திருவேள்விக்குடியில் நிகழ்ந்த தெய்வீகத் திருமணம்!

பரமேஸ்வரனும் பரந்தாமனும் சொக்கட்டான் ஆடுகின்றனர்...! அதற்கு பார்வதிதேவி நடுவர். ஒரு பெரிய அரங்கம்.
திருவேள்விக்குடியில் நிகழ்ந்த தெய்வீகத் திருமணம்!

பரமேஸ்வரனும் பரந்தாமனும் சொக்கட்டான் ஆடுகின்றனர்...! அதற்கு பார்வதிதேவி நடுவர். ஒரு பெரிய அரங்கம்... தேவர்கள் எல்லோரும் இவர்களின் ஆட்டத்தைப் பார்க்கக் கூடினர். ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் பரமேஸ்வரனுக்கும் பரந்தாமனுக்கும் விவாதம் எழுந்தது. நடுவரான அம்பிகையின் தீர்ப்பு அண்ணனாகிய பரந்தாமனுக்கு சாதகமாக இருக்க, பரமேஸ்வரனுக்கு வந்ததே கோபம்! அம்பிகைக்கு சாபம் கொடுத்து விட்டார்.
 சாபத்தின் பலன் அம்பிகை அழகிய பசுவானாள். அம்பிகை, ஈஸ்வரனிடம் தான் எப்பொழுது பசு உருவம் நீங்கி மீண்டும் தங்களை அடையமுடியும் என்று கேட்க, ஈசனும் விரைவில் அம்பிகையின் சாபம் நீங்கி ஏற்றுக் கொள்வதாக வாக்களிக்க, அம்பிகையும் பசுவாகத் தன் பயணத்தைத் தொடங்கினாள்.
 அம்பிகைக்குத் துணையாய் அலைமகளும், கலைமகளும் மற்ற தெய்வப் பெண்டிரும் பசு வடிவு கொண்டு அம்பிகையுடன் வந்தனர். திருமால், தானும் அம்பிகையுடன் பாதுகாவலனாக எழுந்தருளினார்.
 இவ்வாறு பசுவாக அம்பிகை சாபம் பெற்ற தலம் தேரழுந்தூர் எனப்படுகிறது. இத் திருத்தலம் நாகை மாவட்டம் குத்தாலத்திற்கருகில் உள்ளது. இத்தல பெருமான் வேதபுரீஸ்வரர், அம்பிகை செளந்தர்யநாயகி. சொக்கட்டான் மண்டபம் இன்றும் இத்தலத்தில் உள்ளது.
 பசுவாக மாறிய அம்பிகை, ஒரு காட்டு வழியாக வரும்பொழுது, அவளது குளம்புகள் ஒரு புற்றில் இருந்த சிவலிங்கத் திருமேனி மீது படிந்தன. இத்திருத்தலமே திருக்கோளம்பியம் ஆகும்.
 இங்கு கருவறையில் சிவலிங்கத்தின் மீது பசுவின் குளம்படிகளை இன்றும் காணலாம். இறைவன் கோகிலேஸ்வரர் என்றும், அம்பிகை அழகமர்நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பின்னர், திருவாவடுதுறையில் அவளது பசு வடிவை நீக்கி, இறையுருவை அளித்தார் ஈசன்.
 பசுவாக இருந்து சாப விமோசனம் பெற்ற அம்பிகை, ஈசனை திருமணம் செய்து கொள்ள விரும்பி ஈசனை வேண்டினாள். அச்சமயத்தில் குத்தாலத்தில் பரத மகரிஷி தன் மனைவி சுபத்திரையுடன் அம்பிகையை மகளாகப் பெற நீண்ட தவம் செய்து கொண்டிருந்தார். சிவபெருமான், அம்பிகையை பரத மகரிஷிக்கு மகளாக பிறக்குமாறும், தக்க சமயத்தில் வந்து தாம் திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
 அம்பிகை, பரத மகரிஷி ஆற்றிவரும் யாகத்தில் குழந்தையாகத் தோன்றினாள். முனிவரும் அவர் மனைவியும் மிகவும் மகிழ்ந்து குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்தனர். அவளுக்குத் திருமணப் பருவம் வந்தபோது, இறைவனை மணக்க வேண்டி விரதம் இருக்கத் தொடங்கினாள். பதினாறு திங்கள்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து, மண்ணில் லிங்கம் பிடித்து வைத்து, சிவபூஜை செய்தாள். அந்த லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டார் இறைவன். அம்பிகை, "தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ தன்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று வேண்டினாள். ஈசனும் சம்மதம் தெரிவித்து அதன்படியே நடந்துகொண்டதால் இறைவனின் திருநாமம் "சொன்னவாரறிவார்' என்றாயிற்று.
 திருமணத்திற்கு அம்பிகையின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, சிவபெருமானும் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார். திருமணத்திற்கு நல்ல நாள் குறிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளன்று அதிகாலையில் சிவபெருமான் கயிலையில் உள்ள பொய்கையில் மூழ்கி எழ, அவரது ஆண்டிக் கோலம் மாறி, பல்வேறு ஆபரணங்களையும் பட்டு பீதாம்பரம் உடுத்திய சக்ரவர்த்தித் திருமகனாக காட்சியளித்தார். தேவர்கள் அவருடைய திருக்காட்சியைக் கண்டு ஆனந்தித்தனர்.
