேருந்து நிறுத்தத்திற்குப் பெயராக அமைந்ததுதான் பள்ளியக்ரஹாரம்.
ராமாபுரத்தில் சிறுவரம்பூர் திருவேங்கடவன்!

தஞ்சையில் பள்ளி ஏரியையும், லக்ஷ்மிராஜபுர அக்ரஹாரத்தையும் இணைக்கின்ற பெருவழிச்சாலைப் பேருந்து நிறுத்தத்திற்குப் பெயராக அமைந்ததுதான் பள்ளியக்ரஹாரம். தஞ்சை - கும்பகோணம் சாலையில் பள்ளியக்ரஹாரத்திற்கும் நிடாருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது ராமாபுரம் என்கிற சிறுவரம்பூர்.
 சிறுவரம்பூர்: சிறுவரம்பூர் சோழர்காலப் பழைமையை கொண்டுள்ள சிற்றூர்! இவ்வூர் 1539 -ஆம் ஆண்டு நாயக்கர் ஆட்சிக்காலத்தில் சிறுவிரம்பூர் எனவும், மராட்டியர் ஆட்சிக்காலங்களில் முறையே 1732, 1735 -ஆம் ஆண்டுகளில் செர்பெரம்பூர், சிறுபிரம்பூர் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. 1828 -ஆம் ஆண்டு நில அளவு செய்த காலத்தில் இவ்வூர் ராமாபுரம் என்று குறிக்கப்பெற்றுள்ளது. எனவே இந்த ஊரின் பெயர் மாற்றம் 1735-1828 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். இந்த ஆய்விற்கு "ராமாபுரம்' ஸ்ரீ வேங்கடாசலபதிப்பெருமாளின் விக்கிரஹபீடத்தில் காணப்பெறும் எழுத்துப்பொறிப்பும் அடிப்படைச் சான்றாகின்றது.
 வரலாறு கூறும் வேங்கடவன்: ராமாபுரம் என்பது தஞ்சை மாவட்டம், தஞ்சாவூர் வட்டத்தில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். அங்கு ஸ்ரீ வேங்கடாசலபதி ஆலயம் உள்ளது. கோயிலுக்கு வெளியே விசாலமான புஷ்கரணியும் உண்டு. இத்திருக்கோயிலில் கருவறை மற்றும் புறப்பாடு கண்டருளும் மூர்த்திகள் திருமகள், மண்மகள் புடைசூழ நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். கருவறை விமானத்துடன் அர்த்தமண்டப, முகமண்டபாதிகளும் அமைந்து விளங்குகின்றன.
 கருடபகவான் எங்குமே காணக்கிடைக்காத நிலையில் பறவையின் கால்கள் போலவே வடிவமைக்கப்பெற்று நின்ற நிலையில் சிலாபேரமாகக் காட்சி தருகிறார். மிகப்பழங்காலத்தைப் பறைசாற்றி நிற்கும் சிலாபேரத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருகின்றனர். இவ்வூருக்கு அருகாமையிலே நரசநாயக்கபுரம் பெரியதிருக்குளத்தின் கரையில் அமைந்த ஸ்ரீதேவி பூமிதேவி உடனுறை வயலூர் வரதராஜர் கோயிலும் அமைந்துள்ளது போற்றத் தக்கதாகும்.
 உற்சவமூர்த்தி பீடத்தில் எழுத்துகள்: ராமாபுரம் உற்சவமூர்த்தி வேங்கடாசலபதியின் பீடத்தில் மட்டும் "சிறுவிரமபூகி வெஙகடாசலபதி' என எழுதப்பட்டுள்ளது. இச் சிற்பத்திலுள்ள எழுத்துகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி இல்லை. ரகரத்திற்கும் நெடிலிற்கும் வேறுபாடும் தெரிவதில்லை. பகரத்தையும், வகரத்தையும் மிகச் சிரமப்பட்டுதான் புரிந்துகொள்ள முடிகிறது. தஞ்சையில் சோழர் ஆட்சி இறுதிநிலைக்கு வந்ததற்கும், நாயக்கர் ஆட்சி தோன்றுதலுக்கும் வரலாறு ஒன்று கூறப்படுகிறது.

 நூல் ஆதாரம்: சாளுவநரசிம்மன் தெற்கேயுள்ள சோழதேசத்தின் மீது படையெடுத்து வந்தான். அப்போது அவனுக்கு உதவிபுரிந்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் நால்வராவர். ஆரவீடிபுக்கர், அவரது புதல்வர் ராமன், ஈச்வரநாயக்கர் மற்றும் அவருடைய மகன் நரசநாயக்கர் ஆகியோர். தென்திசை வந்த நரசநாயக்கர் காவிரிக்கரையில் காத்திருந்தார். எதிரியான சோழமன்னனும் நரசநாயக்கரின் அறிவுரையை கேட்கவில்லை. ஆதலால் சோழ மன்னருடன் போருக்கு ஆயத்தமானார். கடும்போர் நடக்கிறது. போரில் நரசநாயக்கர் சோழமன்னரைச் சிறைபிடித்துத் தலைநகருள் புகுகின்றார்' என்றசெய்தி Sourceses of  Vijayanagar History என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 அந்நூலின் அடிக்குறிப்பில் "யார் இந்த சோழன்? அவனது தலைநகரம் எங்கு அமைக்கப்பட்டது? என்பதை யாம் அறிகின்றிலோம்' என்றும், "எப்படியாயினும் தஞ்சாவூரில் இருந்தவனாய் பல சோழ மாவட்டங்களை ஆட்சிபுரிந்த தலைவன் என்பது மட்டும் புலனாகிறது' என்கிறார் இந்நூலாசிரியர்.
 கி.பி.1496 -இல் கோனேரிமை கொண்டான் எனப்பெயர் கொண்ட கோனேட்டி ராஜ சோழன் தஞ்சையை ஆட்சி செய்துள்ளான்' என்றும், இந்த கால கட்டத்தில் "விஜயநகர நாயக்கமன்னன் நரசநாயக்கன் என்பவன் மதுரை, திருச்சி, தஞ்சையை வென்று விஜயநகர அரசிற்கு திறைகட்டுமாறு செய்தான்' என்பதாகவும் "தஞ்சை மன்னரும் சரசுவதி மகால் நூலகமும்' என்ற நூல் குறிப்பிடுகின்றது. எனவே கி.பி. 1535 - வரையிலான வீரசேகர சோழ மன்னனின் ஆட்சியோடு தஞ்சையில் சோழமன்னர்களின் ஆட்சி நிறைவினைத் தழுவியது என்பதனையும் அந்நூல் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றது.
 போரில் வெற்றிவாகை சூடியதால் ராமராயர் மற்றும் நரசநாயக்கர் ஆகியோர்களின் பெயரால் "ராமாபுரம்', "நரசநாயக்கபுரம்' என்று சிறுவரம்பூர் பெயர் மாற்றம் பெற்றிருக்கலாம் என்றும் எண்ணத்தோன்றுகிறது. இத்தகைய செய்திகளை தஞ்சை சரசுவதிமகால் நூலக வெளியீடான "தலவரலாற்று ஆய்வுக்கட்டுரைகள்' என்னும் நூலில் விரிவாக அறியலாம்.
 - முனைவர் அ. வீரராகவன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com