கார்த்திகையில் நேர்த்தியான விரதம்!

மனிதப் பிறவு என்பது புனிதம் வாய்ந்தது. எனவேதான் "மானிடராதல் அரிது' என்று சொன்னார்கள். அதிலும் எந்தவிதமான உடல் குறைகளோ அன்றி மனக்குறைகளோ இல்லாமல் வாழ்வது
கார்த்திகையில் நேர்த்தியான விரதம்!

மனிதப் பிறவு என்பது புனிதம் வாய்ந்தது. எனவேதான் "மானிடராதல் அரிது' என்று சொன்னார்கள். அதிலும் எந்தவிதமான உடல் குறைகளோ அன்றி மனக்குறைகளோ இல்லாமல் வாழ்வது என்பது மேலானது. இத்தகைய மனிதப்பிறவியில்தான் மனிதன் தன்னுள் இருக்கின்ற அளப்பறிய இறை ஆற்றலை உணர்ந்து இறைவனை அறிந்து இறைவனின் நிலையை அடைகின்றான். எனவேதான் வள்ளுவரும் கூட இங்கே வாழ்வாங்கு வாழ்பவன், அதாவது முன்னோர்கள் வகுத்த நெறியின் வண்ணம் அறநிலை தவறாது வாழ்ந்தானேயாகில் அவன் விண்ணில் உறைகின்ற தெய்வத்திற்கு ஒப்பாகக் கருதப்படுவார்கள் என்று கூறினார்.
சரியான வழியில் புலன்களை ஒழுங்குபடுத்தி சிறந்தோங்கி வாழ பெரிதும் உதவுவது சபரிமலை புனிதயாத்திரை ஆகும். இந்த யாத்திரையை மேற்கொள்வதற்காக கார்த்திகை முதல் நாள் இவ்வாண்டு, 17.11.19 -இல் தொடங்கி மார்கழி பதினெட்டாம் நாள் வரை ஒரு மண்டலம் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருப்பது வழக்கம். மாலையை போட்டுக்கொண்டால் காலையில் சீக்கிரம் துயில் எழுதல், இருவேளை குளித்தல், இருவேளை வழிபாடு செய்தல், சைவ உணவுகளை உண்ணுதல், போதைப் பொருட்களைத் தவிர்த்தல், பிரம்மச்சர்ய விரதம் இருத்தல் போன்ற கட்டுப்பாடுகளைத் தானே விதித்துக் கொள்வதால், பக்தர்கள் கூட்டம் அப்பொழுதே (ஐயப்ப) "சாமி' என்று அழைக்கத் தொடங்கி விடுகின்றது.
இவ்வாறு பல ஆண்டுகள் ஒருவன் சபரிமலைக்குப் பயணப்படும் பொழுது அவன் பரிபூரண நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் ஐயப்பன் பேரருளால் உருவாகின்றது. மேலும் குரு தத்துவம் சபரிமலை யாத்திரையின் முன் வைக்கப்படுகின்றது. குருவின் வழிகாட்டுதலோடு பக்தி செய்தல், அவர் வழி காட்டுதலோடு சேவை செய்தல், பல்வேறு குணநலன்கள் கொண்டவர்களோடு இணங்கி வாழப்பழகுதல், அவர்களைத் தன் உறவினர்களாக நண்பர்களாகப் பாவித்து அன்பைப் பெருக்குதல் ஆகிய நன்மைகளும் வந்து சேர்கின்றன.
ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள். அது என்ன 48 நாள்கள்? ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்), 27, நட்சத்திரங்கள், 12 ராசிகள் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்தே மண்டலம் ஆகும். இந்த உலகில் உள்ள எல்லா மனிதர்களும், ஏன் எல்லா உயிரினங்களுமே இந்த அமைப்பிற்குள் அடங்கி விடுகின்றன. எனவே நாற்பத்தெட்டு நாள்கள் விரதம் என்பது நமக்கு எல்லா வகையிலும் நன்மையை அள்ளி வழங்குகின்றது. ஆயின் தற்போது 48 நாள்கள் முறைப்படியான விரதம் என்பது குறைந்து நினைத்தபடி 10 நாள்கள், ஒரு வாரம் போதும் என்றெல்லாம் தீர்மானித்து சபரிமலை யாத்திரை மேற்கொள்வது நடைமுறையாகி வருகின்றது.
ஒரு மண்டல விரதம் என்பது உடல் நலம், மன நலம், பக்தி நலம் ஆகிய செல்வங்களை நமக்கு ஒருங்கே வழங்குகின்றன என்பதால் அந்த விரத நியமங்களில் எந்தவிதமான தளர்வோ, சமாதானமோ செய்து கொள்ளுவது ஏற்புடையது அல்ல. முறைப்படி விரதமிருந்து, இரு முடி தாங்கி, பதினெட்டாம் படியை கடந்து வரும் ஒவ்வொரு பக்தனையும் ஐயப்பன் பார்க்கின்றார். அருள்பொழிகின்றார் என்பதே உண்மை!
மொத்தத்தில் எல்லாவற்றையும் ஒதுக்கி, உப்பு, புளி, காரம் இவற்றைக் குறைத்து அளவோடு சாப்பிட்டு, குறைந்தநேரமே தூங்கி எழுந்து, சரண கோஷமிட்டு, கூட்டு வழிபாடுகளில் கலந்து கொண்டு, தாமரை இலைமேல் தண்ணீர் போல "பற்றுக பற்றற்றான் பற்றினை' என்ற வள்ளுவர் மொழிக்கேற்ப வாழ்ந்து, காட்ட வேண்டும். "உள்ளமே கோயில், மனச்சாட்சிக்கு மேலான தெய்வமில்லை' என்று மனச்சாட்சிக்கு பயந்து நடந்து வாழ வேண்டும்.
இப்படி விரதமிருந்தால் இறைவனின் தரிசனமும், திருவருளும், முழுமையாகக் கிட்டும் (இவ்வாண்டு சபரிமலை சன்னிதானத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்படும் நாள்: 16.11.19 ).
"சுவாமியே சரணம் ஐயப்பா'
- இலக்கியமேகம். ந. ஸ்ரீநிவாஸன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com