 ரிஷப வாகனத்தில் கிளம்பிய சிவபெருமானைத் தொடர்ந்து அனைத்து தேவர்களும் பூவுலகம் கிளம்பினர். வேத கோஷம் முழங்க, சகல வாத்தியங்களும் இசைக்க, கணபதி, முருகன், பிரும்மா, விஷ்ணு, இந்திராதி தேவர்கள், அஷ்ட திக் பாலகர்கள், நட்சத்திர தேவர்கள், பஞ்சபூத தேவர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், யட்சர்கள், கிம்புருடர்கள், அச்வினி தேவர்கள், சகல புவனங்களின் அதிபதிகள், எல்லோரும் தங்கள் மனைவிகளுடன் தங்களுக்குரிய வாகனங்களில் ஏறிக் கொண்டு பூவுலகம் வந்தனர்.
 நாஸ்வரம், மத்தளம், புல்லாங்குழல், போன்ற பல்வேறு வாத்தியங்கள் முழங்க, வேத கோஷம் ஒலிக்க, அரம்பையர் ஆடிப் பாட, தேவ கணங்களும், சிவனாரின் பூதகணங்களும் புடைசூழ, புறப்பட்ட ஊர்வலம், காவிரியின் கரையில் அமைந்துள்ள திருத்துருத்தியை வந்தடைந்தது.
 அங்கு, ஓர் உத்தால மரத்தடியிலேயே ஈசன் தங்கினார். இந்த உத்தால மரம் வேறு எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்தாலம் என்ற பெயரே பின்னர் குத்தாலம் என மாறியது என்பர். இத்தலத்தில் தைமாதம் திருக்கல்யாண விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 ஈசன் மறுநாள், பொழுது புலர்ந்ததும், நீராடி, மங்கல அணிகலன்கள் பூண்டு, தேவரும் மற்றவர்களும் புடைசூழ, திருமண மண்பத்திற்கு எழுந்தருளினார். அம்பிகையை அவள் தோழியர் மங்கல நீராட்டி, நல்லாடைகளும், ஆபரணங்களும் அணிவித்து அவளுக்கு நறுஞ்சாந்து இளமுலையாள் என்று நாமகரணம் செய்து மணப்பந்தலுக்கு அழைத்து வந்து, ஈசனின் வலப்பக்கத்தில் அமரச் செய்தனர்.
 பிரம்ம தேவன் திருமண வேள்வியைத் தொடங்கினார். பரத முனிவர் தன் மனைவியுடன் மணமேடைக்கு வந்து, அம்பிகையின் திருக்கரத்தை ஈசனின் திருக்கரத்தின் மீது வைத்து, தாரை வார்த்துக் கொடுத்தனர். சிவபெருமான் அம்பிகையின் திருக்கழுத்தில் மங்கலநாணை அணிவித்தார். திருமணம் இனிதே நிறைவுற, ஈசனிடம், முனிவரும் அவர் மனைவியும், திருமணக்கோலத்துடன் இத்தலத்தில் எழுந்தருள வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, ஈசனும் சம்மதம் தெரிவித்தார்.
 குத்தாலத்திற்கு வடக்கில் காவிரியின் வட கரையில் அமைந்துள்ள திருத்தலம் தான் திருவேள்விக்குடி. இத்தலத்தில் ஈசன் மணவாளேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், அம்பிகை பரிமளசுகந்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். பரத முனிவரின் யாகசாலை (வேள்விக்குண்டம்) இருந்த இடம் திருவேள்விக்குடி ஆகும். அம்பிகையின் திருமண வேள்வியும் இங்கேயே நடைபெற்றதாகவும், திருமணம் நல்ல முறையில் நடைபெற வேண்டி விரதம் இருந்து கங்கணம் அணிவிக்கப்பெற்ற இடமும் இதுவே என்றும்; இறைவனே வேள்விகள் முடித்து இறைவியை மணந்து கொண்ட தலமாதலாலும் இத்தலம், "திருவேள்விக்குடி' என்று அழைக்கப்படுகிறது.
 திருவேள்விக்குடிக்கு வடக்கில் சுமார் 1 கி.மீ. தொலைவில் திருமணஞ்சேரி அமைந்துள்ளது . இங்குதான் ஈசனின் திருமணம் நடைபெற்றதாக இத்தலபுராணம் கூறுகிறது. திருமணஞ்சேரியின் மேற்குப் பகுதியில் உள்ளது எதிர்கொள்பாடியாகும். இத்தலத்தை மேலைத் திருமணஞ்சேரி என்றும் அழைப்பர். திருமணத்திற்கு வந்த ஈசனை இங்குதான் எதிர்கொண்டழைத்ததாக இத்தலபுராணம் கூறுகிறது.
 தகுந்த காலத்தில் திருமணம் நடைபெறாமல் போனாலும், திருமணத்திற்கு தடைகள் இருந்தாலும், திருத்துருத்தி (குத்தாலம்), திருவேள்விக்குடி மற்றும் திருமணஞ்சேரியில் எழுந்தருளியுள்ள இறைவனையும் இறைவியையும் பூஜிக்க, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
 - ரஞ்சனா பாலசுப்ரமணியன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com